வாசகர் கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

உங்கள் இணையதளம் வழியாக தொடர்ந்து உங்களை வாசித்துக்கொண்டு உரையாடிக் கொண்டு அறிவும் பெற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்கு நன்றிகள் பல பல.

இப்பொழுது, youtube யில் கவிஞர் வீரான்குட்டியுடன் இலக்கிய உரையாடல் மற்றும் உங்கள் மொழியாக்கம் மொழியாக்கம் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன். இந்த நிகழ்வு எனக்கு ஆச்சரியத்தையும் சிறிது உணர்ச்சிவசப்பட்டு என் கண்களில் நீர் தளும்பியது.

கவிஞர் வீரான்குட்டி, அவர் மலையாளத்தில் பேசும் போது, நீங்கள் தலைசாய்ந்து ஒரு பேனாவை பிடித்து அட்டையில் மாணவன் பரீட்சை எழுதுவதைப் போல எழுதி எங்களுக்காக மீணடும் தமிழில் பேசும் போது ….no way sir. வேறு யாராவது வைத்து கூட செய்திருக்கலாம். ஆனால் அவரை கவுரவிக்கும் பொருட்டு நீங்களே உட்கார்ந்து மொழிபெயர்த்து, எங்களுக்கு வழங்கியது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய, மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. Great great inspiration for me and us.

மேலும், இன்றைக்கு இணையதளத்தில் வந்துள்ள ஆசிரியை ரம்யாவின் ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்’ எழுதிய கட்டுரை தமிழ் இலக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு கட்டுரையாக நான் நினைக்கிறேன். அவர் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள், தலைப்புகள் மற்றும் சிறுகதைகளைப் பற்றிய அவர் எழுதிய விரிவான தகவல் மற்றும் கருத்துக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

முடிவாக , உங்கள் தொண்டை வலி இப்போது சுகமா? உங்கள் நலன் விழையும் வாசகன். நன்றி, வணக்கம்.

ராஜா வினோபா.

****

அன்புள்ள ஜெ

உங்கள் இணையதளத்துக்கு இப்போதுதான் அறிமுகமாகிறேன். எனக்கு படிக்கப்படிக்க தீராத அனுபவமாக உள்ளது. நான் தேடும் ஒவ்வொரு தலைப்பிலும் ஏராளமான கட்டுரைகள் உள்ளன. நான் ஒரே ஒரு தலைப்பில் படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவில் இருந்து தொடங்கி அறிவியல் கதைகள் வழியாக ஆழ்வார் பாடல்கள் வழியாக ஒரு முழு ரவுண்டு வந்து வாசித்தேன். இதன் நடுவே தமிழ் விக்கி. இத்தனை பிரம்மாண்டமான வாசிப்புலகை அறியாமல் இருந்துவிட்டோமே என்னும் எண்ணம் உருவாகியது.

அழகு விமலா

***

முந்தைய கட்டுரைசங்கொலி – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபக்தி