நேற்றுக் காலை ஒன்பது மணிக்குக் கிளம்பி டொரொண்டோவில் இருந்து மூன்றரை மணிநேரத் தொலைவில் இருக்கும் ஆயிரம் தீவுகள் என்ற இடத்தைப் பார்க்கச்சென்றோம். செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் இருக்கும் ஆற்றிடைக்குறைகளின் தொகுப்பு அது.
லட்சத்தீவுகள் போல ஒரு மங்கல வழக்காக அந்தப்பெயர் இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே ஆயிரம் தீவுகள் இருக்கலாமென நேரில் பார்த்தபோது தோன்றியது. சில தீவுகளில் ஒரு ஆணும்பெண்ணும் நெருக்கமாக நின்று முத்தமிட்டுக்கொள்ளலாம் என்ற அளவுக்கே இடமிருந்தது. ஒரு மரமும் ஒரு நாற்காலியும் மட்டும் போடப்பட்டுக் காத்திருந்த தீவு ஒன்றையும் பார்த்தேன்.
ஆயிரம் தீவுகள் ஒருகாலத்தில் கேட்பாரற்றுக் கிடந்திருக்கின்றன. இரண்டு டாலருக்குக் கூட அவற்றைச் சிலர் வாங்கியிருக்கிறார்கள். இன்று அவற்றின் விலை பல லட்சம். ஆறு அங்கே பிரம்மாண்டமான ஒரு தேக்கமாக ஆகிக் கருநீல நிறத்தில் நிறைந்து சூழ்ந்திருக்கிறது. தீவுகள் இப்பகுதிக்கே உரிய சில்லுப்பாறைகளாலும் வெண்மண்ணாலும் ஆனவை. அவற்றில் குட்டையான மரங்கள் அடர்ந்து செழித்து நிற்க,நடுவே கோடைகால வீடுகளை விதவிதமாகக் கட்டி வைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு அழகு. பெரும்பாலான வீடுகள் இன்னும் கோடைக்கான மனநிலைக்கு வராமல் ஆளில்லாமல் கிடந்தன. ஆளில்லாத வீட்டின் தனிமை,ஒரு சோகத்தை நமக்கு ஊட்டுவது. நீருக்கு அடியில் செல்லும் இணைப்புகள் வழியாக அங்கே எரிவாயு,மின்சாரம்,தொலைபேசி எல்லாம் உண்டு என்றார்கள்.
முதலில் ஓர் உற்சாகத்தையும் பின்பு மெல்ல ஒரு அமைதியையும் உருவாக்கிய படகுப்பயணம். அந்தத் தீவுகள் ஆளில்லாதவையாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அங்கே வரும் வரை கனடாவின் காலியான கிராமப்புறங்கள் வழியாக வந்தபோது அந்தக் கூட்டமில்லாத தன்மை ஒரு வெறுமையை அளித்தது. இந்தியாவில் இருந்து இங்கே வந்தால் நாம் முதலில் உணர்வதே இந்தக் ‘காலியான’ தன்மையைத்தான். எங்கே திரும்பினாலும் மனிதர்களைப் பார்த்துப் பழகியவர்கள் நாம். ஆனால் ஆயிரம் தீவுகளில் தீவுகள் முழுக்க வீடுகளால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கக் கண்டபோது எந்த அழகையும் சொந்தமாக ஆக்கிக்கொளும் அவர்களின் மனநிலையையே காணமுடிந்தது
ஆயிரம் தீவுகள் அருகே கிங்க்ஸ்டன் என்ற கிராமத்தில் அழகான பழைய சர்ச்சுகள் சில இருந்தன. இந்த சில்லுப்பாறைகளையே கொண்டு கட்டியவை. ஆனால் நன்கு பாலீஷ் ஆகி அவை உலோகம் போல மின்னின. ஒரு அழகிய தபால் நிலையத்தைக் கண்டு தபால் ஊழியையான அருண்மொழி பரவசமானாள். ஆனால் அது பூட்டிக்கிடந்தது.
திரும்பி வரும் வழியில் கடுமையான மழை. நான் கொஞ்சம் தூங்கிவிட்டேன்.