எஸ்.பொ

2004 டிசம்பரில் இந்தியாவை சுனாமி தாக்கி பேரழிவை உருவாக்கியது. அப்போது நான் நாகர்கோயிலில் இருந்தேன். தன் பிறந்தநாளை ஒட்டி சுந்தர ராமசாமி அவரது நண்பர்களை பார்க்கவிரும்பியதனால் முந்தைய நாள் அவரது வீட்டில் ஒர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  அவரது வீட்டுக்கு வந்த சில நண்பர்களும் என்னுடன் இருந்தார்கள். நானும் நாஞ்சில்நாடனும் அந்நண்பர்களுமாக சுசீந்திரம் தேர்த்திருவிழா பார்க்க சென்றிருந்தோம். அப்போது ஒருநண்பர் சொன்னார், சென்னையில் மிகப்பெரிய கடல் அலை ஒன்று அடித்திருக்கிறது என்று. இந்தியக்கடற்கரை முழுக்க மேலும் அதேபோன்ற அலை வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்றார்கள்,

எஸ்.பொன்னுத்துரை

நாஞ்சில்நாடன் உற்சாகமாகிவிட்டார். இது ஒரு வாழ்நாள்வாய்ப்பு என்று சொல்லி உடனடியாக கன்யாகுமரி கிளம்ப ஆயத்தமானோம். ஆனால் எந்த ஆட்டோவும் டாக்சியும் வரவில்லை. சாலைக்கு வந்து கன்யாகுமரிக்குச் செல்ல முட்டிமோதினோம். ஆனால் கன்யாகுமரியில் இருந்துதான் கூட்டம்கூட்டமாக திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். கொஞ்சநேரத்தில் சுந்தர ராமசாமியை ஆவணப்படம் எடுத்த ரமணியைச் சந்தித்தோம். அவரது மாமனாரும் மாமியாரும் சுனாமியில் அடித்துச் சென்றுவிட்டனர். அப்போதுதான் என்ன ஏது என உறைத்தது. கன்யாகுமரியில் மட்டும் சுமார் பத்தாயிரம் பேர் இறந்தனர் என்பதை நான் புரிந்துகொண்டது அன்று இரவுதான்!

உண்மையில் அந்த பத்தாயிரத்தில் கால்வாசிப்பேர் இப்படி ஓர் அலை வரப்போகிறது என்று தெரிந்து அதைப்பார்க்க கடற்கரைக்கு சென்ற இளைஞர்கள். ரமணிகூட அலையை பற்றி வானொலியில் கேள்விப்பட்டு அதை படம் எடுக்கத்தான் காமிராவுடன் சென்றார் என்று சொன்னார்கள். மனித அறியாமையின் பயங்கரமான முகத்தை அன்று நேரில் கண்டேன். மனிதர்கள் அதிகமாக யோசிப்பதில்லை. எல்லாரும் செல்லும் வழியில் தாங்களும் செல்கிறார்கள். பள்ளம் கண்ட இடம் நோக்கி நீர் செல்வதுபோல.

மறுநாள் முதல் இரண்டுநாள் நான் சுனாமி நிவாரணப்பணிகளில் நேரில்சென்று ஈடுபட்டேன். சேற்றுக்குள் புதைந்து கிடந்த நூற்றுக்கணக்கான சடலங்களை எடுத்து புதைக்க உதவினேன்.  மனம்பேதலிக்கச்செய்த அனுபவம் அது. அதைப்பற்றி அப்போது விரிவாகவே எழுதியிருக்கிறேன். மண்ணோடு மண்ணாக குப்பைக்குவியலாக கிடந்த சடலங்கள். குழந்தைகளை அணைத்துக்கொண்ட பெண்களே அவர்களில் அதிகம். பெண்கள் அந்த அளவுக்கு இறந்தமைக்கு காரணம் ஒன்றுதான், புடவை. ஆண்கள் லுங்கியை கழட்டிவிட்டு ஓடி தப்ப கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு புடவையுடன் ஓடிய பெண்கள் மாட்டிக்கொண்டார்கள்.

விலங்குகள் பறவைகள் அனைத்துமே சுனாமி பற்றிய உள்ளுணர்வை முன்னரே அடைந்தன. கடற்கரை நாய்களெல்லாம்  ஒருமணிநேரம் முன்னதாகவே சுனாமி பற்றி உள்ளுணர்ச்சி அடைந்து தப்பி ஓடி மேடான இடங்களுக்குச் சென்றன.  எலிகளும் முயல்களும் எல்லாம் தப்பிச்சென்றன. கட்டிப்போடப்பட்டிருந்த பசுக்களெல்லாம் இறந்தன.

கடைசியில் பலவீனமானவர்கள் மட்டுமே மட்டிக்கொள்ளும் சுனாமி என்றுதான் நான் சமீபத்தைய ஈழ அழிவின் சித்திரத்தை காணும்போது நினைத்துக்கொண்டேன்.   நிராதரவாக கைவிடப்பட்ட மக்களின் அழிவு. அவர்களின் நம்பிக்கையிழந்த அலறல். கடவுளே கடவுளே என்ற கூச்சல். எவ்வளவு அர்த்தமில்லாத அபத்தமான அழைப்பு!

மோக்கன் பழங்குடி தலைவர் சலே கலத்தலாய்

சுனாமியின்போது ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்தமானில் மோக்கன் என்ற பழங்குடியினர் இருக்கிறார்கள். இவர்கள் கடல்நாடோடிகள். படகிலேயே பெரும்பாலான நேரம் வாழக்கூடியவர்கள். கிட்டத்தட்ட ஆயிரம்பேர் கொண்ட இந்த இனம் ஒட்டுமொத்தமாக அழிந்திருக்கும் என்ற எண்ணம் முதலில் ஏற்பட்டது. ஆனால் மூன்றாம் நாளே தெரிந்தது, அவர்கள் அனைவருமே உயிருடன் இருந்தார்கள். அவர்களின் தலைவர் சலே கலத்தலாய் [Saleh Kalathalay ] என்பவருக்கு உள்ளுணர்வு  வந்தது. முன்னோர்கள் அலைகளாக வந்து பலிகொள்ள போகிறார்கள் என்று அவர் சொல்ல எல்லாரும் ஓடிப்போய் மரங்கள் மேல் ஏறிக்கொண்டார்கள். தப்பினார்கள்.

மோக்கன்கள் முழுமையாக அழிந்தார்கள் என்று தி ஹிண்டு செய்திவெளியிட்டது. அவர்களின் மொழியும் பண்பாடும் மிகமிக தொன்மையானது. பத்தாயிரம் வருட பழமை கொண்டது. கருப்பு இனமும் மங்கோலிய இனமும் கலந்த பழங்குடிகள் இவர்கள். இந்திய -சீன மொழிக்குடும்பங்களுக்கு இடையேயான உறவைப்பற்றி ஆராய்வதற்கான மிகச்சிறந்த ’சாம்பிள்’ ஆக அந்த மொழியை மொழியியலாளர்கள் குறிப்பிட்டு வந்தார்கள். அந்த மொழி அழிந்தது என்றார்கள். ஆனால் அவர்கள்  இயற்கையை அறிந்து தப்பி மீண்டு வந்தார்கள்.

சலேயின் உள்ளுணர்வை அறிவியலாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். அது தன்னைச்சுற்றி உள்ள இயற்கையை நுட்பமாக கவனித்து ஆழ்மனத்தில் தேக்கிவைத்திருக்கும் நுண்ணுணர்வுதான். அவர் அலைகளின் திசையை, அலைகளுடன் காற்றுக்கு உள்ள உறவை, மீன்கள் கொள்ளும் திசை மாற்றங்களை, மரங்களில் ஏற்படும் மாற்றங்களை மிகக்கூர்மையாக கவனித்திருக்கிறார். அவர் சுனாமிக்கு இரண்டு மணிநேரம் முன்னரே உருவான இயற்கை மாற்றங்களைப்பற்றி  பிபிசிக்கு ஒருமணிநேர பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

நண்பர்களே, இந்த மேடையில் அமர்ந்திருக்கும் எஸ்.பொன்னுத்துரை அவர்களையும் ஒருவகையில் சலே அவர்களுடன் ஒப்பிடுவேன். ஒரு இனத்தின் ஒரு மொழியின் ஒரு பண்பாட்டின் உள்ளுணர்வின் சாரமாக ஒலித்து வந்த குரல் அவருடையது. ஈழத்து மண்ணுடனும் ஈழத்து மக்களுடனும் இரண்டறக்கலந்த ஆழ்மனம் என்று எஸ்.பொ அவர்களைச் சொல்லலாம். அந்த மண்ணிலும் மக்களிலும் இருந்து அவர் அறிந்தும் அறியாமலும் உள்வாங்கிய ஞானமும் விவேகமும்தான் அவரது படைப்புகளை ஆழம் மிக்கவையாக ஆக்குகின்றன.

சலே இருக்கும்வரை மோக்கன்களை எவரும் அழிக்க முடியாது. அவர் ஒரு விதை போல. அவரைக்கொண்டு சென்று சகாராவில் விட்டால் கொஞ்சநாளில் அங்கே மோக்கன் இனம் முளைத்துவரும். எஸ்.பொன்னுத்துரை ஈழப்பண்பாட்டின் விதை.

பழங்காலத்தில் பெரும் பிரளயம் பெரும் வறட்சி பற்றிய அச்சம் மக்களிடம் என்றும் இருந்தது.  நமது கோபுரங்கள்தான் உயரமான இடங்கள். ஆகவேதான் நம்முடைய கோயில் கோபுரங்களில் கலசங்களுக்குள் நவதானியங்களை போட்டு நீர் புகாமல் உருக்கிமூடி மேலே வைக்கிறார்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அந்த விதைகளை மாற்றுகிறார்கள். அவை எதிர்காலத்துக்காக. நண்பர்களே எஸ்.பொ அவர்களின் எழுத்துக்கள் நாம் வைத்திருக்கும் விதை நெல். நமக்கு ஈரமிருந்தால் நாம் எங்கும் அதை முளைக்கவைத்துக்கொள்ளமுடியும். நம் பண்பாட்டை, மொழியை மீட்டுக்கொள்ள முடியும்.

தமிழிலக்கியத்தில் எப்போதும் இரு பாதைகள் உண்டு. ஒன்று கருத்துக்களின் பாதை. இன்னொன்று உள்ளுணர்வுகளின் பாதை. தொடக்கப்புள்ளிகளை வைத்துப்பார்த்தால் முதல் பாதையை மாயூரம் வேதநாயகம்பிள்ளை பிரதாபமுதலியார் சரித்திரம் வழியாக தொடங்கிவைத்தார் எனலாம். இரண்டம் பாதையை ராஜம் அய்யர் கமலாம்பாள் சரித்திரம் வழியாக தொடங்கிவைத்தார்.

முதல்வழி கருத்துப்பரப்பல் நோக்கம் கொண்டது. சமூக மாற்றத்தை இலக்காக ஆக்கியது. பொதுவான கருத்துத்தளத்தில் செல்வது.  அரசியலை முதன்மைப்படுத்துவது. இரண்டாம்வழி எழுத்தாளனின் அந்தரங்கக்.  குரல். அவனுடைய உள்ளுணர்வை மட்டுமெ சார்ந்தது. அழகியலை முதன்மைப்படுத்துவது.

தமிழில் முதல் வழியை மிக அழுத்தமாக முன்வைத்த இலக்கிய திறனாய்வாளர்களில் கலாநிதி கைலாசபதி முக்கியமானவர். அவரும் கா சிவத்தம்பி அவர்களும் இலக்கியத்தை ஒரு கருத்தியல் செயல்பாடாக மட்டுமே கண்டவர்கள். அவர்களின் செல்வாக்கால் ஈழ இலக்கியத்தில் எப்போதும் முதல்பாதையே பெருவழியாக இருந்தது. தமிழில்  புதுமைப்பித்தன் முதலான படைப்பாளிகளாலும் க.நா.சு போன்ற விமர்சகர்களாலும் இரண்டாவது பாதை, அழகியல் நோக்கு, வலுவாக வேரூன்றி வளர்ந்தது

ஈழத்தில் உள்ளுணர்வின் பாதையை அழகியலின் பாதையை முன்வைத்தவர்களில் மு தளையசிங்கம் முன்னோடியானவர். அவரது சமகாலத்தைய இன்னொரு சக்தி என எஸ்.பொன்னுத்துரையைச் சொல்லலாம். தன் கட்டற்ற உள்ளுணர்வை மட்டுமே தன் தகுதியாகக் கொண்ட படைப்பாளி அவர். முற்போக்கு முகாம் முன்வைத்த ஒட்டுமொத்த கருத்தியல் விவாதத்துக்கும் பதிலாக அவர் தன்னை, தன் ஆளுமையை முன்வைத்தார். அதற்கு நற்போக்கு என அவர் பெயரிட்டார்.

எஸ்.பொ. அவர்களின் உள்ளுணர்வு கட்டற்றது. அதன்மேல் அவருக்கே எந்த பிடிமானமும் இல்லை. சாமியாடிக்கு அவரது சொற்கள் அவருக்கே தெரியாமலிருப்பதுபோலத்தான். ஆகவே ஒருவகை கட்டற்றுச்சிதறிய இலக்கிய உலகமாகவே அவருடையது நமக்குக் கிடைக்கிறது. பலதரத்தில் அமைந்த பல திசைகளை தேர்ந்துகொண்ட ஆக்கங்கள் அவை. மிக விரிவான வாசக அவதானிப்புமூலமே நாம் அவற்றை ஆராய்ந்து மதிப்பிடமுடியும்.

எஸ்.பொ அவர்களின் பாதை அவருக்குப்பின்னரும் அதிகமாக பின்பற்றப்படாத ஒன்றாகவே உள்ளது. அது சிக்கலான ஒன்று. வழிதெரியாத கூரிருட்டில் ஒருவன் தன் கால்களில் இருக்கும் நினைவையும் உள்ளுணர்வையும் மட்டுமே நம்பி நடப்பது போன்றது அது. ஆழமான உள்ளுணர்வு உடையவர்களுக்கு மட்டுமே அது சாத்தியமாகிறது. அத்தகைய படைப்பாளிகள் எதிர்காலத்தில் ஈழ இலக்கியத்தில் உருவாகவேண்டும்.

இன்று நாம் இருட்டில் இருக்கிறோம். நம் உள்ளுணர்வை நம் தார்மீகத்தை திரட்டி மெல்லமெல்ல முன்னே செல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்கு அவரது முன்னுதாரணம் நமக்கு உதவட்டும். இந்த மேடையில் நம் மகத்தான முன்னோடி ஒருவரை நாம் கௌரவிப்பது அதற்காகவே. இந்த கௌரவம் அவருக்கு நாம் அளிப்பதல்ல. அவரிடமிருந்து நாம் எடுத்துக்கொள்வது. அவரை  கவனிக்கிறோம் பின் தொடர்கிறோம் என நாம் அவரிடம் சொல்லும் நிகழ்ச்சி இது.  அல்லது அதை நமக்குநாமே சொல்லிக்கொள்ளும் நிகழ்ச்சி

எஸ்பொ அவர்களுக்கு என் எளிய வணக்கங்கள்.

நன்றி

[19-6-2011 அன்று டொரொண்டோ பல்கலை வளாகத்தில் இயல் விருது விழாவில் பேசியது]

சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்

யாழ் பாணனுக்கு இயல் விருது

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி

கடலின் அலை

சேரன்:விமரிசன அரங்கு

ஈழ இலக்கியம்:ஒரு கடிதம்

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1

யாழ்நிலத்துப்பாணன் -2

யாழ்நிலத்துப்பாணன் -3



முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇயல்விழா, கிளம்புதல்