தொடக்கம்

அன்புள்ள ஜெ,

இதை ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் – எனக்கே தெரியவில்லை.  ஆனால் இதை எனக்குச் செய்தியாகத்தான் சொல்ல வரும்.  நீங்கள் எடுத்துக் கூறினால் நிறைய மனங்களில் நன்றாகப் பதியும்படி சொல்வீர்கள்.  ஆகவே உங்களுக்கு எழுதுகிறேன்.

இன்று ஒரு விழாவுக்குச் சென்றிருந்தோம்.  ஒரு நண்பர் அரபு நாட்டில் வேலை செய்பவர்.  சென்னைக்கு அருகில் உள்ள தன் கிராமம் ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்  13 பேரை ஒருங்கிணைத்து 3 ஆசிரியர்களை (இருவர் கல்லூரி மாணவியர்) கொண்டு அவர்களை வீடு வீடாகச் சென்று இழுத்து வந்து படிக்க வைத்தார்.  அவரது ஆசிரியை முதல் சில நல்ல மனிதர்களின் உதவியும் அவருக்குக் கிடைத்தது.  நம் ஸ்ரீனிவாசனும் 3 நாட்கள் சென்று ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தார்.  ஒரு சில குழந்தைகள் தேர்ச்சி பெறுவார்களா என்று கவலை இருந்தது.

வெள்ளியன்று வெளியான தேர்வு முடிவுகளில் இவர்கள் அனைவரும் பாஸ் ஆகிவிட்டனர்.  இதை நிறுவிய அந்த நண்பர் ஒரு பகட்டுக்காகவோ, புகழுக்காகவோ இதை செய்யவில்லை.  அவர் இன்று அந்தக் குழந்தைகள் அனைவருக்கும் பரிசும் சான்றிதழும் வழங்கி இந்தப் பணியைத் தொடர்வதற்கு மாணவர் பெற்றோர் அனைவரின் ஒத்துழைப்பையும் கோரினார்.  வேறு எவரிடமிருந்தும் பண உதவி பெறவில்லை.  இதை விளம்பரப் படுத்தவில்லை.  அவர் மனைவி, மகன், மகள் மூவரும் முழு மனதுடன் அவரின் இந்தப் பணியில் துணை நிற்கின்றனர்.  அவர்கள் எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காமல் செய்யும் இந்தத் தொண்டு,எனக்குக் கெத்தேல் சாஹிப்பை நினைவு படுத்தியது.

இவர்களைப் போன்ற மனிதர்கள் மானுடத்தின் மேல் நம் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறார்கள்.  இவரது சேவையின் முழு விபரமும் ஊட்டி சந்திப்பின் போது பகிர்ந்து கொள்வேன்.  ஆனால் இதைப் பற்றி ஒரு சிறு குறிப்பாவது உடனே உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றியது.  விழாவிலிருந்து வந்தவுடன் எழுதுகிறேன்.  மனம் நிறைவாய் உள்ளது.

அன்புடன்

சுதா

அன்புள்ள சுதா

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கேரள அரசில் உயர் பதவியில் இருந்தவர். ஊர் திரும்பி இங்கே விவசாயம் செய்துகொண்டிருந்தார். அவர் என் அப்பாவிடம் சொன்னார், கடைசியாக முடிவெடுத்துக் கிளம்பிய நாள் என் வாழ்க்கையின் பொன்னாள் என்று. முடிவெடுக்கப் பல நாள் ஆகியது. ஆனால் அந்த நாளில் அவர் வேலையை உதறிக் கிளம்பி வந்தபோது அடைந்த உச்சத்தை வாழ்க்கையில் பிறகெப்போதுமே அடைந்ததில்லை என்றார்

எனக்கு எப்போதுமே அத்தகைய தொடக்கங்களைப் பிடிக்கும். பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் அதை எழுதியிருக்கிறேன்

உங்கள் நண்பர்களின் அந்த தொடக்க தினம் என் கற்பனையில் விரிகிறது

ஜெ

முந்தைய கட்டுரை‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்
அடுத்த கட்டுரைலண்டனில் ஒரு நினைவுச்சின்னம்