அன்புள்ள ஜெ
வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் பார்த்தேன். ஏற்கனவே அற்புதமான ஒரு பாடலும் வெளிவந்திருந்தது.
இப்போது விக்ரம் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் டீசர்களிலும் துப்பாக்கி தென்படுகிறது. இதுவும் ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படமா என்ற எண்ணம் ஏற்படுகிறது.
நீங்கள் சினிமா பற்றி பேச விரும்புவதில்லை. இருந்தாலும் ஒரு தனிப்பட்ட ஆர்வத்தால் இந்தக் கடிதம்.
கிருஷ்ணமூர்த்தி
**
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
சினிமா பற்றிப் பேச விரும்பாதவன் நான். ஏனென்றால் இந்தக் களம் சினிமா விமர்சனத்தின் களமாக, சினிமா அரட்டைக்கான களமாக ஆகிவிடக்கூடாது என்பதனால்.
வெந்து தணிந்தது காடு நான் எழுதிய ஒரு கதை. அக்கதையை வாசித்த கௌதம் மேனன் அக்கதையின் நாயகன் பிறகு என்ன ஆனான் என்று கேட்டார். அவருடைய வாழ்க்கையை நான் சொன்னேன். அதுவே கதையாகியது.
விக்ரம் வேறொரு வகை அழகியல்கொண்டது. அது புராணக்கதைகளைப்போல. எல்லாமே பெரியவை. எல்லாமே கற்பனை. ஹாலிவுட்டில் அந்தவகையான படங்கள் நிறைய வருகின்றன. சில்வஸ்டர் ஸ்டாலோன், ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நெகர் நடித்தவை. அவற்றுக்கு நூறாண்டுக்கால வரலாறுண்டு. அவை எங்கே நடக்கின்றன என்றால் நம் கற்பனைக்களத்தில். அந்தக் கதைமாந்தர் எங்குள்ளனர் என்றால் நம் கற்பனையில். நம் அச்சம், நம் சீற்றம் ஆகியவையே விக்ரம் படமாக ஆகின்றன. அவை மனிதர்களால் ஆன கதைகள் அல்ல. அந்த மனிதர்கள் எல்லாம் உருவகங்கள் மட்டுமே. வெவ்வேறு உணர்வுநிலைகளை, கருத்துநிலைகளை அவர்கள் பிரதிநித்துவம் செய்கிறார்கள். வன்மேற்கின் கௌபாய் படங்கள் முதல் எல்லாமே அந்த வகைதான்.
வெந்து தணிந்தது காடு படத்தின் அழகியல் நேரடியான வாழ்க்கை. 99 சதவீதம் அது வாழ்க்கை. உண்மையில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை ஏறத்தாழ அடியொற்றிச் செல்கிறது. அதிலுள்ள சூழல், அதிலுள்ள வன்முறை எல்லாமே உண்மை. அதிலுள்ள அந்த வாழ்க்கை அப்படியே உண்மை. நீங்கள் கிளம்பிச்சென்றால் அதை பார்க்கமுடியும். கொஞ்சம் தேடினால் இதழாளர்களால் ஆளையே கண்டுபிடித்துவிட முடியும். (ஆனால் எல்லாமே கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கும், சினிமாவுக்காக. சட்டத்துக்காக)
ஆகவே உண்மையான வாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் வெந்து தணிந்தது காடு. திரையில் நீங்கள் பெறவிருப்பது ஒரு வாழ்க்கையை சன்னல்வழியாகப் பார்த்த அனுபவம்.
நான் இப்போது தமிழ் விக்கி பணிகளில் ஈடுபட்டிருப்பதனால் எது வாழ்க்கையோ அது மட்டுமே கவர்கிறது. வாழ்க்கைக்கு மிகமிக அண்மையில் என்பதே என் ஆர்வமாக இருக்கிறது.
ஜெ