இன்று காலை உஷா மதிவாணன் மற்றும் அவர் மகள் ரீங்காவுடன் வெளியே கிளம்பினோம். முதலில் சி என் டவர். உலகிலேயே உயரமான கட்டுமானம், இப்போது அது இரண்டாவது. அதைவிடப் பெரிய கட்டுமானம் ஒன்று துபாயில் கட்டப்பட்டுவிட்டதாம். நான் இந்தக் கோபுரத்துக்கு வருவது இரண்டாவது முறை. 2001 ல் சுமதி ரூபனுடன் வந்தேன். மிகப்பிரம்மாண்டமான ஒரு சிமிண்ட் தூண் என்று இதைச் சொல்லலாம். உச்சியில் ஒரு சுழல் மேடை. அங்கே கண்ணாடிச்சன்னல் வழியாகக் கீழே விரிந்து கிடக்கும் டொரொண்டோவின் கட்டிடக்கடலைப் பார்க்கலாம்.
நல்ல இளவெயில். மேகமில்லாத வானம். ஆகவே உற்சாகமாகப் பார்க்கமுடிந்தது. அங்கே நடப்பதற்காகப் போடப்பட்ட கண்ணாடித் தரைமேல் நடந்து கீழே அடியாழத்தில் தெரியும் கார்கள்,மனிதர்கள் மேல் உலவுவது ஒரு கூசச்செய்யும் அனுபவம். இந்தப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் அழகானவை. பெரும்பாலானவை கண்ணாடியாலான வெளிப்பக்கம் கொண்டவை. அவை வானத்துடன் உறவாடுவதைக் காண அழகாகவே இருந்தது.
அதன்பின்னர் காஸில் லோமா என்ற மாளிகையைப் பார்க்கச்சென்றோம். மத்திய காலகட்ட காசில்களின் அதே பாணியில் 19011ல் சர் ஹென்றி பெல்லெட் என்ற பெரும் வணிகரால் கட்டப்பட்டது இது. அவர் இதனருகே இன்னொரு மாளிகையில் தங்கியிருந்திருக்கிறார். இந்த மாளிகையை அக்காலகட்டத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் கட்டினாராம். இதில் அவரும் அவரது மனைவி திருமதி பெல்லட்டும் தங்கியிருக்கிறார்கள்.
பெல்லெட் அக்காலகட்டத்தில் மிகப்பெரிய வட்டிவியாபாரி. ஆனால் இந்த மாளிகையில் அவர் பத்து வருடம்கூட வாழமுடியவில்லை. அதற்குள் பொருளாதார ரீதியாக நொடித்து ஊரைவிட்டே சென்றார். அவரது சேகரிப்புகள் விற்கப்பட்டன. மாளிகை,வாடகைக்கு விடப்பட்டது. இன்று அருங்காட்சியகம். ஒரு நடுக்காலகட்ட பிரபுவின் ராஜபோக ஆடம்பர வாழ்க்கையின் சித்திரத்தை அங்கே காணமுடிந்தது. விருந்து அறைகள்,பிரம்மாண்டமான நடன அறை. குதிரை லாயத்துக்கு சுரங்கப்பாதை. தேக்கும் வெண்பளிங்கும் வெண்கலமும் கண்ணாடியும் கலந்து கட்டப்பட்ட அழகான மாளிகை.
மாலையில் ஒண்டாரியோ ஏரிக்கரைக்குச் சென்றோம். டொரொண்டோவைச்சூழ்ந்திருக்கும் பிரம்மாண்டமான நன்னீர் ஏரி . கடற்கரை போலவே அலையடிக்கும். சமீபகாலமாக இதன் நீர் மாசுபட்டிருப்பதாகவும் சுத்திகரிக்கப்பட்டுத்தான் குடிநீராக அளிக்கப்படுவதாகவும் சொன்னார்கள்
இரவு,காலம் செல்வம் வீட்டுக்குச் சென்றோம். அங்கே,அ. முத்துலிங்கம் ,டாம் சிவதாசன்,ரத்தன் டேனியல்,ஜீவா போன்ற நண்பர்கள் வந்தார்கள். இரவு பன்னிரண்டு மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். சினிமா அரசியல் இலக்கியம் எல்லாவற்றையும் பற்றி. என்னை வாசகியாகச் சந்தித்துக் காதலிக்க நேர்ந்ததைப்பற்றி அ முத்துலிங்கம் அருண்மொழியிடம் ஒரு பேட்டி எடுத்தார். எல்லாரும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்