வெண்முரசு வாசிப்பு

அன்புள்ள ஜெ,

என் வெண்முரசு வாசிப்பு,

உங்கள் தளத்தின் மூலம் உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களை புத்தகங்கள் வாங்கி படித்துக்கொண்டிருந்தேன். சில வருடங்களுக்கு முன்பு உங்கள் தளத்தில் களம் சிறுகதை படித்தேன். என்னுடைய அணுகுமுறையை தலைகீழாக மாற்றிய கதை. எப்படியேனும் முழு வெண்முரசையும் வாசிக்க எண்ணி அதன் அளவு கொடுத்த தயக்கத்தால் நகர்த்திக்கொண்டே இருந்தேன்.

நீங்கள் வெண்முரசு நிறைவு செய்து தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். சுனில் கிருஷ்ணன் அவர்கள் கொடுத்திருந்த வெண்முரசு அளவு படித்துமுடிக்க எடுக்கும் உதேசமான காலம் இவை பற்றிய குறிப்பு எனக்கு நம்பிக்கையளித்தது. அவர் அதில் தினமும் ஆறு அத்தியாயங்கள் படித்தால் ஒரு வருடத்தில் முடிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். நானும் தொடர்ந்து இலக்கிய வாசிப்பில் இருப்பவனே. இருப்பினும் என் வாசிப்பில் சுனில் கிருஷ்ணன் போன்று கூர்மையோ அரக்கவெறியோ இருப்பதில்லை என்பதை கருத்தில்கொண்டு இரண்டு வருடத்தில் வெண்முரசு வாசித்து முடிக்கும் முடிவு செய்தேன்.

அன்றே தொடங்கினேன், தினமும் மூன்று அத்தியாயம். Kindle லில் வெண்முரசு கிடைத்ததால் புத்தகத்திற்கு காத்திருக்கும் சுணக்கம் எதுவும் இல்லை (நன்றி Kindle). வெண்முரசு 17.7.20 அன்று தொடங்கி 1.6.22 அன்று வாசிப்பு நிறைவு செய்தேன். ஒவ்வொரு நாவல் தொடங்கும் போதும் அத்தியாயங்கள் முடிக்க பட வேண்டிய நாட்களை குறிதுக்கொண்டன். அத்தியாயங்கள் முடிய முடிய அதையும் குறித்துக்கொண்டே வந்தேன். நீலம் தவிர மற்ற நாவல்கள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடிக்கமுடிந்தது. கிட்டத்தட்ட உங்கள் அனைத்து youtube video களையும் பார்த்திருப்பேன் என்றே நினைக்கிறேன். நேரிலும் உங்கள் பேச்சை இரண்டு முறை கேட்டிருக்கிறேன்.

முதல் நான்கு ஐந்து நாவல்கள் உங்கள் குரல் முகம் ஊடகமாக இருந்தது. பின் எனக்கும் வெண்முரசிற்க்கும் இடையே ஊடமாக இருந்த உங்கள் குரலும் முகமும் மறைய தொடங்கியது. அது இன்னும் மிகச்சிறந்த வாசிப்பைக்கொடுத்தது. நானும் உங்கள் youtube உரை கேட்பது மற்றும் உங்கள் தளத்தை வாசிப்பது இரண்டையும் முற்றாகவே நிறுத்தியிருந்தேன். வெண்முரசின் பாத்திரங்கள் வெறும் எழுத்தின் மூலம் தாங்களாகவே தோன்றினார்கள். குரலோ முகமோ தேவையற்றதாகியிருந்தது. என்னால் உறுதியாக சொல்லமுடியும். உங்களை தீவிரமாக வாசிக்க தொடங்கிய பின்பு உறங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்கிலும் உங்களை பற்றிய ஏதாவது எண்ணங்கள், முதல் எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நேரம் இருக்கும் என்றே எண்ணுகிறேன். ஆனால் வெண்முரசு ஒன்பதாவது பத்தாவது நாவலை கடந்து செல்லும் போது என் எண்ணங்களில் நீங்கள் எங்கோ மறைந்துவிட்டீர்கள்.

வெண்முரசின் சிறு சிறு தருணங்களை நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். சில அத்தியாயங்கள் கைபேசியில் பதிவு செய்து ஆர்வமுள்ளவர்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வெண்முரசை வாசித்துக்கொண்டோ மனதில் உருட்டிகொண்டோ இருந்தேன். இனி இதுபோன்ற உச்சத்தில் திகழும் வாய்ப்பு அமையும் என்று தோன்றவில்லை (நன்றி கொரோனா மற்றும் ஊரடங்கு).

வெண்முரசை ஒட்டுமொத்த வாசிப்பனுபவமாக யாரேனும் சொல்லக்கூடுமா என தெரியவில்லை. ஆனால் வெண்முரசு என்னில் உண்டாக்கிய தாக்கங்களை என்னால் உணரமுடிகிறது. என்னுடைய சிறுமைகளை எனக்கு காட்டியது. இப்போது மற்றவர்களின் சிறுமைகளை கடந்து அவர்களை புரிந்துகொள்ள அணுக முடிகிறது. வாழ்க்கையை பற்றிய விளக்கிவிடமுடியாத ஒரு தெளிவை வெண்முரசு வாசிப்பு தந்தது. இந்த தெளிவு என்னில் இன்னும் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் வெண்முரசிற்கு முந்தைய மனநிலைக்கு திரும்பப்போவதில்லை. செயல், என்னுடைய இலக்கு எதுவோ அதை அடைவதில் என் பங்கு என் செயல் மட்டுமே அதை முழுமையாக செய்கிறேன். உடல் ஆரோக்கியம் மற்றும் கற்றலில் ஓரளவு பெரிய இலக்குகள் வைத்து அடைந்தும்விட்டேன். பெரிய இலக்கு வெண்முரசு வாசிப்பு எனக்கே வியப்புதான்.

என் நல்லூழ் இந்த வயதில் (35) இது படிக்க முடிந்ததற்கு. இன்னும் பல வருடங்கள் வென்முரசை என்னால் அசை போடமுடியும். செயலை மட்டுமே இலக்கென கொண்டு மீதமுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். வெண்முரசின் மூலம் நீங்கள் எனக்கு கொடுத்தது, என் முதல் குழந்தை பிறந்த அன்று இரவு நான் உறங்கவே இல்லை. அதுபோல என்னால் வார்த்தைகள் ஆக்கிவிட முடியாத ஒரு உணர்வு.

நன்றி ஜெ

சரவணன், V.K. புரம்

***

அன்புள்ள சரவணன்,

ஆசிரியனை தவிர்த்துவிட்டு நூலை வாசிப்பது சுலபம் அல்ல. ஆனால் அவன் மறைந்துவிடும் வாசிப்பு, கதை நம்முள் நிகழ்வதுபோல நாம் உணரும் வாசிப்பு, அதுதான் மிகச்சிறந்த வாசிப்பு.

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன், சோழர்கள்
அடுத்த கட்டுரைபோகன் கவிதைகள்-தேவி