சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

பல வருடங்களுக்கு முன் லியோனி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “இந்தியா கடன் வாங்காத ஒரே நாடு பங்களாதேஷ் மட்டும் தான்” என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். என் அத்தை வியந்து ரசித்துக் கொண்டிருந்தார். உலகில் நம்மிடம் பிச்சை எடுக்கும் நாடுகள் எத்தனையோ உண்டு என்று நான் சொன்னதைச் சிறிது அவ நம்பிக்கையோடு கேட்டு வைத்துக் கொண்டார்.

பாமர மக்கள் அவர் பேச்சை ரசிப்பது புரிகிறது. படித்தவர்கள் அதைக் கேட்டுத் தலையாட்டும்போது எரிச்சல் பற்றிக்கொண்டு வரும். (முக்கியமாக அரசு அதிகாரிகளாயிருக்கும் நம் மூதாதையர்கள்). நம்மூர் சோஷலிசம் அளித்த கொடைகளில், அறிவுடைமையைக் கண்டாலே அலறி ஓடும் இத்தகு அதிகாரிகளும் அடக்கம்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ஜெ,

தங்களுடைய‌ சமீபத்திய பதிவொன்றில் மோனியர் வில்லியம்ஸ் பற்றிச்சொல்லி இருந்தீர்கள் , முன்பொரு முறை அவர் உருவாக்கிய‌ சமஸ்கிருத அகராதி வாங்க வேண்டும் என்று சொன்னதாய் ஞாபகம் .
தற்செயலாக இது இணையத்தில் இருப்பதைக் கண்டேன்.உங்களுக்குப் பயன்படலாம் என்று.
தங்கள் பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள்.
-கார்திக்
அன்புள்ள ஜெயமோகன்,
நலமறிய அவா.
உங்கள் செல்ல நாய்க்குட்டிகள் இரண்டுமே இறந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
நீங்கள் இங்கு வந்திருந்த போது உங்களோடு இருந்த சில நாட்களில் நாம் எப்போது நாய்களைப் பார்த்தாலும் உங்கள் குட்டிகளை நினைவு கொண்டு ஏதாவது சொல்லி வந்தீர்கள். அப்போதே நினைத்தேன் நீங்கள் அவைகளைப் பிரிந்து மிகவும் வாடுகிறீர்கள் என்று. அப்போது டெட்டி இறந்து போனது தெரியாது. இப்போது ஹீரோவும்.
நான் நாய்கள்,பூனைகள் இவைகளோடு என்றுமே இருந்தது கிடையாது.
என் வளர்ப்புச் சூழலையும் மீறி நான் என்றைக்காவது ஒரு நாள் ஒரு நாய்க்குட்டியை வீட்டுக்குள் கொண்டு வந்தால் அதற்குக் காரணம் நீங்கள் இது வரை உங்கள் குட்டிகளைப் பற்றி எழுதி வந்ததாகத்தான் இருக்க முடியும்.
அன்பின் மேல் இழப்பின் ’டாமக்கிள் வாள்’ தொங்கிக்கொண்டே இருப்பது என்ன ஒரு கொடுமை ?
நன்றி
ஸ்ரீநிவாஸன்
முந்தைய கட்டுரைஇயல்விழா, கிளம்புதல்
அடுத்த கட்டுரைதல்ஸ்தோயின் கலைநோக்கு