வரலாற்றுச் சோகம்

அன்புள்ள ஜெமோ,

வணக்கங்களுடன் பூபாலன் எழுதுவது.விகடனின் அந்தக்கட்டுரை மூலம் பெயர் அறிந்து,’நான் கடவு’ளில் தேடத்துவங்கி ஞாநி வீட்டுக்  கேணி சந்திப்பில் நேரில்கண்டு,இன்று விஷ்ணுபுரத்தின் தரிசனத்தில் மூழ்கிக்கிடக்கிறேன்.இலக்கியவாசிப்பில் ஒரு நிலையை அடைந்துவிட்ட உணர்வு.

கேணியின் அந்தச்சந்திப்பு என் வாழ்வில் மிகமுக்கியமான நிகழ்வென்பதைத் தற்போது உணர்கிறேன்.ஆம்.ஈழத்தின் பேரழிவில் கடும் உளச்சிக்கலுக்கு ஆளாகிச் செயலற்றுக்கிடந்தவனை ஜெயமோகன் ஆற்றுப்படுத்தினார்.கேணியின் அந்தச்சந்திப்பிற்குப் பின் ஜெயமோகனுடன் நான் இணையத்தில் கழித்தபொழுதுகள் இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் நான் உளநோயாளியாகிச் சிதைந்திருப்பேன்.

ஆண்டுகள் கடந்தும் ஈழத்தின் கதறல்கள் இன்னும் என்னை ஏதோ செய்துகொண்டிருக்கின்றன.அந்த மே மாததின் கடைசி நாட்கள்…….உலகம் ,அனைத்தையும் நிகழ்த்திமுடித்துவிட்டுத் தன்போக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறது.இன்று விசாரணையாம் அறிக்கையாம்..எல்லாம் இவர்கள் கண்முன்னேதானே நிகழ்ந்தது.

முள்வேலி முகாமில் விலங்கினும் கீழாய் அடைக்கப்பட்ட அம்மக்களில் பட்டினியில் இறந்தவர்கள் மட்டுமே 5000 க்கும் மேல் என்கிறது அந்த அறிக்கை.

பன்னாட்டு விதிகளுக்கு மாறாக இன்று இலங்கையில் பெருக்கப்பட்டிருக்கும் ராணுவம் அதுவும் வெற்றியின் வெறி கொண்ட ராணுவம்;எதிர்க்க வலிய தரப்பு இல்லாதபோது வெறுமனே அமர்ந்திருக்காது…உலகம் முழுதும் ராணுவத்தின் உளவியல் அப்படி.இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் எற்படுத்தப்போகும் விளைவுகள் மோசமானவை… இனி தமிழர்கள் மேலும் கொடுமையாய் ஒடுக்கப்படுவார்கள்..நம் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் .தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர்களும் அந்த மக்களும்….!இன்னொரு மியான்மர்.இதற்குப் புவிசார் அரசியல்பால் சீனர்களும்,ரஷ்யர்களும் பேராதரவளிப்பார்கள்.இங்கு சில அதிகாரிகளின் சொந்தவிருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தீர்மானமாகும் நமது வெளியுறவுக் கொள்கைகள் மோசமான விளைவுகளைத் தென்னிந்தியப் பகுதியில் ஏற்படுத்துகிறது.

கடந்தமாதம் ஏதோ உந்த தனுஷ்கோடிக்குப் பயணம் போயிருந்தேன்.முகுந்தராயர் சத்திரத்தில் இறங்கி டெம்போ வேனில் அழிந்துபோன சுவடுகள் வழியே பயணித்து இந்திய நிலப்பரப்பின் ஒரு கடைசி முனையில் நின்றபோது என்னைச் சுற்றிலும் கடல். அப்படியே கண்களை மூடி நான் நிற்க ,மறுகரையின் ஓலத்தை அள்ளிவந்து முகத்திலறைந்தது காற்று.

அப்படியே நடந்து அங்கிருந்த அழிவின் எச்சங்களைப்  படமெடுத்துகொண்டிருந்தேன்.அப்போது என்னைக் கடந்துபோன பெரியவர்,அந்தப் பேரழிவை நேரில் எதிர்கொண்டவராக இருக்கவேண்டும்..சிலநொடிகள் நின்று திரும்பி என்னை ஒருபார்வை பார்த்துவிட்டு நகர்ந்தார்.அந்தப் பார்வை,தங்கள் வாழ்வு காட்சிப் பொருளாகிப்போன வேதனையை என்னைப்பார்த்துச் சொல்லிவிட்டுச் சென்றது.அதற்குமேல் அங்கு நிற்க இயலாமல் என் புகைப்படக் கருவியை முடக்கிவைத்துவிட்டு விலகி நடக்கலானேன்.

இன்று ஈழமும் வெறும் காட்சிப்பொருளாகிக் கிடப்பது கொடுமையான உண்மை.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய ஈழத்து நண்பர் பகிர்ந்த தகவல்கள் நெஞ்சைப் பிளப்பவை…வன்னியில் பிழைப்பிற்கு உதவும் நிலம்,கடல் அனைத்தும் இராணுவத்தின் பிடியில் இருக்க,பெருவாரியான ஆண்கள் கொல்லப்பட்டுவிட,எஞ்சியவர்கள் தடுப்புக்காவலில் இருக்க,ஊனமான குழந்தை,முதியோர் என வீட்டைத்தாங்கும் பொறுப்பு பெண்களின் தலையில்;விளைவு பேருந்து நிறுத்தம்தோறும் உடலை மூலதனமாக்கும் பெண்களின் கூட்டம்,நாள்தோறும் கொன்று வீசப்படும் சிசுக்கள்..தாய்விரும்பாமல் வன்புணர்வில் வளர்ந்தவையாக இருக்கும் என்றார் நண்பர்…வேதனை.

கடந்த சில நாட்களாக வெளியாகும் போரின் இறுதிக்கட்டப்  புகைப்படங்கள் என்னை மீண்டும் சிதைத்து 2009 மே காலகட்ட மனநிலைக்குத் தள்ளிவிட்டன.

உலகின் மனசாட்சியை உலுக்கும் நம்பிக்கையில் இப்படங்கள் வெளியாவதற்குப் பெரும்பணம் ,புலம்பெயர்ந்த தமிழர்களால் கொட்டப்படுவதை அறிந்தபோது அதிர்ந்தேன்..காட்சியின் கொடுமைக்கேற்ப விலை.கொடுமை.பிணங்கள் விலைபோகும் இன்றைய உலகு ஒன்றைத் தெளிவாக உணர்த்துகிறது..

ஆம்.உலகு இன்னும் இனக்குழு மனநிலயிலிருந்து மீளவில்லை.

நேற்று நான் இணையத்தில் கண்ட சில நிழற்படங்கள்.அதில் ஒன்றில் முழுமையாக அம்மணமாக்கப்பட்டு க் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள் ஒரு பெண்…அருகே ஒரு சிறுவன் தலைமட்டும் கொடுமையாய்ச் சிதைக்கப்பட்டு இறந்து கிடக்கிறான்.

அடுத்த படம் ஆடைகள் களையப்பட்ட பெண் போராளிகள்,அவர்களின் பெண்ணுறுப்புகள் துப்பாக்கி ரவைகளால் சிதைக்கப்பட்டடுள்ளன.

என்ன மாதிரியான மனநிலை இது ?பிணங்களைச் சிதைத்து ரசிப்பது…புரியவில்லை.இவர்களின் அந்தக் கடைசி நிமிடக்காட்சிகள் என் அகத்தை சிதைத்துக்கொண்டெ என்னுடன் உலவுகின்றன.

விளைவு,அது கவிதையோ,கட்டுரையோ,உரைநடையோ…எழுத்தின் எந்த இலக்கணமோ,வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்போ தெரியவில்லை.இணைத்துள்ளவற்றை எழுதினேன்.ஆற்றுப்பட்ட உணர்வு.

புரிந்தது எழுத்தின் செயல்பாடு .என் ஆற்றுப்படுதலுக்காக…அகவெழுச்சிக்காகத் தொடர்ந்து எழுதப்போகிறேன்.

கடந்த சில நாட்களாக எதிலும் மனமற்று வெறுமனே திரிந்தவன் நேற்று தங்கள் தளத்தில் நுழைய அங்கும் சுவர் முழுதும் ஈழத்தின் சோகம். வடகிழக்குப் பயணத்தின் இனிமையின் இடையில் மீண்டும் ஈழத்தை  நுழைத்ததற்கு மன்னிக்கவும்.தங்களிடம் பகிரவேண்டும் என்று ஏதோ உந்த,இந்த மடலை எழுதிவிடேன்….

மன்னிக்கவும்…. நன்றி.

அன்புடன்,
சு.பூபாலன்.

அன்புள்ள பூபாலன்

வங்கம் வழியாகச் செல்லும்போது 1971 வாக்கில் அரசால் கொன்றழிக்கப்பட்ட வங்க இளைஞர்களின் நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஈழமளவுக்கே பெரிய அழிவுதான் அதுவும். காலத்தால் பழமையதாகிவிட்டால் வரலாறாக ஆகி நம்மிடமிருந்து விலகிவிடுகிறது. வரலாறு வெறும் தகவல்தான்  நமக்கு  இல்லையா?

புரட்சி என்ற சொல் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தது. அபத்தமான ஒரு புரிதலில் இருந்து எழுவது. அதிகாரம் கருத்தியலால் அல்ல ஆயுதங்களால் உருவாக்கப்படுவது என்ற நம்பிக்கையில் இருந்து பிறந்தது. அது உருவாக்கிய அழிவுக்கு அளவே இல்லை.

எல்லாரும் இளைஞர்கள். அதுதான் மனதைப்பிசைகிறது.இன்று நான் இளைஞர்களை அப்பாவின் கண்களால் பார்க்கிறேன்

ஜெ

 

இந்த மாதங்களில்

 

முந்தைய கட்டுரைமார்க்ஸியம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெல்லண்ட் கால்வாய்