தமிழக வரலாற்று மற்றும் கலாச்சார சின்னங்களை பார்ப்பதற்கான ஒரு பைக் பயணத்தை தொடங்கி இன்றோடு இரண்டு இரண்டு வாரங்கள் முடிவடைகிறது. பயணம் முடிந்த பிறகு விரிவாக எனது வலைப்பூவில் பதிவு செய்து, ஒட்டுமொத்த அணுபவங்களை தொகுத்து உங்களுக்கு கடிதமாக எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால், இன்றைய அணுபவத்தை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என தோன்றியதால் இந்த மடல்.
நெல்லையிலிருந்து காலை கிளம்பி மணப்பாடு, திருச்செந்தூர், குலசை, ஏரல் என பார்த்துவிட்டு நவதிருப்பதி தளங்களை பார்க்க தொடங்கியபொழுது, கோவில் நடை சாத்தப்படும் நேரமாகிவிட்டது. நவதிருபதி தளங்களில் உணவு இடைவெளி போல் ஒரு மணிநேரம் தான் நடையடைப்பார்கள் என்பது தெரியாததால்… மாலை தானே நடை திறப்பார்கள், மதியம் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். காலை ஆதிச்சநல்லூர் பகுதியை கடந்து செல்லும்போதே, மதியம் அங்கு செல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன்… அங்கு செல்ல தாமிரபரணியை கடக்க கூகிளிடம் வழி கேட்க… அது அருகில் இருக்கும் சிவகளை அகழாய்வு பகுதியையும் காட்டியது. எனவே முதலில் அங்கு சென்றேன்.
அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியகங்களில் சிறுவயது முதலே பார்த்து வருகிறேன். அகழாய்வு நடந்த குழிகளின் புகைப்படங்களும் கிடைக்கும். குழிகளின் மாதிரிகளை தமிழக அரசு காட்சிபடுத்தி வருகிறது. குறிப்பாக கீழடி சார்ந்தவை. ஆனாலும், அகழும் பணி எப்படி நடக்கிறது என்பதை அறிந்ததில்லை.
இன்று ஆதிச்சநல்லூர் செல்ல திட்டமிட்டபொழுது கூட, அகழாய்வுகள் நடந்த இடங்களில் ஆய்வுக்குழிகள் மூடப்பட்டிருக்கும். பார்க்க எதுவும் இல்லை என்றாலும் பெருங்கறகால மனிதன் வாழ்ந்த இடத்தில் நிறக்கபோகிறோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.
அதே போல்.. சிவகளைக்கு சென்ற பொழுது, அங்கு முதலில் மணல்பரப்பை மட்டுமே கண்டேன். வண்டியை நிறுத்தி, சுற்றிப்பார்ப்போம் என நடக்கத்தொடங்கியபொழுது, அதன் மற்றொரு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அகழாய்வு முடிந்த குழிகள் மீண்டும் மண் இட்டு நிரப்பப்பட்டுவிடும். அகழ்ந்து முடித்த குழிகளை தார்ப்பாயால் முடி வைத்திருந்தனர். சிலகுழிகள் தகரபலகைகளால் முழுவதாகவே மூடப்பட்டிருந்தன. இரண்டு குழிகளில் நான் செல்லும் பொழுது வேலை நடந்துக்கொண்டிருந்தது. இடம் குறிக்கப்பட்ட முதல் குழியில் அப்பொழுதுதான் தரை நிலையிலிருந்து தோண்ட தொடங்கியிருந்தனர். வீட்டில் செடி நட சிறு குழி தோண்டுவதென்றாலே, மண்வெட்டியோ கடப்பாறையோ கொண்டு தான் தொடங்குவோம். ஆனால் 6 – 10 அடி குழி தோண்ட அவர்கள் குத்துக்கோடரியை (pickaxe) உபயோகித்துக்கொண்டிருந்தனர். ஒரு நேரத்தில் ஒரு விரலுக்கும் குறைவான அளவே ஆழம் தோண்டினார்கள். இன்னொரு குழியில், இப்படி தோண்டப்பட மண்னை கொள்ளறு மூலம் எடுத்து ஒரு இடத்தில் குவித்து, மிக கவணமாக மண்ணை குழிக்கு வெளியே கொட்ட மட்டும் மண்வெட்டியை உபயோகித்துக்கொண்டிருந்தனர். ஒரு குழியை இப்பொழுது தான் தோண்ட துவங்கினார்கள். ஆழமாக இருந்த இன்னொன்றிலும் தொல் எச்சங்கள் எதுவும் இல்லை.
அடிக்கும் பேய் காற்றில் திறந்தால் அவற்றை மீண்டும் மூடுவது மிகவும் கடினமாக இருக்கிறது என்பதால் அகழ்வு முடிந்து தார்பாயால் மூடியிருந்த குழிகளை திறந்து காமிக்க மிகவும் தயங்கினர். அருகிலேயே ஒரு குழியின் மாதிரியை தமிழக அரசு காட்சிக்கு வைத்திருந்தது.
இந்த அகழ்வாராய்ச்சியை பார்த்தது ஒரு புது அனுபவமாக இருந்தது.. ஆனால், அது ஆதிச்சநல்லூரில் நான் பார்க்கப்போவதை புரிந்துக்கொள்ள அடிப்படையாக அமையும் என்பதை அப்பொழுது உணரவில்லை.
அவர்கள் உணவு இடைவெளிக்கு சென்றபின் கிளம்பி ஆதிச்சநல்லூர் சென்றேன். ஆதிச்சநல்லூர் மணல்மேடு அகழாய்வுகள் நிகழ்ந்த இடம் என அறிவேன். அங்கு அரசின் தகவல் பலகைகள் இருந்தாலும், அகழாய்வுகள் நடந்துக்கொண்டிருப்பதற்கான எந்த குறியீடும் இல்லை. கரடுமுரடான பாதையில் வண்டியில் கொஞ்ச தூரம் சென்று, பிறகு நடந்து சென்றால்… அதன் மறுபகுதியில் அகழாய்வு நடந்த குழிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும், ஐந்து iconic archeological destinationsல் தென் இந்தியாவில் இருக்கும் ஒரே இடம் ஆதிச்சநல்லூர். மற்றவை ராக்கிகரி (பிஹார்), ஹஸ்தினாபுரம் (உபி), தோளவிரா (குஜராத்) மற்றும் சிவ்சாகர் (அஸாம்). அதன் ஒரு பகுதியாக இங்கு மூலஇடம்மாறா அருங்காட்சியம் (in situ museum) அமைக்கப்படவுள்ளது. அதற்காக இந்த குழிகள் பாதுகாக்கப்படுகின்றன. பல்வேறு அளவிலான முதுமக்கள் தாழிகளும் மண்பாண்டங்களும் அங்கு காண கிடைக்கின்றன.
அதன் பிறகு, சாலையின் மறுபக்கம், பாண்டியராஜா கோவிலுக்கு அருகில் இருக்கும் அகழாய்வு பகுதிகளுக்கு சென்றேன். அங்கு அகழாய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வேலை நடைபெற்றுக்கொண்டிருந்த குழிகளில் முதுமக்கள் தாழிகளையும் காண முடிந்தது. 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, அதே தாமிரபரணி கரையில் ஆதிமனிதன் ஈமசடங்குகளை செய்வதை கற்பனையில் எண்ணிபார்ப்பதே பரவசமாக இருந்தது. மேலும், மண்ணிலிருந்து பழங்காலம் எழுந்து வருவதை காண்பது உணர்ச்சிகரமான தருணம்.
சிவகளை ஆய்வுகள் மாநில அரசின் தொல்லியல் துறை முன்னெடுப்பிலும், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதி ஆய்வுகள் மத்திய அரசின் தொல்லியல் ஆய்வகத்தின் முன்னெடுப்பிலும் நடைபெற்று வருகின்றன. மத்திய மாநில அரசு என்ற வித்தியாசமா, அல்லது ஆதிச்சநல்லூரில் பொருட்கள் கிடைத்ததாலோ என்னவோ… ஆதிச்சநல்லூரில் மேலும் பொறுமையுடன் கவனமாக அகழாய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சிவகளையில் குழிக்குள் கொஞ்சம் வேகமாக தோண்டிக்கொண்டிருந்தனர். ஆனால், இங்கு குழிக்குள் கொள்ளறு அல்லது பிரஷ்ஷின் மூலம் மட்டுமே மண்ணை அகற்றிக்கொண்டிருந்தணர். வெளியே கொட்டப்படும் மணலையும் அதிலிருக்கக்கூடிய பாணை துண்டுகள் போன்றவற்றிற்காக ஜலித்து ஆய்வு செய்துக்கொண்டிருந்தனர்.
கிட்டதட்ட ஒரு மணிநேரம், அந்த சூழலை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். பானை துண்டுகள், மூடியின் அலங்கரிக்கப்பட்ட பிடிகள் போன்றவை வெளிவந்துக்கொண்டிருந்தன. இதுவும் வரலாறு உருவாகி வருவது தானே?! நேற்றில்லாத ஒரு வரலாற்றை இந்த கண்டுபிடிப்புகள் உருவாக்கி அளிக்கின்றன.
4,000 ஆண்டுகளுக்கு முன் இடுகாடாய் உபயோகப்படுத்தப்பட்ட நிலம் இன்றும் அதன் தன்மை மாறாமல் இருக்கிறது. ஆதிச்சநல்லூர் பகுதி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என நண்பர்கள் கூறலாம், ஆனால் அந்த கட்டுப்பாடுகள் இல்லாமலும் அப்படி தான் இருந்திருக்கும் என நம்புகிறேன். சிவகளையில், அகழாய்வு பகுதியில் 20ம் நூற்றாண்டின் இறுதியை சேர்ந்த கல்லறைகள் காண கிடைக்கின்றன.
பிம்பேத்கா குகைகள் போல் தொல் மனிதர்கள் வாழ்ந்த இடங்களை பார்த்திருக்கிறேன், ஆனால் அது இன்று வரை தொடர்வதில்லை. சில நூற்றாண்டுகள் பழைய கோவில்களில் அந்த தொடர்ச்சியை காண முடிகிறது… ஆனால் ஆயிரமாண்டு பழைய கோவில்கள்.. மாமல்லபுரம், கைலாசநாதர் கோவில்கள் போன்றவை, மக்களின் வாழ்விலிருந்து விலகியதாக தான் கிடைக்கின்றன. அந்த பிண்ணனியில், 3,000 – 4,0000 ஆண்டுகளுக்கான ஒரு தொடர்ச்சியை கண்டது… காலத்தின் பிரமாண்டத்தின் முன் பணிந்து நிற்கும் தருணமாக அமைந்தது.
இந்த நெகிழ்விலிருந்து வெளிவந்து.. சில நேரம், அந்த பகுதியில் நடந்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அங்கிருந்த இந்திய தொல்லியல் அமைப்பின் மேற்பார்வையாளர் மணிகண்டன் அவர்களை சந்தித்தேன். அகழாய்வு, ஆதிச்சநல்லூர், தமிழர் வரலாறு, இந்திய வரலாறு என சில மணிநேரங்கள் அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பகிர்ந்த தகவல்களை கொஞ்சம் மற்ற தரவுகள் மூலம் மேம்படுத்தி கீழே கொடுத்துள்ளேன்..
ஆதிச்சநல்லூரில் முதல் அகழாய்வு 1876ல் ஜெர்மனியை சேர்ந்த Dr F Jagor (ஜாகோர்) அவர்களால் செய்யப்படுகிறது. பிறகு இந்திய தொல்லியல் அமைப்பின் சார்பில் Alexander Rea (அலெக்சாண்டர் ரீ) தலைமையில் 1899 முதல் 1904 வரை ஆய்வுகள் நடைபெற்றன. அதன் நெடுங்காலம் பிறகு முனைவர் சத்தியமூர்த்தியின் தலைமையில் 2004-06 காலத்தில் ஆகழாய்வுகள் நடைபெற்றன. அதன் பிறகு 2021ல் தொடங்கிய இந்த அகழாய்வு மூலஇடம்மாறா அருங்காட்சியம் அமைப்பதற்காக தொடங்கப்பட்டது. (சத்தியமூர்த்தி தன் அகழ்வுகளில் கண்டடைந்தது மீதான ஆய்வுகள் 15 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அரசியலை விட்டுவிடுவோம்).
பாதுகாக்கப்பட்ட பகுதி 114 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பகுதியின் மொத்த பரப்பளவு 125 ஏக்கர் எனவும் கூறப்படுகிறது. ஆய்வுகளை ஒழுங்குபடுத்த இந்த பகுதி கட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் தனி தனியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு ஆவணச்செய்யப்படும்.
ஆகழ்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு சேதம் ஏற்படக்கூடது என்பதால் மிகவும் பெதுவாக கவனமாக மட்டுமே இந்த செயல்கள் நடைபெறும். ஒரு நாளுக்கு சில centimetre அளவிற்கு தான் தோண்டப்படும். மேலும் இப்படி செய்யும் பொழுது, தாழிக்கு மேல் அவர்கள் எதாவது கல் குறியீடுகளை விட்டுச்சென்றிருக்கிறார்களா என கவனிக்க முடியும். சென்ற ஆய்வு வரை, தாழிகளை கண்டடைவது மட்டுமே நோக்கமாக இருந்தது. இப்பொழுது கவனித்ததில் தாழியை புதைத்து அதன் மீது கற்களை சில அமைப்புகளில் வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தோம் என மணிகண்டன் தெரிவித்தார்.
இவை அனைத்தும் ஏற்கனவே கற்கால மணிதன் தோண்டி, புதைத்து வைத்த இடங்கள்.
ஒரு குழியை தோண்ட தொடங்கி, கிடைக்கும் தரைபரப்பு மிகவும் கடினமாக இருந்தால் அங்கு மேலும் தோண்ட வேண்டிய அவசியமில்லை. அதுவே ஒரு பகுதியில் இருக்கும் மண் மிகவும் இளகுவாக இருந்தால் (loose sand) அது ஏற்கனவே தோண்டி, கற்களை எல்லாம் நீக்கப்பட்ட மணலால் மூடப்பட்ட இடம் (pit) என கருதி மிக ஆழமகா தோண்டப்படும். அப்பகுதியில் பெரும்பாலும் தாழிகள் கிடைக்கும்.
மழை உட்பட இயற்கை காரணங்களால் மண் இருகுவது மற்றும் தளர்வதால் பாதிக்கப்பட்டு தாழிகள் உடைகின்றன. உடைந்த தாழிகளுக்குள் மண் நிறைந்து விடுகின்றன. சில தாழிகளே உடையாமல் கிடைத்திருக்கின்றன. தாழிகள் உள்ளே மற்றும் அருகே, ஜெகோர் மண்பாண்டங்கள் மற்றும் இரும்பு கருவிகள் கிடைத்ததாக பதிவு செய்துள்ளார். ரீ, இரும்பு கருவிகள், ஆயுதங்கள், கல் கருவிகள் பற்றி குறிப்பிடுகிறார். மிக குறைவாக செப்பு மற்றும் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார். சில இடங்களில் ஈமப்பொருட்கள் தாழியின் உள்ளும், சில இடங்களில் தாழியின் வெளியேவும் கிடைத்துள்ளன.
இரண்டு வகையான தாழிகள் கிடைக்கின்றன. பழமையான (~850 ஆண்டுகள் பொது யுகத்திற்கு முன்) சிவப்பு மண்பாண்ட தாழிகள், பெரிய அளவில் கையால் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. இதில், இறந்தவர்களை முழுமையாக அமரவைத்து புதைத்துள்ளனர். (Primary burial). காலத்தால் பிந்தைய கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் அளவில் சிறியவையாக இருக்கின்றன. அவை குயவர் சக்கரங்களின் உதவியால் செய்யப்பட்டவை. அவற்றில் எலும்புகளின் சில பகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன. (secondary burial)
மணிமேகலை,
“சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்”
என ஈமசடங்குகளுக்கான முறைகளை வகுக்கிறது. இதில் இடுவோர் என்பது குறிப்பிடுவது போல் உடலை விலங்குகளுக்கு இரையாக்கி, சில காலம் கழித்து அவர்களின் எஞ்சிய பாகங்கள் மட்டும் தாழியில் இடப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறார்கள். (நீலகிரியில் வாழும் தொதவர் / தோடவர் இனமக்கள் இரண்டு நிலை ஈமசடங்குகளை பின்பற்றுவதை பார்க்கலாம்).
சில தாழிகளில் எரிந்த எலும்புகள், சாம்பல்கள் போன்றவையும் கிடைக்கின்றன. எலும்புகள் எதுவும் இல்லாமலும் சில தாழிகள் கிடைக்கின்றன.
கற்கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள். அவர்களின் எச்சங்களும் குகைகளில் கிடைக்கின்றன. கற்காலத்தின் இறுதி.. இரும்புக்கால எச்சங்கள் குன்றுகளில் கிடைக்கின்றன.. என்பதால் இரும்பு கால மனிதன், விவசாயத்திற்கு நதிகரைகளில் தங்குவதற்கு முன், குன்றுகளில் வாழ்ந்தான் என நினைத்திருந்தேன். அவ்வாறு வாசித்ததாகவும் நினைவு. ஆனால், ஆதிச்சநல்லூர் அந்த தவறான புரிதலை மாற்றி அமைத்தது.
மேச்சலுக்கும், விவசாயத்திற்கும் உதவாத இந்த பரம்பு பகுதியில் மனிதன் வாழ்ந்திருக்கவில்லை. அவன் அருகே வளமான பகுதியில் வாழ்ந்து, பரம்பை தனது சுடு/இடுகாடாக பயன்படுத்தி வந்திருக்கிறான் என்பதை காண முடிகிறது.
ஆதிச்சநல்லூர் பரம்பை உபயோகித்த மனிதர்கள் எங்கு வாழ்ந்திருப்பார்கள்? நதியின் மறுபக்கத்தில், மண்பானை துண்டுகள் அதிகமாக கிடைக்கும் ஒரு பகுதி அவர்கள் வாழ்ந்த இடமாக இருக்கலாம் என கருதப்பட்டாலும், ஜீவநதியான தானிரபரணியை, அதுவும் மழைக்காலங்களில் கடந்து ஒவ்வொருமுறையும் இங்கு வந்திருக்க வாய்ப்பு குறைவு என்பதால், ஆற்றின் கிழக்கு கரையிலேயே சாத்தியமான இடங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். முதல்கட்ட அகழாய்வின் படி, பரம்பிற்கு தென்கிழக்கே, தற்கால ஆதிச்சநல்லூர் கிராமத்தின் பின் தற்பொழுது ஏரி இருக்கும் பகுதியில் இந்த மக்களின் வாழ்விடம் அமைந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
—-
இந்த உரையாடலுக்கு பிறகு, இந்தியாவின் முதல் குடைவரையான பராபர் குகைகள், மகாராஷ்டிராவில் உள்ள குடைவரைகள் குறித்தும் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்தார். மாலை 5 மணி அளவில்… ஏழடிக்கும் ஆழமான ஒரு குழியை தோண்டிக்கொடிருந்த ஒரு நபருக்கு உதவ மணிகண்டனே குழிக்குள் இறங்க… நான் அவரிடம் விடைபெற்று… ஆதிச்சநல்லூர் ஏரியை பார்த்துவிட்டு திரும்ப இந்த பகுதிக்கு வரும் வழியில், அருகிலுள்ள பாண்டியராஜா கோவில் பூசாரி, கோவிலுக்கான தீபத்தை புளியங்குளம் ஊரின் உள்ளே இருந்த கோவில் வீட்டிலிருந்து எடுத்து வந்துக்கொண்டிருந்தார்…
இவ்வகை சடங்கை முதன்முதலில் பார்க்கிறேன் என்பதால்… அங்கிருப்பவர்களிடம் பேசி… கோவில் வீடு, தீப வழிப்பாடு, கட்டுப்பெட்டி, சாமியாடுதல், ஆண்டுக்கு இரண்டு முறை கொடை என உறைந்த வரலாற்றிலிருந்து வாழும் வரலாற்றுக்குள் நுழையதொடங்கினேன்… அவற்றை விரிவாக தனியாக எழுதுகிறேன்..
இன்றைய நாள் மணப்பாடு கரையில் ஆழி சிறுகதையை மறுவாசிப்பு செய்து… அந்த சூழலின் அழகில் திளைப்பதில் தொடங்கி… கற்காலம் வழியாக நீண்டு ஶ்ரீவைகுண்டத்தில் நாயக்கர்களின் ராம லக்ஷமண சிலைகள் வரை விரிந்து நிறைவாக முழுமையடைந்தது.