தல்ஸ்தோயின் கலைநோக்கு

அன்புள்ள ஜெயமோகன்,

டால்ஸ்டாயுடைய ‘what is art’ http://www.archive.org/details/whatisart00tolsuoft படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.  ஒரு எழுத்தாளராக அந்தக் கட்டுரையை நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள்  என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

ஓப்லா விஸ்வேஷ்

அன்புள்ள ஓப்லா விஸ்வேஷ்,

நலமா?

இந்நூல் என் நூலகத்தில் உள்ளது. சிலபகுதிகளை நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நினைவில் இருந்து எழுதுகிறேன்.

தல்ஸ்தோயின் கலைக்கும்,கலை பற்றிய அவரது கருத்துக்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. கலைஞனாக அவர் தன் உள்ளுணர்வைப் பின்பற்றிச் சென்றவர். ஆகவே முற்போக்கானவர்.

ஆனால் சிந்தனையாளனாக அவர் இரு அடிப்படைவாதங்கள் கொண்டிருந்தார். ஒன்று ருஷ்ய தேசிய வெறி. இன்னொன்று ஒழுக்கவியல் வெறி.

ஒழுக்கவியலை இலக்கியத்துக்கான நிபந்தனையாகப் பல இடங்களில் அவர் சொல்வதைக் காணமுடியும். ஆனால் அவரது ஆக்கங்கள் அந்த நிபந்தனைக்குள் நிற்பதில்லை. ஒழுக்கத்தை உபதேசிக்கவே அவர் அன்னா கரீனினா போன்ற ஆக்கங்களை எழுதினார். ஆனால் அவை ஒழுக்கத்தை விட மானுட அகம் அன்பை நோக்கிச் செல்லும் உத்வேகத்தையே சித்தரித்துக்காட்டின.

பொதுவாக இசையைத் தல்ஸ்தோய் நிராகரித்தார். எந்தக் காரணமும் இல்லாமல் அது அந்த இசையை உருவாக்கியவனின் மனநிலையைக் கேட்பவனுக்குத் தொற்றவைக்கிறது என்றார். இந்தத் தொற்றவைத்தலைப் பற்றி நிறையவே அவர் பேசுகிறார். இலக்கியம் அதன் மொழியின் அழகியல்நுட்பங்கள் மூலம் ஆசிரியனின் அதே மனநிலையை நோக்கி வாசகனைக் கொண்டுசென்று ஒன்றச்செய்கிறது. அவனுடைய மனநிலையை வாசகனில் தொற்றவைக்கிறது

அந்நிலையில் அப்படைப்பு சிறந்தது என வாசகன் நினைப்பான். ஆனால் அது அந்தப் படைப்பு சிறந்தது என்பதற்கான காரணம் அல்ல. அப்படி ஒன்றவைப்பதன் மூலம் அப்படைப்பு வாசகனுக்கு எதை அளிக்கிறது என்பது முக்கியம். அவனை மெய்மை நோக்கி, விவேகம் நோக்கி அதுகொண்டு செல்லவில்லை என்றால் அந்த ஒன்றுதல் அபாயகரமானது, வீணானது என்கிறார்.

இன்றும்கூட நம் மார்க்ஸியர்களில் ஒருசாரார் இதைச்  சொல்லிக்கொண்டிருப்பதைக் காணலாம். நல்ல கலைப்படைப்புகளை நோக்கி வாசகர்கள் ஈர்க்கப்படுகையில் அதன் கலை,அதில் இருக்கும் உண்மை இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து அது ‘உயரிய கலை ஆனால் மோசமான உண்மை’ கொண்டது என்று காட்ட அவர்கள் முயல்கிறார்கள்.

இது ஒரு செயற்கையான பிரிவினை. ஒரு முதிர்ச்சியான இலக்கிய வாசகன் வெறும் அழகுணர்ச்சியால், வெறும் உணர்வெழுச்சியால்  மட்டும் இலக்கிய ஆக்கத்தை வாசிப்பதில்லை. அவனுள் இருக்கும் நீதியுணர்வும்,யதார்த்தப்பிரக்ஞையும் சேர்ந்தே அந்த வாசிப்பை நிகழ்த்துகின்றன.அந்த வாசிப்பை நிகழ்த்துவது எது என அப்படிப் பிரித்துக்கொள்ள முடியாது. அழகுணர்வும், உணர்ச்சிகரமும், நீதியுணர்வும் ஒன்றுடன் ஒன்று கலந்தே செயல்படுகின்றன. ஒன்றை ஒன்று  நிரப்புகின்றன, வளர்க்கின்றன. ஒன்று நிறைவடையவில்லை என்றாலும் அவனால் அப்படைப்பை நேசிக்கமுடியாது.

ஓர் ஆக்கத்தை வாசிக்கையில் நாம் நம் அழகுணர்வால் அதை அனுபவமாக ஆக்கிக்கொள்கிறோம். உணர்ச்சிகரத்தால் அதனுடன் ஒன்றுகிறோம். நம் நீதியுணர்வால் அதை ஏற்றுக்கொள்கிறோம். நீதியுணர்ச்சி ஒருவேளை நம்மால் தர்க்கபூர்வமாக உணரப்படாமல் இருக்கலாம். ஆனால் அது அங்கே செயல்படும். ‘நெஞ்சைத் தொட்ட ஆக்கம்’, ‘மனசாட்சியை உலுக்கும் படைப்பு’ என அதையே சொல்கிறோம்.

நம் நீதியுணர்ச்சிக்கு ஒவ்வாத, ஆனால் நம் அகத்தைத் தீண்டி உலுக்கிய ஓரு இலக்கிய ஆக்கம் உண்டா என்ன? தல்ஸ்தோய்,அவர் தனிவாழ்க்கையில் நம்பிய பழமையான ஒழுக்கவியல் கருத்துக்களை முன்வைக்க செயற்கையாக இந்தப் பிரிவினையைச் செய்கிறார். ஒழுக்கவியல் நீதியுணர்ச்சியுடன் நேரடியான  தொடர்புடையது அல்ல. அன்னா தன் கணவன் கரீனினை உதறி விராட்ஸ்கியுடன் சென்றது ஒழுக்க மீறல். ஆனால் அதை நம் மனசாட்சி ஏற்றுக்கொள்கிறது.

நித்யா

’அழகான தீமை’ என்ற கிறித்தவக்கருதுகோளில் தல்ஸ்தோய் அபாரமான நம்பிக்கை கொண்டிருந்தார். ‘அழகானவற்றை நன்மை தருவன என நம்புவதே மானுடனின் ஆகப்பெரிய மாயை’ என்பது தாத்தாவின் பொன்மொழி. இந்நூலில் வரும் அந்தக்கூற்றைப்பற்றி நான் நித்ய சைதன்ய யதியுடனான என் பேட்டியில் கேட்டிருக்கிறேன். அவர் விரிவாகப் பதில் சொல்லியிருக்கிறார் [ இலக்கிய உரையாடல்கள், எனி இண்டியன் பிரசுரம், காலச்சுவடு பேட்டிகள்- பகுதி ஒன்று ஆகிய நூல்களில் அப்பேட்டி உள்ளது]

நித்யா அதை ஒரு கிறித்தவ இறையியல் கருத்து என்று எளிதாக ஒதுக்கிவிடுகிறார். அதன் மூல ஆசிரியர் செயிண்ட் தாமஸ் அக்வினாஸ். அதன் இலக்கிய மூலம்,தாந்தேயின் டிவைன் காமெடி. இந்திய மெய்ஞ்ஞானம் ‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற தரிசனத்தையே முன்வைக்கிறது. ‘ உண்மை, ஒழுங்கு , அழகு’ மூன்றுமே ஒன்றின் மூன்று பக்கங்கள்தான்.ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரிக்கமுடியாது என்கிறார் நித்யா.

அதேபோல உணர்ச்சிகரமான உத்வேகத்தை தல்ஸ்தோய்  ஐயப்படுகிறார். அது செயற்கையானது, நாடகத்தனமானது என நினைக்கிறார். ஆகவே அவரால் தஸ்தயேவ்ஸ்கியையும் ஷேக்ஸ்பியரையும் ஏற்கமுடியவில்லை. அவர் முன்வைக்கும் கலையானது முற்றிய லௌகீக யதார்த்தபோதம் கொண்டதாக இருக்கும். உத்வேகம் அந்த யதார்த்தபோதத்தை உதறியே வெளிப்படமுடியும் என்கிறார்.

ஆனால் அந்த உத்வேகம் மொழியைச் சந்திக்கும்போது ஆழ்மனத்துக்குள் செல்லும் பயணம் சாத்தியமாகிறது என்பது உலக இலக்கியம் காட்டும் உண்மை. தல்ஸ்தோயின் கருத்தை விதியாக்கினால் உலகின் முக்கியமான  கவிஞர்களை எல்லாம் தூக்கித் தூரவீசவேண்டியிருக்கும். கம்பனையே நிராகரிக்கவேண்டியிருக்கும். யதார்த்தபோதம் எப்போதுமே உத்வேகத்துக்கும் கவித்துவத்துக்கும் எதிரி. அதில் ஏறிக்கொண்டு உயர்கவித்துவத்தை அடைய தல்ஸ்தோயால் மட்டுமே முடிந்தது.தல்ஸ்தோயின் இலக்கியக்கருத்துக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால்,இந்நூல் எனக்கு முக்கியமானதாக இருந்தது. நவீனத்துவ காலகட்டத்தில் இலக்கியத்தின் ஆன்மீகநாட்டம், முழுமையான உண்மை நோக்கிய அதன் தேடல், நிராகரிக்கப்பட்டது. இலக்கியமென்பது வெறுமே உணர்ச்சிகளையும்,மானுட இக்கட்டுகளையும் சொல்லி நின்றால்போதும் என்ற நிலை இருந்தது. இலக்கிய ஆக்கங்களை அதன் வடிவ நேர்த்தி, மொழிநுண்மை ஆகியவற்றை மட்டுமே வைத்து அளக்கக்கூடிய மரபு இருந்தது. க.நா.சு அதன் தொடக்கம். சுந்தர ராமசாமி அதன் உச்சம்

அந்தக் காலகட்டத்தில் வாசிக்க ஆரம்பித்தவன் நான். ஆன்மீக விடுதலைக்கான சாதனமாக, மெய்மையைத் தொட்டறியும் கருவியாக இலக்கியத்தைக் காணும் நோக்கை எனக்கு அளித்தவை இரு நூல்கள். ஒன்று இது. இன்னொன்று தாகூரின் ’சாதனா’. இந்நூலின் நீட்சியாகவே டி.எஸ்.எலியட்டின் ’ மரபும் தனித்திறனும்’  என்ற கட்டுரையை வாசிக்கவேண்டும்.

சுந்தர ராமசாமி

இந்நூலைப்பற்றி சுந்தர ராமசாமியிடம் விரிவாக விவாதித்ததை நினைவுகூர்கிறேன். இதை அவர் தல்ஸ்தோய் அவரது படைப்பூக்க நிலையை இழந்தபின்-தன்னை உலகுக்கு உபதேசிக்கும் ஒருநவீன மதப்பிரச்சாரகராக உணர்ந்தபின்-எழுதிய நூல் என்று சொன்னார்.

சுருக்கமாகச் சொன்னால் எப்படிச் சொல்லப்படுகிறது என்பதல்ல, என்ன சொல்லப்படுகிறதென்பதே தாத்தாவுக்கு முக்கியம். அது மானுட மீட்புக்கான உண்மையாக இருக்கவேண்டும். நவீனத்துவரான ராமசாமிக்குக் ‘கலை என்பது சொல்லும் பொருளினாலல்ல சொல்லும் முறையினால் தன்னை நிலைநாட்டிக்கொள்வது’

இந்த முன்னுரையில் [அய்ல்மெர் மாட்]  உள்ள ஒரு வரி,பிரபலமான ‘அழகியல் மறைஞான’[aesthetic mysticism] நோக்குக்கு தல்ஸ்தோய் நேர் எதிராக இருக்கிறார்’. முற்றிலும் உண்மை. இலக்கியவாதிக்கு இருக்கும் ஆபத்தான பொறி என்பது மொழி உருவாக்கும் அழகில் சிக்கிக்கொண்டு, அதை மெய்ஞ்ஞான வெளிப்பாடாக எண்ணி மயங்கி அதிலேயே கிடப்பது. அந்தத் தேனில் கால்சிக்கிக்கொண்ட தேனீக்கள் நிறையவே உண்டு. தல்ஸ்தோய் அந்த அபாயத்தைத் தாண்டுவதற்கான வழிகளை அளிக்கிறார். அவ்வகையில் அவரது அணுகுமுறை முக்கியமானது.

லா.ச.ராவை வாசித்தபின்  அவரைச் சந்தித்திருந்தால் என்ன செய்திருப்பார் தாத்தா என்று எண்ணிக்கொண்டேன். கையில் எப்போதுமே பெரிய குதிரைச்சவுக்கு வைத்திருந்த ராட்சதர் அவர்.

ஜெ

தல்ஸ்தோய் காட்சி

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

கலைஞர்களை வழிபடலாமா?

ஆண் பெண் சமூகம்

இரும்புத்தெய்வத்துக்கு ஒரு பலி

ஓர் எளிய கூழாங்கல்

முந்தைய கட்டுரைசில கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்