மாலன் -கடிதம்

அன்புள்ள ஜெ

மாலனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அந்த அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கக் கூடாது என்கிறார்கள். அதைப்பற்றிய விமர்சனங்களை கவனித்தீர்களா? (ஸ்டாலின் பாராட்டியதும் எல்லாம் கப்பென்று அடங்கிவிட்டதையும் கண்டிருப்பீர்கள்)

நா.குமார்

***

அன்புள்ள குமார்,

சாகித்ய அக்காதமி என்றல்ல எந்த விருது பற்றியும் என்னுடைய மதிப்பீடு ஒன்றே. அதைப் பெறுபவர் இலக்கியத்திற்குப் பங்களிப்பாற்றியவரா இல்லையா? அவருக்கு அத்தகுதி உண்டா இல்லையா?

அந்நூலை பரிசுக்குரியதாக கருதலாமா என்பது இன்னொரு கேள்வி. ஆனால் அப்படிப் பார்த்தால் சாதனையாளர்களான பல படைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அக்காதமி விருதுகள் மிகச்சாதாரணமான ஆக்கங்களுக்கு அளிக்கப்பட்டவை. ஏனென்றால் அவர்கள் எழுதுவதை நிறுத்திவிட்டபின் முதிய வயதில் விருது அளிக்கப்படுகிறது. மூன்றாண்டுகளுக்குள் வந்த நூலுக்கு விருது அளிக்கப்படவேண்டும் என்னும் நெறி இருப்பதனால் அக்காலத்தில் வெளியான ஏதோ ஒரு நூலுக்காக அவ்விருது அளிக்கப்படுகிறது. ஆகவே நூலை நான் கருத்தில் கொள்வதில்லை.

மாலனுடைய மொழியாக்கம் சிறப்பானது. இலக்கியச் செயல்பாட்டாளராக, இதழாளராக அவருடைய பங்களிப்பை எவரும் மறுக்கவும் முடியாது. ஆகவே எல்லாவகையிலும் அவ்விருது ஏற்கத்தக்கதே.

மாலனுக்கு இதழியலுக்காக இந்தியாவின் எந்த தலைசிறந்த விருது வழங்கப்பட்டாலும் நான் வரவேற்பேன். ஆனால் இலக்கியத்துக்கான சாகித்ய அக்காதமி வழங்கப்பட்டால் அவருடைய இலக்கியப்படைப்புகள் அந்த தரம் கொண்டவை அல்ல என விமர்சிப்பேன்.

(ஆனால் இப்போதெல்லாம் எதையும் விமர்சனம் செய்யவே மனம் வரவில்லை. சரிதான் என்று ஒரு நிலை. சலிப்போ சோர்வோ அல்ல. நான் மிக விலகிவிட்டதாக உணர்கிறேன்)

அமைப்பில் இருப்பவர் விருது வாங்கலாகாது என்று நெறி இல்லை. நடுவர்குழுவில் இருப்பவர் வாங்கலாகாது என்றே நெறி உள்ளது. அது ஒரு சிறு அறப்பிரச்சினையாகச் சொல்லப்படலாம். ஆனால் சொல்பவர்களின் மொழியையும் அதிலுள்ள கசப்பையும் பாருங்கள். அறம் பற்றி கவலைப்படும் கும்பலா அது? நேற்றுவரை அவர்கள் சாகித்ய அக்காதமி பற்றி என்ன கவலைப்பட்டிருக்கிறார்கள்?

அக்குரல்களில் உள்ள அரசியல்வெறி, சாதிவெறி ஆகியவற்றில் இருந்து விலகிவிடத் தெரியாவிட்டால் நாம் இலக்கியம் வாசித்துப் பயனில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஅபி 80, ஒரு மாலை
அடுத்த கட்டுரைநீரின் நிறைவு