என் ஆணவம்

சியமந்தகம் இணைய தளத்தில் தொடர்ச்சியாக என்னைப்பற்றி நண்பர்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவற்றை உடனடியாக நான் படிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட மனநிலையில் படிக்கிறேன். கூடுமானவரை அவை அளிக்கும் உணர்ச்சிகளை என்னிலிருந்து விலக்கிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

தமிழில் ஒரு எழுத்தாளருக்கு முன்பெப்போதும் இத்தனை பெரிய பாராட்டுகள் நம் சூழலில் இருந்து வந்ததில்லை. தமிழில் மாபெரும் வணிக நட்சத்திரங்களாக இருந்த எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் விருதுகளும் அங்கீகாரங்களும் பெற வாய்த்ததுண்டு. ஆய்வேடுகள் அவர்களைப்பற்றி எழுதப்பட்டதுண்டு. கருத்தரங்குகளும் மாநாடுகளும் அவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு நடத்தப்பட்டதும் உண்டு. ஆனால் இத்தனை ஆத்மார்த்தமான உணர்ச்சிகரமான பாராட்டுரைகள் அவர்களுக்கு மிக அரிதாகவே வந்திருக்கும்

இன்று எழுத்தாளர்களைப்பற்றிய விக்கி பீடியா பதிவுகளுக்காக அவர்களைப்பற்றி எழுதப்பட்டவற்றை பேசப்பட்டவற்றைப் பார்க்கும்போது பெரும்பாலானவை ஒருவகை சம்பிரதாய உரைகளாக இருப்பதைக்காண்கிறேன். அவர்கள் முன்வைக்கும் அந்த பாராட்டுரைகளிலிருந்து அந்த ஆசிரியனை வகுத்துச் சொல்லக்கூடிய சரியான ஒரு  பத்தியை எடுத்து தமிழ் விக்கிக்குப் பயன்படுத்துவதே மிக கடினமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் இத்தகைய ஆழ்ந்த எதிர்வினைகள் மிக அரிதானவை

ஆனால் எனக்கு நானே அந்தச் சொற்களுக்கு எதிர்வினையாற்றக்கூடாது என்று ஆணையிட்டுக்கொள்கிறேன். அவற்றுக்கு உடனடியாக என்னிலிருந்து எதிர்வினையாற்றுவது என்னுடைய ஆணவம்தான். அந்த எதிர்வினை என்னை முட்டாளாக ஆக்கிவிடக்கூடும். ஆன்மிகமாக மிகச்சிறியவனாக ஆக்கிவிடக்கூடும் அது பிறிதொருவனே என்று நான் எனக்கு சொல்லிக்கொள்கிறேன். அது எழுதுபவனை எழுதும் கணங்களில் திகழ்பவனை நோக்கி எழுதப்படுவது. நான் வேறொருவன். நான் இங்கிருக்கிறேன். நான் எனது ஆசிரியர்களின் மாணவன் என்று அன்றி வேறெப்போதும் என்னைப்பற்றி பெருமிதம் கொள்ளலாகாது என்று சொல்லிக்கொள்கிறேன்.

ஆனால் இது எளிய செயல் அல்ல. இதை சொல்லும்போதே இதிலொரு உணர்ச்சிகரம் வந்துவிடுகிறது. அந்த உணர்ச்சிகரமேகூடச் சற்று பொய்யானது. ஆயினும் திரும்ப திரும்ப அதை சொல்லிக்கொண்டு தான் இதைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் என்னை இங்கு நிறுத்திவிட எண்ணுபவன் அல்ல. ஆற்ற வேண்டிய அனைத்தையும் ஒவ்வொரு நாளும் எதிர்காலத்தில் பார்த்துக்கொண்டிருப்பவன். ஆற்றியவற்றிலிருந்து கூடுமானவரை முழுமையாக என்னை விலக்கிக்கொண்டிருப்பவன். மேலும் செயல்படுவதற்கான ஆற்றலாக என்னிடம் இருப்பது அதுதான்.

எனில் என்னிடம் ஆணவம் இல்லையா? மிக ஆணவம் கொண்ட ஒருவனாகவே நான் இச்சூழலில் அறியப்பட்டிருக்கிறேன். அது எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு வரும் கடிதங்கள் அதை சுட்டிக்காட்டுவதும் உண்டு. இருவகையில் அந்த ஆணவத்தை எனது வாசகர்கள் அல்லது எனது நண்பர்களான எழுத்தாளர்கள் உணர்ந்திருக்கலாம்.

ஒன்று நான் என்னை முன் வைக்கும் விதத்தில் உள்ள தன்நிமிர்வு.  இந்நூற்றாண்டின் தமிழின் தலைசிறந்த எழுத்தாளன் என்றும், இன்று உலகில் வாழும் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன் என்று மட்டுமே நான் என்னை எப்போதும் முன்வைக்கிறேன். எனது எழுத்துக்களை படிக்காதவர்களும், படித்து உணராதவர்களும் அது  ஒரு அபத்தமான தற்பெருமைக்கூற்றென்று நினைக்கலாம் என மிக நன்றாகவே எனக்குத் தெரியும். அதை ஏற்காத சீரிய வாசகர்களும் சிலர் இருக்கலாம்.

இரண்டு, நான் எனது சமகாலத்தை விமர்சனம் செய்து கொண்டு வகுத்துரைத்துக்கொண்டும் மதிப்பிட்டுக்கொண்டும் இருக்கிறேன். இப்படி விமர்சனம் செய்வதற்கும் மதிப்பிடுவதற்கும் நான் யார் எனும் கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது. இலக்கிய படைப்புகளை இலக்கிய ஆளுமைகளை நான் மதிப்பிடுகிறேன். இலக்கியம் சாராத சமூக அரசியல் விஷயங்களை முன்வைக்கிறேன். அவற்றில் வெளிப்படும் ஆணவம் குறித்து சாதாரண வாசகர்கள் எப்போதும் எரிச்சலடைகிறார்கள்.

நான் என்னில் பிறர் உணரும் ஆணவம், நானே என்னில் உணரும் ஆணவம் என இரண்டை அறிகிறேன். எனது இரண்டு வகையான ஆணவங்களையும் ஒன்றிலிருந்து ஒன்று விலக்கிக்கொள்ளவே முயல்கிறேன். தனிப்பட்ட முறையில் ஆணவம் கொண்டவனாக நான் இருக்க விரும்பவில்லை. அது அளிக்கும் சிறுமை என்னை சூழலாகாதென்றும் அதனூடாக நான் எனக்கே ஒரு கேலிக்குரிய ஆளுமையாக ஆகிவிடக்கூடாதென்றும் எப்போதும் கவனமாக இருக்கிறேன். மறுபக்கம் ஒரு படைப்பாளியாக எத்தனை நிமிரமுடியுமோ அத்தனை நிமிர்ந்து இக்காலகட்டத்தின் முன் நிற்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

இதை படைப்பாணவம் என்று திரும்பத்திரும்ப நான் சொல்லிக்கொள்கிறேன். அது எனது முன்னோடிகளிடமிருந்து நான் பெற்றது. பி.கே.பாலகிருஷ்ணனோ ஜெயகாந்தனோ சுந்தர ராமசாமியோ அந்நிமிர்வின் வடிவங்களாகவே எனக்கு அறிமுகமானார்கள். அது கலையிலக்கியங்களில் எந்த மதிப்பும் இல்லாதவர்களும், உண்மையில் கலையிலக்கியங்களைக் கண்டால் அகத்தே எரிச்சல்கொள்பவர்களும் நிறைந்த இச்சமூகத்தின் முன் நிற்கும்போது உருவாகும் உளநிலை.

அறிவார்ந்தும் ஆன்மீகமாகவும் பின்தங்கிய ஒரு மூன்றாமுலக தேசத்தின் பண்பாட்டின் முன் நின்று ஓர் எழுத்தாளன் கொள்ள வேண்டிய தன்னிலை அது. அந்நிலையில் மட்டுமே அவன் செயல்பட முடியும். சூழ ஒலிக்கும் சிறுமைகளுக்கு சற்றே செவிகொண்டால் வெறும் சோர்வே எஞ்சும், செயல்கள் நின்றுவிடும்.

எண்ணிப்பாருங்கள், ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் பெரும் தவமென இயற்றி ஒரு படைப்பை எழுதிய பிறகு அதைப்புரட்டி கூடப் பார்க்காமல், அதன் உள்ளடக்கம் என்னவென்று அறிய எளிய முறையில் கூட முயலாமல், அசட்டுத்தனமான கருத்துக்களை சொல்லும் ஒருவனை எதிர்கொள்வதற்கு எழுத்தாளனுக்கு வேறு கருவிகள் என்ன? இச்சூழலில் அவன் தருக்கி நிமிர்ந்தாலொழிய இலக்கியம் படைக்க முடியாது. இச்சூழலை நோக்கி அவன் தன் கருத்துக்களை சொல்வதற்கு அந்தப்படைப்பாணவம் மிக இன்றியமையாதது.

தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களிடம் கருத்து கேட்பதில்லை. அவன் கருத்துக்களுக்கு எவரும் செவி கொடுப்பதும் இல்லை. தமிழ்ச் சூழலின் மனநிலை என்பது அதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதிகள், புகழ்பெற்ற திரைநடிகர்கள், பெரும் செல்வந்தர்கள் மட்டுமே ஏதேனும் கருத்து கூற தகுதி கொண்டவர்கள் என நம்புவது. பிறர் கூறும் கருத்துக்களைக்கேட்டு உண்மையிலேயே அவர்கள் துணுக்குறுகிறார்கள். கருத்து சொல்ல இவன் யார் என்கிறார்கள். எரிச்சலும் நிலையழிவும் கொள்கிறார்கள். அக்கருத்தை கவனிப்பதில்லை, அதைச் சொன்னவனை சிறுமைசெய்யவும் ஏளனம் செய்யவும் முன்னால் வருகிறார்கள்.

சென்ற முப்பதாண்டுகளில் எப்போதெல்லாம் சமூகம், அரசியல் குறித்து நான் கருத்து சொல்லியிருக்கிறேனோ அப்போதெல்லாம் பெரும்பான்மையான மக்கள் ’யாரிவன்?’ என்று பதற்றத்துடன் கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் கூட, வெண்முரசு எனும் நாவலை எழுதியபின்னும் கூட, மகாபாரதம் பற்றி நான் சொன்ன ஒரு கருத்து பொதுவெளியில் உள்ளவர்களால் நேர்கொள்ளப்படும்போது  ‘யாரிவன்?’ என்ற கேள்வி பெருகி வருகிறது. நம் சூழலின் நிலை இது.

இருந்தும் ஓர் எழுத்தாளன் என நான் என் கருத்துக்களை கூறியாகவேண்டும். எழுத்தாளனின் பணி என்பது சமூக விமர்சனமே. சமூகம் விரும்பும் கருத்துக்களை கூறுவதல்ல. சமூகத்தை தன் கருத்துக்களால் மகிழ்வித்து எதையும் பெற்றுக்கொள்வதல்ல. வாக்கோ பணமோ அல்ல. எழுத்தாளனின் நோக்கம் என்பது முதன்மையாக நேர்மையான சமூக விமர்சனம் மட்டுமே. ஒருவகையில் சமூகத்தை சீண்டுவதும், சிந்திக்கவைப்பதும் அவன் பணி.

எழுத்தாளன் நின்றுகொண்டிருக்கும் இடம் என்பது ஒரு சமூகம் நின்றிருக்கும் அறத்தின், சிந்தனையின் சராசரியிலிருந்து பல மடங்கு முன்னால் சென்றிருப்பது. அச்சமூகத்தின் சிந்தனையாளர்கள் எவரும் அவனுக்கு இணையாக உடன் வருவதில்லை. உயர்தத்துவவாதியுடனும் கவிஞனுடனும் மட்டுமே எழுத்தாளனுக்கு உரையாடல் உள்ளது. சமூகம் கொண்டிருக்கும் சராசரி சிந்தனைகளிலிருந்து பல மடங்கு காலத்தாலும் பார்வையாலும் முன்னால் சென்றுவிட்டிருப்பவன் எழுத்தாளன்.

ஆகவே அவன் தன் பார்வையை முன்வைக்கும்போது அச்சமூகம் அதிர்ச்சியும் ஒவ்வாமையும் கொள்வது இயல்பே. அவர்கள் அவன் மீது மதிப்பில்லாதவர்கள், அவன் எவர் என்றே தெரியாதவர்கள் எனில் அவர்கள் எதிர்வினையாற்றுவது மிக கீழ்நிலையிலேயே இருக்கும். எப்போதுமே இழிவுபடுத்துவது, அவதூறு செய்வது, ஏளனம் செய்வது என்பதாகவே இருக்கும்.

முப்பதாண்டுகளுக்கு முன்னரே அதை எவ்வண்ணம் நிகழும் என்பதை மிக நன்றாக அறிந்த பிறகுதான் நான் எழுதவே தொடங்கினேன். ஏனென்றால் நான் இப்போது சொல்வதை சுந்தர ராமசாமி திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். ‘மேதைகளை கண்ணீர்விடவைத்த சமூகம் இது’ என ஒரு கட்டுரையில் சொல்கிறார். ஆகவே நான் எதிர்பாராத எதையும் இச்சமூகம் எனக்கு இதுவரை அளித்துவிடவில்லை. இச்சமூகத்தில் இருந்து எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. பணம், பரிசு எதையும்.

ஓர் எழுத்தாளனாக என்னுடைய தரப்பை சலிக்காமல் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்ற உறுதி என்னுள் இருக்கிறது. அதற்கு என்னுடைய படைப்பாணவம் மிக இன்றியமையாதது. இந்த அறிவுச் சார்பற்,ற அறிவு எதிர்ப்பு கொண்ட சமூகத்தை பார்த்து அவர்களின் தலைக்கு மேல் நிமிர்ந்து நின்று நான் எழுத்தாளன் என்று சொல்லும்போது நான் என்னை மட்டும் உத்தேசிக்கவில்லை. நான் முன்வைப்பது என்னுடைய ஆளுமையை மட்டும் அல்ல. நான்  முன்வைப்பது எழுத்தாளன் என்னும் அடையாளத்தை. புலவன் என்று, எழுத்தாளன் என்று உலகம் முழுக்க ஈராயிரமாண்டுகளில் உருவாக்கிவைக்கப்பட்டிருக்கும் ஓர் ஆளுமைச்சித்திரத்தை. கபிலர், வள்ளுவர், கம்பர் முதல் வரும் ஒரு முகத்தை.

அதை தமிழர்கள் அறியமாட்டார்கள். அவர்களில் ஒரு சிலரையேனும் அப்படி ஒரு ஆளுமை உண்டென்றும் அது கவனிக்கப்படத்தக்கதென்றும் மதிக்கப்படத்தக்கதென்றும் அறிவுறுத்த  இந்த நிமிர்ந்த குரலால் முடியுமென்று நான் எண்ணினேன். முப்பதாண்டுகளில் அது அவ்வாறு நிகழ்ந்ததை என் கண்ணால் பார்க்கவும் செய்தேன். என்னைச் சூழ்ந்திருக்கும் தீவிரமான வாசகர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் அந்த நிமிர்வை நம்பி என்னை அணுகியவர்கள். அந்நிமிர்வைக் கொண்டு எழுத்தாளன் என்றால்  உயர்ந்த ஆளுமை என்பதை புரிந்துகொண்டவர்கள். தாங்களும் அந்த நிமிர்வை அகத்தே அடைந்தவர்கள். ஆகவே எச்சூழலிலும் தனித்து நிற்க, தன்வழியே செல்ல துணிவு கொண்டவர்கள்.

எழுத்தாளன் என்னும் ஆளுமைக்கெதிரான நக்கல்களும் காழ்ப்புகளும் எங்கிருந்தெல்லாம் வருகின்றன என்பதை சமூக வலைத்தளங்களை ஒரு முறை சுற்றி வந்தாலே காண முடியும். பாமரர்கள், ஒன்றும் அறியாதவர்கள், தங்கள் இயல்பான அறிவெதிர்ப்பு மனநிலையை கைக்கொள்கிறார்கள். கூடவே அறிவுச் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர்களில் சிலரும் உள்ளனர். அவர்கள்  வெற்று அறிவாளிகள். மிக மேலோட்டமாக எதையாவது செய்து கொண்டிருப்பவர்கள். எழுத்தாளன் என்ற ஆளுமையின் ஆழுளம் சார்ந்த தீவிரத்தை புரிந்துகொள்ள முடியாதவர்கள்.

அவர்கள் எழுத்தாளனை தொடர்ந்து சிறுமைப்படுத்தவும் எதிர்க்கவும் முயல்வார்கள். அவன் கருத்துக்களை திரிக்க முயன்றுகொண்டே இருப்பார்கள். ஏனெனில் ஒரு வெற்று அறிவாளியின் இடத்தை எழுத்தாளர்கள்தான் தொடர்ந்து கேள்விக்குள்ளாகுகிறார்கள். உலகமெங்கும் படைப்பிலக்கியவாதிகளுக்கு எதிராக மேலோட்டமாக வெற்றிலக்கியவாதிகள்  கூச்சலிட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதற்கான கருவிகள் அவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் ஆய்வு என்றும் கோட்பாடு என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையில் அது நெடுங்காலமாக குதர்க்கம் என்று சொல்லப்படும் ஒருவகையான தர்க்க முறைதான். எந்த ஒரு படைப்பிலிருந்தும், எக்கருத்திலிருந்தும் தனக்குரிய ஒன்றை திரித்து எடுத்துக்கொள்வது அது. அப்படி திரித்து எடுத்துக்கொள்வதற்கு எதிர்வினையாற்றுவது. தர்க்கமற்ற தர்க்கம், அதுவே குதர்க்கம் எனப்படுகிறது.

அதற்கு எந்தவகையான அறிவு மதிப்பும் இல்லை. ஆனால் எல்லாக்காலத்திலும் அது இருந்தது. கம்பனுக்கு எதிராக காளிதாசனுக்கு எதிராக அது நின்றிருந்த கதைகளை நாம் கேட்டிருப்போம். இன்றும் அதே கருவிகள் அவ்வண்ணமே செயல்படுகின்றன. அவர்களை ஓர் அனுதாபத்துடன் அன்றி  பார்க்க முடியாது.  ஏனெனில் அறிவுச்செயல்பாடுக்கான  பெரும்  உழைப்பு அவர்களிடம் இருக்கிறது. ஆனால்  அவர்கள் அதிலிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லை. அறிந்தவற்றை தொகுத்துக்கோள்ளவும் தங்கள் அந்த அறிவாக மாற்றிக்கொள்ளவும் அவர்களால் இயல்வதில்லை. வைக்கோலை தின்ற பசு அதை செரிக்க முடியவில்லை என்றால் அது வைக்கோல்பசுவாக ஆகிவிடும்தானே?

அவர்களிடம் சுய அறிவென்பது இல்லை. ஆகவே அவர்கள் எங்கிருந்தெல்லாமோ அறிவுக் கருவிகளை பெற்றுக்கொள்கிறார்கள். புதிது புதிதாகக் கொண்டுவருகிறார்கள். அதைக்கொண்டு  எழுத்தாளனை உடைத்துவிடலாம் என்று கற்பனை செய்கிறார்கள். இரவு பகலாக அந்த உடைப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். அவ்வப்போது உடைத்துவிட்டோம் என்ற பெருமிதத்தை அடைகிறார்கள். திரும்பத் திரும்ப அவர்களால் எழுத்தாளர்களின் சிலைகளின் மீது ஒரு சிறு கீறலைக்கூட போட முடியவில்லை என்பதையும் காண்கிறார்கள்.

அவர்கள் போரிடுவது எழுத்தாளனுடன் அல்ல, எழுத்தாளன் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் பிம்பத்துடன். அது ஆடிப்பாவையுடன் போரிடுவதுபோல. மேலோட்டமான அறிவாளிகளால் படைப்பிலக்கியவாதியை ஒன்றுமே செய்ய முடியாது என்று வரலாறெங்கும் நிரூபிக்கப்பட்டுவிட்டபோதும் கூட அவர்கள் அதை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை.  அச்செயலினூடாகவே அவர்கள் தங்கள் இருப்பை தங்களுக்குத் தாங்கள் நிறுவிக்கொள்ள வேண்டும். அதனூடாகவே அவர்கள் வாழ்கிறார்கள்

மூன்றாவதாக, ஏதேனும் ஒரு அரசியல் தரப்பை எடுத்துக்கொண்டு அதன் பிரச்சாரமாக தங்களுடைய முழுச்செயல்பாடை ஆக்கிக்கொண்டவர்கள் அவர்களில் அந்த அரசியல் செயல்பாடினூடாக அதிகாரத்தையும் பணத்தையும் அடைபவர்கள் ஒரு சாரார். வெறுமே ஓர் அடையாளத்துக்காக அதில் ஒரு நிலைபாடு எடுத்துக்கொண்டு ஆவேசமாக  அதை முன்வைப்பவர்கள் இன்னொரு சாரார். முதல் சாரார் தெளிவான நோக்கம் கொண்டவர்கள். அதன் பொருட்டு அவர்கள் செய்வது அனைத்தும் திட்டமிட்டவை. அவர்களின் உலகமே வேறு. அவர்கள் இங்கே எவரையேனும் அடிப்பது வேறெங்கோ ஊதியம் பெற்றுக்கொள்ள.

இரண்டாவது சாரார் தனித்து தங்களுக்கென ஒரு சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் திறனற்றவர்கள். திரளாக மட்டுமே சிந்திக்கமுடியும் என்னும் பலவீனம் கொண்டவர்கள். தங்களுக்கு ஆதரவாக பத்து பேர் வராது ஒழிந்தால் பதறிவிடுபவர்கள். அந்த பத்து பேரை சேர்த்துக்கொள்ளும் பொருட்டே அவர்கள் கட்சி நிலைபாடு எடுக்கிறார்கள். ஏதேனும் ஒரு தரப்பை தங்களின் அடையாளமாக சூடிக்கொள்கிறார்கள்.

அவ்வாறு ஒரு தரப்பைச் சூடிக்கொள்ளும்போது முதலில் வருவது அதன் மீதான ஆழ்ந்த அவநம்பிக்கைதான் .ஏனெனில் மனிதன் சூடிக்கொள்ளும் எந்த அடையாளமும் அவனுடையதல்ல.  எதுவும் அவன் மேல் அறுதியாக படிவதும் இல்லை. அதன்மீதான ஆழ்ந்த அவநம்பிக்கை அவனுக்குள்ளே இருக்கும். ஆகவேதான் அவன் திரும்பத்திரும்ப அந்த அடையாளங்களை தானே வலியுறுத்திக் கொள்கிறான். தன் அடையாளத்தை தானே கூவுகிறான். நான் இன்னது நான் இன்னது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

இந்த வகையான கட்சியரசியல், அடையாள அரசியலில் ஈடுபடுபவர்களின் மிகையாவேசக்கூற்றுகளின் ஊற்றுமுகம் இது தான். ஒருபோதும் அடங்காத பேராற்றலுடன் அவர்கள் களத்தில் நின்று கூவிக்கொண்டே இருக்கிறார்கள். முன்பு நாய்களை பற்றிய எழுதிய ஒரு கவிதையில் சுந்தர ராமசாமி ’எங்கிருந்து வருகிறது அந்த அடிவயிற்று ஆவேசம், அந்த ஆவேசத்தின் பொருளின்மையே என்னை அச்சுறுத்துகிறது’ என்று எழுதியிருந்தார். அந்த அடிவயிற்று ஆவேசம் வருவது தன் அடையாளத்தை தானே முன்வைத்து அதனூடாகத் தன்னை தானே முன்வைத்துக்கொள்ளும் வெறியில் இருந்து.

அவர்களின் அந்த ஆற்றல் அதே போன்று மேலும் பலர் சேரும்போது பலமடங்காகிறது. திரள்சக்தியென ஆகும்போது மிகுந்த விசை கொண்டதாகிறது. அவர்கள் இங்கு சூழலில் எழுத்தாளனுக்கு எதிராக பேரோலத்தை எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு காலகட்டம் முழுக்க நிறைக்கும் பெருந்திரளாக ஆனால்கூட, பல லட்சம் குரல்களின் தொகுப்பென ஆனால் கூட, ஒரு தனி எழுத்தாளனின் அடையாளத்திலோ ஆளுமையிலோ ஒரு சிறு கீறலைக்கூட உருவாக்க முடியாது. அத்தனை கூச்சல்களுக்கு பின்னரும் எழுத்தாளன் அப்படியே எஞ்சுவதைக் கண்டு திகைத்து புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள். வரலாறெங்கும் அப்படித்தான். ஏனென்றால் எழுத்தாளன் வாழ்வது வேறொரு களத்தில்

புதுமைப்பித்தனுக்கு எதிராக எழாத கூச்சல்களா ?கநாசுவுக்கும் சுந்தர ராமசாமிக்கும் எழாத கூச்சல்களா ?ஏன் ஜெயகாந்தன் சந்திக்காத கூச்சல்களா? இந்தக் கூச்சல்களால் அவர்கள் ஆளுமை எவ்வகையிலேனும் பாதிக்கப்பட்டிருக்கிறதா ?வரலாறு நெடுகிலும் அது அவ்வண்ணமே உள்ளது. எமிலி ஜோலாவோ டால்ஸ்டாயோ கசன் ஸகீஸோ சந்தித்தது அக்கூச்சல்களைத்தான். கூச்சல்கள் காலத்தில்  மறைந்து அவர்கள் மட்டும் தான் எஞ்சுகிறார்கள்.

ஆனால் அக்கூச்சல்களுக்கு முன்பாக, அக்காலகட்டத்தில் நின்றிருப்பதற்கு எழுத்தாளன் பேருருக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன் வரலாற்று இடத்தை தானே பார்க்கவேண்டியிருக்கிறது. தான் எவ்வண்ணம் எஞ்சுவோம் என உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ‘ஆம், நான் எழுத்தாளன். உங்கள் ஒட்டுமொத்தக் கூச்சல்களை விடவும் மேலானவன். உங்கள் ஒட்டுமொத்த காலத்தின் சக்தியை விடவும் மேலானவன்’  என்று அவன் சொல்ல வேண்டியிருக்கிறது

நான் முன்வைப்பது என்னையல்ல. எழுத்தாளன் என்னும் இருப்பை. எழுத்தாளன் என்னும் கால நிகழ்வை. அப்படி ஒன்று உண்டென்றோ அதற்கு ஒரு மதிப்பு உண்டென்றோ எவ்வகையிலும் அறியாத ஒரு பெருந்திரள் முன்னால் நின்றிருக்கிறேன் என்று நன்கறிந்து அதனாலேயே அதை முன்வைக்கிறேன். அதுவல்ல நான். அது எனது வெளிப்பாடு மட்டுமே. படமெடுக்கும் தருணங்களில் பாம்பு பிறிதொன்றாகிறது. ஆனால் வளைக்குள் சுருண்டமர்ந்திருக்கையிலேயே அது இயல்பாக இருக்கிறது.

முந்தைய கட்டுரைசுவாமி ராமதாசர் -அறியப்படாத பெருவாழ்க்கை
அடுத்த கட்டுரைஜூலை 13-குரு பூர்ணிமை,வெண்முரசு நாள்