வெல்லண்ட் கால்வாய்

நேற்றுக் காலை,அருகே உள்ள  வெல்லாண்ட் கனால் என்ற கால்வாயைப் பார்க்கச்சென்றோம். பிரம்மாண்டமான செயற்கை ஓடை. செல்லும் வழியில் போர்ட் டல்ஹௌசி என்ற சிறிய மீன்பிடித்துறைமுகத்தைப் பார்த்தோம்.

டொரொண்டோவை ஒட்டியிருக்கும் ஒண்டோரியோ ஏரியைச்  சுற்றிக்கொண்டு அந்தத் துறைமுகத்தை அடைந்தோம். துறைமுகம் என்றால் கடலில்தான் அமைந்திருக்கவேண்டும் என்பதில்லை என்ற புரிதலை அதைப் பார்த்தபின்புதான் அடைந்தேன். அது நன்னீர் ஏரியில் படகுகள் செல்லும் துறைமுகம். என் தமிழ் மனத்துக்கு அதைப்  பிரம்மாண்டமான குடிநீர் தேக்கம் என்றுதான் பார்க்கமுடிகிறது. ‘குடிக்கிற நீரிலே குண்டிய கழுவின மாதிரி’ என்றுதான் அதன் மேல் கப்பல்கள் போவதைக் காணும்போது எண்ண முடிந்தது

போர்ட் டல்ஹௌசி துறைமுகத்தில் நீருக்குள் நீட்டிக்கொண்டிருந்த சிமிட்டி பாதையில் நடந்தோம். இதமான குளிர்.  நல்ல வெயிலடித்தாலும் தண்ணீர் எட்டு டிகிரி வரை குளிர்ந்தது என்பதனால் காற்று சில்லென்றிருந்தது. வெள்ளைக்கார அம்மணிகள் சைக்கிளிலும் நடந்தும் சென்றார்கள். ஒரு குட்டித் துரை உற்சாகம் தாங்காமல் தள்ளுவண்டியில் அமர்ந்து எம்பி எம்பி குதித்துக்கொண்டிருந்தார். நம் சொந்தக்குழந்தைகள் தவிரப் பிற குழந்தைகள் அழகான பொம்மை மாதிரி இருப்பதன் ரகசியம் என்ன என்று தெரியவில்லை. ஒரு அரைமணிநேரம் அழுது ஆர்ப்பாட்டம் செய்து பிராணனை வாங்கும்போதுதான் ‘ஒரு குழந்தையின் மறுபக்கம்’ என்று புத்தகம் எழுதுமளவுக்கு மெய்ஞ்ஞானம் வாய்க்கும்போல.

வெல்லாண்ட் ஓடையில் பெரிய கப்பல்களை நாற்பதடி வரை படிப்படியாக நீரில் இறக்கிக் கொண்டுவருகிறார்கள். ஓடையின் அடைப்புகளை மூடி நீரைத் திறந்துவிட்டுக் கப்பலை இறக்கி அடுத்த கட்ட ஓடைக்குக் கொண்டுசெல்கிறார்கள். கவிழ்த்த கரப்பாம்பூச்சி போல பிரம்மாண்டமாக ஒரு சிவப்புக் கப்பல். அதன் உடலெங்கும் குழாய்கள். ’இந்த மாதிரி போட்டு உயிரை எடுக்கிறார்களே’ என்று சலித்துக்கொள்ளுவது போல முனகிக்கிரீச்சிட்டும் மிக மெல்ல நீரில் இறங்கி அடுத்த பள்ளத்துக்குச் சென்றபிறகு ‘கடவுளே’ என்று பெருமூச்சுவிட்டு அமைந்தது.

ஒருபாலத்தின் மேலே நின்று அதைப் பார்த்தபின் அங்கேயே பெஞ்சில் அமர்ந்து பொரித்த மீன் தொட்டுக்கொண்டு வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டோம். ஐந்தரை மணி வாக்கில் திரும்பி வந்தேன்.

மாலை காரைக்குடி ஓட்டலில் நண்பர்களுடன் ஒரு விருந்து.  முப்பது நண்பர்கள் வந்திருந்தார்கள். நான் சங்க காலத்துக்கு முன்னாலிருந்து இன்றுவரை தமிழிலக்கியம் வந்த பாதை பற்றி ஒரு சின்ன உரை ஆற்றினேன். [சைதன்யா இருந்தால்,’சரி திரும்பிப்போற வழியையும் சொல்லிரு’என்று கேட்டிருப்பாள்] அதை ஒட்டிக் கேள்விகள். உற்சாகமான விவாதமாக இருந்தது.

அ.முத்துலிங்கம் ‘இது ஒரு மாற்றம். இவங்கள்லாம் ஒரு கூட்டத்துக்குப் பணம்குடுத்து வந்திருக்காங்க. இது ஒரு படி. அடுத்து ஒரு கையெழுத்துக்கு இவ்ளவுன்னு எழுத்தாளருக்குக் காசு கொடுக்கிற காலம் வரும்’ என்றார். சீக்கிரம் வந்தால் தேவலை என்று நினைத்துக்கொண்டேன்

இரவு பன்னிரண்டு மணிவரை விவாதித்துக்கொண்டிருந்தோம். டாம் சிவதாசன் ஒரு ஜோக் சொன்னார். ஒரு சூப்பர் கம்ப்யூட்டரில் ஒபாமாவும் கனடா அதிபரும் ஐம்பதாண்டு கழித்து தங்கள் நாடுகள் எப்படி இருக்கும் என்று பார்த்தார்கள். ஒபாமாவுக்கு வந்த பிரின்ட் அவுட்டில் அமெரிக்க அதிபராக ஒரு ஸ்பானியரும் துணை அதிபராக ஒரு சீனரும் இருப்பதாக வந்தது.  கனடா அதிபருக்கு வந்த பிரிண்ட் அவுட்டைப் பார்த்து அவர் திகைத்து சும்மா இருந்தார்

’என்ன அதிலே?’ என்றார் ஒபாமா. ‘எழவு தமிழிலே இல்ல இருக்கு’ என்றார் கனடா அதிபர்.  எதிர்காலத் தமிழ் அதிபரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

முந்தைய கட்டுரைவரலாற்றுச் சோகம்
அடுத்த கட்டுரைகொற்றவை கடிதம்