ஒண்டேரியோ அருங்காட்சியகம்

நேற்றுக் காலை உஷா மதிவாணன் குடும்பத்துடன் ராயல் ஒண்டேரியோ மியூசியம் சென்றிருந்தோம்

. பொதுவாகப் பயணங்களில் நான் மிக விரும்புவதே அருங்காட்சியகங்களைத்தான். இந்திய அருங்காட்சியகங்கள் பலவற்றில் நெடுநேரம் செலவிட்டிருக்கிறேன்.

பொருட்களின் எண்ணிக்கையை முக்கியமாகக் கொண்டால் ஹைதராபாத் சாலார்ஜங் மியூசியம் மிக பிரம்மாண்டமானது. பிரிட்டிஷ் ராஜ் காலகட்டத்தின் ஒரு காட்சிச் சித்திரத்தை அளிப்பது. கலைப்பொருட்களின் மதிப்பை வைத்து பார்த்தால் டெல்லி நுண்கலை அருங்காட்சியகம் முக்கியமானது. தொல்பொருட்களின் முக்கியத்துவத்தை வைத்துப் பார்த்தால் மதுரா அருங்காட்சியகம் முக்கியமானது.

இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான அகழ்வைப்பகங்களில் அற்புதமான கலைச்சின்னங்கள் தூக்கிக் கடாசப்பட்டிருக்கும். உதாரணமாகக் காவல்கோட்டம் முகப்பு அட்டையில் உள்ள ஒரு கற்சிற்பம் மிக முக்கியமான ஓர் ஆவணமும் கூட. நவகண்டம் என்ற, தன் தலையைத் தானே கொய்து களப்பலியாகும் சிலை அது. தமிழகத்தில் அத்தகைய சிலை சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது. ஆனால் இந்தச்சிலையில் அதைச்செய்வது ஒரு பெண். அபூர்வமான இச்சிலை நல்கொண்டா அகழ்வைப்பகத்தில் திறந்தவெளியில் கிடக்கிறது. நாங்கள் இந்தியப்பயணம் சென்றபோது வசந்தகுமார் அதை புகைப்படம் எடுத்தார்

அருங்காட்சியகங்களில் தொடர்ச்சியாகப் பார்க்கும் கலைப்பொருட்களும் வரலாற்றுப்பொருட்களும் நினைவில் தங்குவதில்லை, ஆகவே அவற்றை பார்ப்பதில் பயனில்லை என்று சொல்பவர்கள் உண்டு. நானே அப்படி உணர்ந்திருக்கிறேன். ஆனால் அது உண்மையல்ல என்பதே என் அனுபவம். அருங்காட்சியகங்களை மட்டுமே பார்ப்பது கண்டிப்பாகப் பயனற்றது. கூடவே வாசித்துக்கொண்டுமிருந்தால் நாம் அருங்காட்சியகத்தில் எப்போதோ கண்ட பொருட்கள் நம் நினைவுகளுடன் வந்து பொருந்திக்கொள்ளும் அற்புதத்தை உணர முடியும். அவை நம் அகச்சித்திரத்தை எளிதாக முழுமைசெய்துவிடுவதைக் காணலாம்.

நாம் ஒன்றைக் கண்ணால் பார்க்கும்போது நினைவுக்கு மட்டும் அல்ல அகமனமும் அதை பதிவுசெய்துகொள்கிறது. அந்த அகமனப்பதிவே முக்கியமானது. எழுத்தாளனைப்பொறுத்தவரை அப்படி அவன் பார்க்கும் பலநூறு பொருட்கள் எங்கோ தேங்கிக்கிடந்து கலந்து உருமாறி அவனுடைய கனவிலும் புனைவிலும் வந்து இடம்பெறுகின்றன. நமக்குள் இருக்கும் அந்த கனவுத்தேக்கத்தை நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. அது எழுத்துக்கான வைப்புநிதி. என்னைப்பொறுத்தவரை பயணம் என்பது அதற்காகவே.

ரோம் எனப்படும் ராயல் ஒண்டோரியோ மியூசியத்தை அமெரிக்காவில் நான் கண்ட மகத்தான அருங்காட்சியகங்களுடன் ஒப்பிட்டால் சிறியது என்றே சொல்வேன். ஆனாலும் சாதாரணமாக இந்திய அருங்காட்சியகங்களில் காணமுடியாத பல பொருட்கள் இங்குள்ளன. 2001ல் சுமதி ரூபனுடன் இங்கே வந்திருக்கிறேன்.அதன் முகப்பிலுள்ள பொருட்கள் அந்த நினைவைச் சட்டென்று உருவாக்கின. இப்போது அருங்காட்சியக வாசலைப் பின்நவீனத்துவ கட்டிடமாதிரியில் மாற்றிக் கட்டியிருக்கிறார்கள். அழகாக இல்லை, விசித்திரமாக இருந்தது.

கூடத்தில் வைரோசன புத்தரின் [ஒளிவடிவ புத்தர்] பிரம்மாண்டமான வெண்கல திருமேனி ஒன்று உள்ளது. சீனாவின் மிங் வம்ச காலகட்டத்தைச் சேர்ந்தது. மணிமுடியுடன் அலர்தாமரை முத்திரையை சீன பாணியில் காட்டும் புத்தர். ஒரு நெசவாளி மூவாயிரம் வருடம் முன்பு செத்துப்போனபோது குடும்பத்தினர் அமைத்த மம்மியின் சவப்பெட்டி இன்னொரு முக்கியமான பொருள்.

வலப்பக்கமாகச் சென்று இங்கே உள்ள எல்லா அருங்காட்சியகங்களிலும் காணப்படும் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பகுதியை பார்த்தேன். கடுங்குளிரில் வாழ்வதற்குரிய தோல் உடைகளை விதவிதமாக உருவாக்கியிருக்கிறார்கள். மணிகோர்த்து அலங்கரிக்கப்பட்ட சப்பாத்துக்கள்,விதவிதமான பின்னலாடைகள். இன்றைய குளிருடைகளின் அமைப்பும் அலங்காரமும் அவற்றில் இருந்து அதிகமொன்றும் முன்னகரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

செவ்விந்தியர்கள் போர்களாலும் நோய்களாலும் முற்றாக அழிக்கப்பட்ட போதே பல வெள்ளையர் செவ்விந்தியர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையைப்  பாதுகாக்கவும் அவர்களுடன் சமரசம் செய்யவும் முயன்றிருக்கிறார்கள். அருங்காட்சியகத்தின் பல பொருட்கள் நேச ஒப்பந்தத்தின்போது செவ்விந்தியத் தலைவர்கள் அன்புப்பரிசாகக்  கொடுத்தது .

இங்குள்ள கீழைநாட்டுக் கலைப்பொருட்கள் பிரிவிலும் மத்திய ஆசிய கலைப்பொருட் பிரிவிலும் ஆப்ரிக்க கலைப்பொருட்பிரிவிலும் விரிவாக உலவினோம். ஆப்ரிக்காவின் முகமூடிகளும், பழங்குடித்தெய்வங்களும்,மத்திய ஆசியாவின் மண்பாண்டங்களும், வெண்களிமண் பொருட்களும்,கீழை நாட்டு புத்தர் சிலைகளும் முக்கியமானவை. சீனாவின் மரச்சிற்பங்களில் சீனமுகம் உள்ள புத்தரும் அவர்களின் போதிசத்வர்களும் பளபளப்பான பொன்னிற- நீலநிற அலங்கார வேலைப்பாடுகளுடன் அமர்ந்திருந்தனர். சீனாவின் அருமையான கலைப்படைப்புகள் வெண்களிமண்ணால் செய்யப்பட்டவை. உலோகமூலங்களைக் கலந்து செய்து அவற்றைச் சுட்டுத் தேய்த்து அழியா நிறங்களை உருவாக்குகிறார்கள். அவர்களின் காவல்தேவதைகளின் ஆடைகளில் உள்ள நுட்பமான அலங்கார வேலைப்பாடு பிரமிக்கத்தக்கது.

சீனாவில் நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு போர்வீரரின் சமாதியை விலைகொடுத்து வாங்கிப் பெயர்த்து அப்படியே கொண்டு வந்து வைத்திருக்கிறாகள். அவரது மெய்க்காவல்படையைச் சிறிய வண்ணக்களிமண் சிற்பங்களாகச் செய்து கூடவே புதைத்திருக்கிறார்கள்.

ஐந்தரைக்கு அருங்காட்சியகம் மூடியபின் வெளிவந்து அங்கே ஒரு விடுதியில் காப்பி சாப்பிட்டேன். டவுன் டவுன் எனப்படும் மைய நகரத்தின் போதையடிமைகளில் ஒருவர் பத்தடிக்கு ஒருமுறை நின்று நின்று செல்வதைக் கண்டேன்.

மாலை ஆறு மணிக்கு சேரனைச் சந்திக்கச் சென்றோம். அருகே தான் அவரது வீடு. சேரனின் நாலு வயதான இரட்டைக் குழந்தைகள் எல்லோன், அஞ்சனி இருவரும் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டார்கள். சேரன் ஒரு நாய் வளர்க்கிறார். சென்றமுறை அவருடன் நான் ஒண்டோரியோ ஏரிக்குச்  சென்றிருந்தபோது அந்நாய் இரண்டு வயதாக இருந்தது. இப்போது பன்னிரண்டு வயது. லாசா எனப்படும் திபெத்திய வகை குட்டிநாய். சடை தொங்கும் முகம் கொண்டது. புத்திசாலியான செல்லநாய் அது. வீட்டுக்கு வருபவர்களிடம் கொஞ்சியே பழகியது.

டாம் சிவதாசனும், ஓவியர்- புகைப்படக்காரர் கருணாவும் வந்தார்கள். இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இந்திய அரசியல், இலங்கை அரசியல். நேற்று சேனல் ஃபோர் தொலைக்காட்சி வெளியிட்ட ஈழப்படுகொலைகள் பற்றிய ஆவணப் பதிவைப் பற்றியே அதிகமும் பேசினோம்.

 

முந்தைய கட்டுரைகுலக்கல்வி,கலைகள்-கடிதம்
அடுத்த கட்டுரைநயாகரா