அவதாரம்,குருகு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உண்மைச்சம்பவமோ அல்லது கற்பனையோ ‘அவதாரம்’ அற்புதமாக இருந்தது. தெய்வம் உண்டா இல்லையா என்பது ஒரு தேவையற்ற வினா. ஆனால் தெய்வம் உண்டு என்று அப்பு சொன்னது நூற்றுக்குநூறு உண்மை. ஆறடிக்குமேல் உயரம் கொண்ட ராட்சஸன் அடிதடி கற்ற ஆரோக்கியமான பலசாலி ஆசீரானை, பலவீனன் நொண்டி கோலன் அப்பு அடித்து வீழ்த்தினான் என்றால் அது அவன் அறிந்த வர்மமோ அல்லது தேர்ந்தெடுத்த ஆயுதம் பூட்டோ அல்ல, தெய்வம் உண்டு என்கிற நம்பிக்கைதான். இன்றைய பதிவில் அவதாரம் வாசித்தவுடன் உலகத்தமிழர்கள் அனைவரும் அப்புவின் கூற்றை ஆமோதித்து தெய்வம் உண்டு என நேற்றுக் கண்கூடாக கண்டுகொண்ட தமிழகத் தேர்தல் முடிவுகள்தான் நினைவுக்கு வந்தது. ஆகவே தெய்வம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழில் இது போன்ற நல்ல பதிவுகள் தரும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. வாழ்க வளமுடன்.!! வாழ்த்துக்கள்!!!

அன்புடன்

கெ.குப்பன்

சிங்கப்பூர்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் மத்துறு தயிர் கதை படித்தபோது மத்து என்ற ஒன்றைப் பார்க்காதவர் இந்தக் கதையின், அதில் சொல்லப்படும் கம்பரின் கவிதையின்  முழுவீச்சையும் புரிந்துகொள்ள முடியுமா என்று யோசித்தேன்.
பொதுவாக என் அலுவலகத்தில் கேட்டபோதே, பலர் மத்தைப் பார்த்ததே இல்லை என்று தெரிந்தது. என் வீட்டில்கூட இப்போது  அது இல்லை.  ஆனால் சின்ன வயதில் அதன் பயன்பாட்டைப் பார்த்திருக்கிறேன்.
குருகு கட்டுரையை வாசிக்கும்போது இது ஞாபகம் வந்தது.
நம்மைச்  சுற்றி இப்போது எளிதாகக் கிடைப்பவை சிறிது காலத்திலேயே அரியதாக ஆகிவிடுகிறது.
மத்து போன்றவை மறைவதைக் காலமாற்றம் என்று நாம் எடுத்துக் கொண்டாலும், குருகு போன்ற இயற்கை வளங்களும், அதைப் பற்றியறிந்த தலைமுறையும் மறைவதைப் பற்றி நமக்குப் பொதுவாகத் தெரிவதே இல்லை.
குருகு கட்டுரை இதை பற்றி யோசிக்க வைக்கிறது…
அன்புள்ள
வேழவளவன்

 

அன்புள்ள ஜே

காடு சூழ்ந்துள்ள நாடு,
டேவிட் கோலியாத் கதை.
நிதானம் எதிராளியை மடக்கி விடும்.  இன்னும் வாழ்வில் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
முடிந்தால் கிழக்கு ஆப்ரிக்கா வந்து பாருங்கள்
தங்கள் கதைகள் எனக்கு வீடு.
அடிமை மனம் நிறைந்துள்ள கண்டம்.  என்போன்றவர்கள் பொருள் ஈட்டினும், மக்களுடன் ஈடுபாட்டுடன் செயல்பட உகந்த இடம்.
உங்களின் எழுத்துக்கள் உள்வாங்கி அசை போட மிக  நிறைவு கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.
கண்ணன், நைரோபி

 

முந்தைய கட்டுரைவிதிசமைப்பவர்கள், அறம்
அடுத்த கட்டுரைதிரைப்பட விழா