அன்புள்ள திரு.ஜெயமோகன்,
//மற்றவர்களைப்போல உணர்ச்சிகள் மேல் கலைஞனுக்கு அறிவின் கட்டுப்பாடு இல்லை.அவனுக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு அந்த உணர்ச்சிகளை அவனால் நுட்பமாக பார்க்கமுடியும் என்பது மட்டும்தான். //
இவ்வரியைப் படித்ததும் டோரியன் க்ரே முன்னுரையில் ஆஸ்கர் வைல்ட் எழுதிய ஒரு வரி நினைவுக்கு வருகிறது: vice and virtue are to the artist material for art.
பல வித உணர்ச்சி நிலைகளையும், உறவுகளையும், கருத்து நிலைப்பாடுகளையும் தரித்துக்கொண்டு எழுதுகிறவன் தன் வாழ்வின் – ஒற்றையான, தட்டையான, சாமான்யமான வாழ்வின்- தருணங்களை, உறவுகளை அவற்றுக்கு நியாயமாகத் தரவேண்டிய பரிபூரண ஆழ்தலுடன் அணுகுவது சாத்தியமில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
எப்போதுமே படைப்புக்குரிய உயரிய மனநிலையில் அவன் செயல்படுவதாகச் சொல்லவில்லை. ஆனால், ஒரு தருணத்தை, சூழ்நிலையை முன்னமே, கற்பனையின் மூலம் பல கோணங்களில் அணுகிப் பார்த்தவன், ‘உண்மையாக’த் தன் வாழ்வில் அவை வரும்பொழுது switch off செய்துவிட்டு ஒற்றைப்படையான உண்மை(?) சுபாவத்தை மட்டும் மேலெழுப்பி எதிர்கொள்ளமுடியுமா என்ன?
நான் கலைஞனில்லை. அதனால் இது வெளியிலிருந்து பார்ப்பவனின்’ மிகையான கற்பனையாக இருக்கலாம். இருந்தாலும், இந்த ‘உற்றுநோக்கும் பறவை‘த்தனத்தை மீறுவதைப் பற்றி உங்கள் எண்ணங்களைத் தெரிந்துகொள்ள ஆவல்.
அன்புடன்,
பிரபு ராம்
PS: எழுதிக்கொண்டிருக்கும் பொழுதே, சினிமாநடிகைகளிடம் தொன்றுதொட்டுக் கேட்கப்படும் பேட்டிக்கேள்வியான: நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் பொழுது...- கேள்வியின் வேறொரு வடிவம் தான் இதுவோ என்று தோன்றுகிறது!
அன்புள்ள ஜெ,
நீங்கள் உங்களைப் பற்றி எழுதியதில் :
//அகங்காரம் இல்லாதவன் எதையும் எழுத முடியாது. எழுதவேண்டுமென்றால் அகங்காரத்தை பயின்று உருவாக்கிக்கொள்ளக்கூட வேண்டும் என்று தோன்றுகிறது. எல்லா எழுத்தாளர்களும் நான் நான் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு இரு முகங்கள் உண்டு. எழுத்தாளன் தன்னையே ஒரு சடலமாக ஆக்கி தன் சோதனை மேடையில் பரப்புகிறான் என்கிறார் எலியட். ஆகவே அவன் தன்னைப்பற்றி பேசுகிறான். அது நான் நான் என ஒலிக்கிறது.////
இதைப் பற்றி யோசித்திருக்கிறேன். எந்த ஒரு படைப்பாளிக்கும் சிறிதாவது ஞானச்செருக்கு இருக்கும். தான் படைக்கிறேன் என்ற கர்வம் சிறிது இருக்கலாம். அதில் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால், without pride in one’s creativity, it is impossible to create continuously. The trick is in controlling the pride to reasonable limits. இது பெரும் தொழில் முனைவோர்களுக்கும், இதர கலைஞர்களுக்கும் பொருந்தும். there is only a thin line between this ‘pride in being creative’ and sheer arrogance. நான் பார்த்த வரை நீங்கள் இதை மிகக் கட்டுபாட்டில்தான் இதுவரை வைத்திருக்கிறீர்கள். ஒரு சில சமயங்களில் மட்டும் தவறிவிடுகிறது. சாகித்திய அகடாமி பரிசு பற்றி (அல்லது பொதுவாக இலக்கிய பரிசுகள் பற்றி ) உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, ’‘நாங்கள் பரிசு வழங்குபவர்கள், வாங்குபவர்கள் அல்ல” என்ற ரீதியில் பதில் சொல்லியிருந்தது உறுத்தியது. இதை தவிர்த்திருக்கலாம் என்றே அப்பொழுது எனக்குத் தோன்றியது.
மற்றபடி, உங்கள் மீது பொறாமை, காழ்ப்புணர்ச்சி கொண்ட வீணர்கள் கண்டபடி எழுதுவதை எல்லாம் சீரியசாக எடுத்து கொண்டு, self analysis என்ற பெயரில் self torture செய்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன்.
உங்களைப் போன்ற பெரும் படைப்பாளிகளுக்கு லௌகீகக் கவலைகள் சிறிதும் இல்லாமல் பார்த்துக் கொண்டு, உங்கள் படைக்கும் தொழிலைத் தொடர்ந்து செவ்வனே செய்ய வகை செய்வது ஒரு சமூகத்தின் முக்கிய கடமையாகும். வீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாகம் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல் தொடர்ந்து நீங்கள் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எம் அவா. அதற்கான சூழல் இன்று உருவாகியிருப்பதைக் காண்கையில் மிக்க மகிழ்ச்சி.—
Regards / அன்புடன்
K.R.Athiyaman / K.R.அதியமான்
Chennai – 96
சார்.. ஏதோ ஒரு களங்கமின்மை உங்களிடம் எப்போதும் உள்ளது.. வெகுளித்தனம் அல்ல அது .. வேறு ஏதோ ஒன்று. ”எல்லாரும் பொய் சொல்லுகிறார்கள். பணம்தான் எல்லாருக்கும் பெரிதாக இருக்கிறது..எல்லாரும் ஒருவருக்கொருவர் விரோதமாக இருக்கிறார்கள். எங்கள் புரபசர்கள் கூடப் பரஸ்பரம் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்” என்று ‘போதி’ கதையில் சொல்லும் அந்த இளைஞனில் உள்ள அதே களங்கமின்மையைத்தான் இன்றும் கூட உங்கள் “ஆம், அப்படி இருக்க நேர்ந்துவிட்டது. எழுதிய படைப்புகளின் பேரில் அதற்காக மன்னித்துவிடுங்கள்” என்ற பதிலில் பார்க்கிறேன்.
அந்த இளைஞன் அவிசுவாசியாக, அவநம்பிக்கைவாதியாக இருந்தால் என்ன..அகங்காரம் உடையவனாக இருந்தால் என்ன. இருந்துவிட்டுப் போகட்டுமே.. எப்படி இருந்தாலும் சரி, என்றும் அவன் எங்கள் மனதிற்கு நெருக்கமானவனாகவே இருப்பான்.. (இதையும் நீங்கள் எங்களது சுயமையநோக்கினால், அடையாளப்படுத்ததினால் என்று கூறலாம்..அது பற்றி எங்களுக்குக் கவலையில்லை)..
நல்லபடியாகப் போய்வாருங்கள்..சிக்கிம் நிலக்காட்சிகளை உங்கள் கண்களின் வழியாகக் காண ஆவலுடன்..
அர்விந்த்