வெந்து தணிந்தது காடு, வன்முறை

அன்புள்ள ஜெ

வெந்து தணிந்தது காடு பற்றிய உங்கள் கடிதம் கண்டேன். நான் அரட்டையை வளர்ப்பதாக நினைக்கவேண்டாம். என் கடிதத்தின் உள்ளுறைப்பொருள் இதுதான். எதற்காக நாம் திரும்பத் திரும்ப கேங்ஸ்டர் படங்களை எடுக்கிறோம்? நம் வாழ்க்கையில் துப்பாக்கிக்கு இந்த அளவுக்கு இடம் உண்டா? தப்பாக நினைக்கவேண்டாம்.

கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

கதைகள் பலவகை. அன்றாடத்தின் எளிமை கொண்ட கதைகள் உண்டு. குடும்பச்சூழலில் நிகழ்பவை. அவற்றுக்கு அவற்றுக்கான அழகு உண்டு. சீனு ராமசாமியின் மாமனிதன் அத்தகைய சினிமா. அதிலுள்ள தீவிரம் என்பது அன்றாட வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் உணர்வது.

ஆனால் சினிமாவின் சுவைகள் பலவகை. பெரும்பாலும் உலகமெங்கும் சினிமாக்களில் சாகசம் மிக அடிப்படையான ஒன்றாக உள்ளது. ஏன்?

சாகசம் என்றால் வெறும் அடிதடி மட்டும் அல்ல. ஒரு மனிதன் தன் வாழ்க்கையை விதிக்கு அப்படியே விட்டுக்கொடுப்பது. எந்தப்பாதுகாப்பும் இல்லாமல் நிற்பது. தன் உயிரை வைத்து விளையாடும் ஓர் ஆட்டம் அது

சாகசத்தில்தான் நாம் விதி என்று சொல்லப்படுவதை கண்ணுக்கு அருகே பார்க்கமுடிகிறது. அடுத்த கணம் என்ன நடக்கும் என்று தெரியாமல் வாழ்வது அது. அப்படிப்பட்ட வாழ்க்கை நம்மில் எத்தனைபேருக்கு உண்டு? நம்மில் எத்தனைபேருக்கு வாழ்வா சாவா என்ற கணங்கள் வாழ்க்கையில் அமைந்திருக்கின்றன?

அப்படிப்பட்ட தருணங்களில்தானே ஒரு மனிதனின் உச்சம் என்ன என்று நாம் காண்கிறோம்? மனிதனின் பொதுவான ஆற்றல் என்ன, மனிதனின் பலவீனம் என்ன, மனிதனின் அடிப்படையான உணர்ச்சிகள் என்ன என்பதெல்லாம் வெளிப்படுவது அப்போதுதானே?

அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் குற்ற உலகில் உள்ளவர்கள்தான். காவலர்களில் ஒரு சாரார். மற்ற அத்தனைபேருக்கும் நாளை என்ன நடக்கும், அடுத்த வாரம் என்ன நடக்கும், அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்று தெரியும். அடுத்த முப்பதாண்டுகளை தெளிவாக திட்டமிட்டு வைத்திருப்பார்கள்.

ஆகவேதான் சினிமாக்கள் ’அண்டர்வேர்ல்ட்’ நோக்கிச் செல்கின்றன. அங்கே மெய்யாகவே வன்முறை,சாவு,சாகசம் எல்லாம் உள்ளது.  ஆகவேதான் அண்டர்வேர்ல் கதைகள் எடுக்கப்படுகின்றன

அவற்றை பார்ப்பவர்கள் சாமானியர்கள்தான். ஏன் பார்க்கிறார்கள்? அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் எந்த பரபரப்பும் இல்லை. அபாயம் இல்லை. வாழ்வா சாவா நெருக்கடி இல்லை. ஆகவே கற்பனையில் அவற்றை அடையவிரும்புகிறார்கள். அதற்காகவே இப்படங்களைப் பார்க்கிறார்கள்.

அவர்கள் கற்பனையில் அடையும் அந்த வாழ்க்கையின் உச்சதருணங்கள் வழியாக தங்கள் உணர்வுகளையும், தங்கள் சாராம்சமான பலவற்றையும் கண்டடைகிறார்கள். ஆகவே பொதுரசனைக் கலை என ஒன்று இருக்கும் வரை அதன் மைய ஓட்டமாக சாகசமே இருக்கும்.

அவற்றில் கற்பனை மட்டுமேயான ஒரு வெளியில் அதி உக்கிரமாக நடக்கும் கதைகள் உண்டு. நம்பகமான யதார்த்தச் சூழலில் உண்மையில் நடந்தவற்றை மிக அணுக்கமாக ஒட்டி நடக்கும் கதைகள் உண்டு. வெந்து தணிந்தது காடு இரண்டாவது ரகம்

ஜெ

தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஆனந்தரங்கம் பிள்ளை, வரலாற்றில் வாழ்தல்
அடுத்த கட்டுரையானை டாக்டரும் டாப் ஸ்லிப்பும்- கடிதம்