முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார்
80 க்கு பிறகு பிறந்து இன்று நடுவயது எட்டியிற்கும் என் போன்ற ஏராளமானவர்களை, தமிழ்நாட்டில், எவ்வித கட்சி சார்ந்த அரசியலுக்குள்ளும் சென்றுவிடாமல் பார்த்துக்கொண்ட வேலையை சிறப்பாக செய்தவர்கள் சினிமாவில் ரஜினி போன்றோர், ஆன்மிகத்தில் ஜக்கி போன்றோர், விவசாயத்தில் நம்மாழ்வார் போன்றோர், எழுத்துலகில் அப்போது சு.ரா இப்போது ஜெயமோகன் போன்றோர்……இது எனது ஒப்புதல் வாக்குமூலம், மாற்று கருத்து கொண்டோர் கடந்து செல்லவும்.
உங்கள் கருத்து என்ன?
பெயர் வேண்டாம்
அன்புள்ள நண்பருக்கு,
உண்மையிலேயே என்னுடைய பணி என்ன என்று கேட்டால் இந்த வரிகளை மேற்கோள் காட்டவே விரும்புவேன். அந்தப்பட்டியலில் என்னை வைக்க மாட்டேன் எனினும் நான் உறுதியாகவே அரசியல் அற்ற சிந்தனையாளர்களின் ஒரு வட்டத்தை உருவாக்கவே முயல்கிறேன்.
நான் பேசிக்கொண்டிருப்பது பொதுச்சமூகத்துடன் அல்ல. எனக்கு அவர்களுடன் தொடர்பே இல்லை. நான் எழுதுவதை அவர்கள் வந்தடையவும் முடியாது. அவர்களை நோக்கிச் செல்லும் எண்ணம் எனக்கும் இல்லை. ஆகவே மொத்த தமிழ்ப் பொது சமுதாயத்தையும் அரசியலற்றதாக ஆக்கவேண்டும் என்றோ, இங்கிருக்கும் அரசியல் கட்சிகளை கலைத்துவிட வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. அதற்கான ஆற்றல் எனக்கில்லை.
தமிழ்ச் சமுதாயத்தில் பேசப்படும் அரசியல் தரப்புகள் அனைத்துக்கும் அப்பால் நிற்கக்கூடிய ஒரு சிறு வட்டம் ஒன்று உருவாகவேண்டும், தலைமுறைகளாக அது வளரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். எந்தச் சமுதாயத்திற்கும் அது ஓர் ஆற்றல்மையமாக, அதை வழிநடத்தும் சக்தியாக , இருக்கும்.
ஒரு சமூகம் முன்னகர்வதென்பது அந்த அரசியலற்ற சிறு வட்டத்தால் மட்டுமே நிகழும். அங்கிருந்தே புதிய சிந்தனைகள் உருவாகமுடியும். புதிய திறப்புகள் நிகழமுடியும். கலை, இலக்கியம், தத்துவம் மட்டுமல்ல; புதிய அரசியல் சிந்தனைகளே கூட சமகாலத்தின் அனைத்து அதிகார அரசியல்களிலிருந்தும் விலகி நின்றிருக்கும் அந்த சிறுவட்டத்திலிருந்து மட்டுமே எழ முடியும்.
ஒன்று நாம் அறிந்துகொள்ள வேண்டும், நாம் இன்று நினைப்பது போல உலகம் இத்தனை அரசியல் மயமாக எப்போதும் இருந்ததில்லை. சென்ற நூறாண்டுகளுக்குள் உருவான ஒரு புதிய சூழல் இது. மூன்று வெவ்வேறு நிகழ்வுகள் ஒன்றை ஒன்று சந்தித்து வளர்த்து செறிவடைந்ததன் விளைவு ஒன்று ஜனநாயகம். இன்னொன்று ஊடகம். மூன்று பொதுக்கல்வி.
சென்ற நூற்றாண்டில்தான் ஜனநாயகம் என்ற கருத்துரு உலகத்தில் அறிமுகமாயிற்று. ஆகவே மக்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடலாம், அரசியல் அதிகாரத்தை அவர்கள் தீர்மானிக்கலாம், அரசியலில் அவர்கள் ஆற்றக்கூடிய பங்கொன்று உண்டு என்ற நிலை உருவாகியது. ஜனநாயகம் என்பது சாமானியர்களின் அதிகாரம். ஜனநாயக அரசு என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் ஒரு சிறு பங்கேனும் உள்ள ஒரு கூட்டு அதிகார மையம், கொள்கையளவில் அப்படித்தான். எந்த அளவுக்கு ஜனநாயகம் முதிர்ச்சி அடைகிறதோ அந்த அளவுக்கு அதில் சாமானியர்கள் அதிகாரம் மிகுதியாக இருக்கும். ஆகவே சாமானியன் எந்த அளவுக்கு அரசியல் மயப்படுத்தப்படுகிறானோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வலுவடையும்.
சுதந்திர போராட்ட காலத்தை ஒட்டித்தான் இங்கு ஜனநாயக கொள்கைகள் அறிமுகமாகின்றன. 1923-க்குப்பிறகு தான் ஜனநாயகம் நமக்கு மிகச்சிறிய அளவில் அறிமுகமாகிறது. தேர்தல்கள், வாக்களிப்புகள் அ,தன் அரசியல். 1947க்குப்பிறகு நமது அரசை நாமே முழுமையாக நாமே முடிவு செய்யலாம் என்ற வாய்ப்பு நமக்கு வந்தது.
ஜனநாயகம் உருவானதுமே பரப்பியல் எனப்படும் வெகுஜன அரசியலும் தோன்றிவிட்டது. பரப்பியல் என்பது பெருவாரியான மக்களை உள்ளே இழுக்கும்பொருட்டு அரசியல் கொள்கைகளையும் தத்துவங்களையும் மிக எளிமைப்படுத்தி ஒற்றை கருத்துகளாக ஆக்குவது. அவற்றை மிகை உணர்ச்சியுடன் முன்வைப்பது. ஏற்கனவே மக்களிடம் இருக்கும் உணர்ச்சிகள், ஐயங்கள், அச்சங்கள் ஆகியவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது.
எங்கெல்லாம் ஜனநாயக அரசியல் உருவாகிறதோ அங்கெல்லாம் உடனே பாப்புலிசமும் பரப்பியலும் தோன்றிவிடுகிறது. ஏனெனில் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு மிக எளிய வழி என்பது பரப்பியல் தான். மக்களை ஒருங்குதிரட்ட வெற்றிகரமான வழி என்பது ஏற்கனவே அவர்களிடம் இருக்கும் வெறுப்புகளை, அச்சங்களை, ஐயங்களை பெருக்கி; அதற்கொரு கொள்கை முகம் கொடுத்து அவர்களை ஒரு குழுவாகத்திரட்டுவதுதான்.
உயரிய லட்சியத்துக்காகவும் மக்களைத்திரட்ட உயர்ந்த மனிதர்களால்தான் இயலும். ஆனால் அவர்களுக்கு அதிகாரப் பற்று இருக்காது. அதிகாரப்பற்றுள்ளவர் உயர்ந்த இலட்சியத்தை உண்மையாக முன்வைக்க மாட்டார், ஏனென்றால் அவருடைய இலட்சியமே அதிகாரம்தான். அதிகார நோக்குகொண்டவர்களின் வழி என்றுமே பரப்பியல்தான். எந்த நேர்நிலை நோக்குக்காக மக்களைத் திரட்டுவதை விடவும் ஒரு குறியீட்டு எதிரிக்கு எதிராக மக்களைத் திரட்ட முடியும். அது அந்நியராக இருக்கலாம், தன் நாட்டுக்குள்ளே இருக்கும் ஒரு தரப்பாக இருக்கலாம். ஆனால் எதிரியைச் சுட்டிக்காட்டியே பரப்பியல்வாதிகள் அரசியலைப் பேசுவர்.
ஓர் அரசியல் தரப்பு அனைத்து சீரழிவுகளுக்கும் தீங்குகளுக்கும் காரணம் ஒரு எதிரியே என்று சுட்டிக்காட்டும் என்றால் அது பரப்பியலையே முன்வைக்கிறது. பரப்பியல் ஒரு போதும் மக்களிடம் அவர்கள் சீர்ப்படவேண்டும் என்றும், அவர்களிடமுள்ள குறைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் மேம்பட வேண்டும் என்றும் சொல்லாது. அப்படி சொல்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களிடம் அவர்கள் ஐயத்திற்கிடமில்லாத அளவுக்கு நல்லவர்கள் என்றும் அப்பழுக்கில்லாதவர்கள் என்றும் அவர்களுடைய அனைத்து சரிவுகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் அவர்களுடைய எதிரிகளே காரணம் என்றும் சொல்பவனே பரப்பியல் அரசியல்வாதி. பெரும்பாலும் அவனே வெல்கிறான்.
உலகம் முழுக்க ஜனநாயகம் தன் கருவியாக பரப்பியலை கொண்டு வந்தது. பரப்பியலின் ஆயுதமாக அமைந்தது ஊடகப்பெருக்கம். ஊடகங்கள் சென்ற நூறாண்டுகளுக்குள் உருவாகிவந்தவை என்பதை நாம் பெரும்பாலும் மறந்துவிட்டிருக்கிறோம். நூறாண்டுகளுக்கு முன் ஒரு செய்தி பத்து கிலோமீட்டர் கடந்து செல்வதற்கு பலமாதங்களாகும். இன்று செய்திகள் ஒவ்வொரு கணமும் உலகம் முழுக்க பரந்து உலகை ஒற்றை செய்திக்களமாக மாற்றிவிட்டிருக்கின்றன.ஊடகம் பரப்பியலை பெருக்குகிறது. பரப்பியல் ஊடகத்தை பயன்படுத்திக்கொள்கிறது.
தொலைத்தொடர்பு வசதிகள், அச்சு ஆகியவற்றின் மூலம் உலகம் தகவல்தொடர்பால் இணைக்கப்பட்டது. அதன்பின் செய்தியே வணிகமாகியது. தகவல்தொடர்பே ஒரு பெரும் முதலீடுள்ள தொழில்துறையாகியது. ஜனநாயகமும் பரப்பியலும் செய்தித் தொடர்பும் இணைந்து உருவானவை இன்றைய அரசியல் கட்சிகள். அவை இலட்சியவாத அமைப்புகள் அல்ல. கருத்தியல் கட்டுமானங்கள் அல்ல. அவை அரசியல் தரப்புக்களேகூட அல்ல. அவை அதிகாரத்தை நோக்கிச் செல்ல தங்களை ஒற்றைத் திரளாக இணைத்துக்கொண்ட சிலரின் தொகுதிகள். அவ்வளவுதான். இதை அறியாதோர் இல்லை. உண்மையாகவே அறியாத பச்சைக்குழந்தைகளிடம் எனக்கு பேச ஒன்றுமில்லை.
எந்த ஒரு சூழலிலும் மிக வலுவாக ஒன்றோ இரண்டோ மூன்றோ அரசியல் தரப்புகள்தான் இருக்கும். அவை மிகப்பெரும்பாலான மக்களின் பங்கேற்புள்ளவையாக இருக்கும். அந்தப் பெரும் பங்கேற்பினாலேயே அவை ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய ஆற்றல் கொண்டவை. அந்த ஆற்றல் வருவது அவற்றுடைய இலட்சியவாத நம்பிக்கையாலோ, சிந்தனை ஆழத்தினாலோ, தர்க்க முழுமையினாலோ, கள உண்மை சார்ந்த நம்பகத்தன்மையினாலோ அல்ல. அந்த ஆற்றலின் அடிப்படை என்பது உண்மையால் உருவாவதே அல்ல. மாறாக பல்லாயிரம் பேர் அதை நம்புவதனால், ஒவ்வொரு நாளும் பலநூறு முறை நம் காதில் ஒலிப்பதனால், இளமைக்காலம் முதல் நம்மைச்சூழ்ந்து இடைவிடாது கேட்டுக்கொண்டிருப்பதனால், சிந்தனைக்கு அப்பாற்பட்ட வகையில் இந்த பரப்பியல் தரப்புகள் நம்மை ஆட்கொள்கின்றன. நாம் அவற்றால் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்.
நமது உள்ளமே இந்தச் சூழலிலிருந்து வரும் குரல்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எளிதில் அவற்றை மாற்றி நாம் சிந்திக்க முடியாது அந்த ஓங்கியிருக்கும் ஒன்றிரண்டு தரப்புகளில் ஒன்றையே தன்னியல்பாக நாம் நம்முடைய தரப்பாக ஏற்றுக்கொள்கிறோம். அதை ஒரு சிறப்பாக நாம் சொல்லிக்கொள்கிறோம். அதற்கு நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். தனக்கு ஓர் அரசியல் தரப்புண்டு என்று சொல்லக்கூடியவர் சூழ அடிக்கும் காற்றில் சருகு பறப்பது போல இளமையிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கும் அந்தப் பெருந்திரள் குரலால் கவரப்பட்டு அடித்துச் செல்லப்படுபவரே ஒழிய சிந்தித்து கற்று முடிவெடுத்து ஒரு தரப்பை எடுத்தவரல்ல.
அவ்வாறு சூழலில் ஒலிக்கும் குரல்களில் ஒன்றாக தன் குரலை வைத்துக்கொண்டிருப்பவன் ஒருபோதும் அசலாக சிந்திக்க முடியாது. கலையிலோ, இலக்கியத்திலோ, சிந்தனையிலோ, ஏன் அரசியல் சிந்தனையிலோ கூட அவனால் ஒன்றையும் எய்த முடியாது. சிந்திப்பவன் என்பவன் தனக்கென ஒரு பார்வையை கொண்டுள்ளவன். தனக்கென ஒரு தேடலை முன்னெடுப்பவன் தன் விடைகளை தானே கண்டெடுப்பவன். அவன் தான் எழுத்தாளனோ, கலைஞனோ ,சிந்தனையாளனோ ,தத்துவவாதியோ, அரசியல் சிந்தனையாளனோ ஆக முடியும்.
அதற்கு முதல் தகுதி என்பது சூழலில் இருக்க்கும் இந்த மாபெரும் கட்சிகட்டல்களுக்கு வெளியே நிற்க ஒருவனால் முடியுமா என்பது தான். அது அத்தனை எளிதல்ல. ஏனெனில் ஒ’ன்று நீ இங்கிரு அல்லது அங்கிரு’ என்று தான் சூழல் சொல்லும். ’இங்கில்லையென்றால் நீ அங்கு’ என்று தான் முத்திரை குத்தும். இங்கும் அங்கும் இல்லாதவர்கள் பயனற்றவர்கள் என்று எண்ணும் .அவர்களை ஒழிக்க முயலும்.
மொத்தச் சமூகமே வெவ்வேறு அதிகாரத் தரப்புகளாக மாறி ஒன்றோடொன்று முட்டிக்கொண்டிருக்கும் நிலை உலகவரலாற்றில் ஜனநாயகத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததில்லை. பாண்டியனுக்கும் சோழனுக்கும் போர் என்றால் இருநாட்டு குடிகளுக்கும் அதில் பெரிய பங்கேதும் இருக்கவில்லை. சமூகத்திற்குள் அதிகாரத்துக்காகப் போரிடும் தரப்புகள் மொத்த உரையாடலையும் கைப்பற்றிக்கொண்டிருக்கும் சூழல் இந்த சமூகஊடகக் காலகட்டத்திற்கு முன் இருந்ததில்லை
இச்சூழலில் இரு மாபெரும் எந்திரங்கள் நடுவே சிக்கிக் கொண்டவன்போல சுதந்திர சிந்தனையாளன் நசுங்க நேரிடுவான். அவதூறுக்கும் வசைக்கும் ஆளாவான். அவனுக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள். எந்தக்குழுவிலும் அவன் தனிமைப்படுவான். பொதுக்களத்தில் அவன் குரலுக்கு மதிப்பிருக்காது. அவனை ஏற்று ஆம் என்று சொல்ல ஒருவர் கூட சமயங்களில் வாழ்நாள் முழுக்க அவன் சந்திக்க நேர்ந்திருக்காது.
ஆனால் இத்தனை அழுத்தங்களையும் தாண்டி ஒருவன் நான் என்று உணர்வான் என்றால், தன் சிந்தனை என்று உணர்வான் என்றால், என் தரப்பு இது என முன்வைப்பான் என்றால் அவனே சிந்தனையாளன். அவனே கலைஞன். இப்சன் சொன்னது போல தனித்து நிற்பவனே உலகத்தில் ஆற்றல் மிக்கவன். நான் உருவாக்க எண்ணுவது அத்தகைய தனித்தவர்களைத்தான்.
இது ஒன்றும் புதியகருத்து அல்ல. உலகமெங்கும் கலை, இலக்கியம், தத்துவம் சார்ந்த களங்களில் சொல்லப்படுவதுதான். அறிவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு சார்ந்த களங்களில் இயல்பாக இன்றும் இருக்கும் நிலைதான். ஏன் தொழில்களத்திலேயெ பெரும்பாலும் கட்சியரசியலுக்கு இடமில்லை என எதேனும் தொழில்செய்பவர்களுக்கு தெரியும். வேலைவெட்டி இல்லாமல் முகநூலில் ஒட்டியிருக்கும் கிருமிகள் நினைப்பதுபோல உலக மானுடர் எல்லாருமே எந்நேரமும் அரசியலில் சலம்பிக்கொண்டிருக்கவில்லை.
இங்குள்ள அரசியல் தரப்புகள் எல்லாமே பெருந்திரள் அரசியலை முன்வைப்பவை. அவற்றில் ஒரு துளியாக நின்றுகொண்டு எவரும் புதிதாக எதையும் எய்துவதற்கில்லை. அவர்கள் சமைத்தளித்தவற்றை திரும்ப பரிமாறுவதன்றி எதையும் செய்ய முடியாது வெறும் கட்சிகட்டல்கள், அதிலிருந்து உருவாகும் தயார்நிலை உணர்வுகள், முடிவில்லாத விவாதங்கள், அதிலிருந்து எழும் பகைமைகள், கசப்புகள் இவற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் ஒருவனால் எதை அசலாக சிந்திக்க முடியும்? எதை வெல்ல முடியும்?
தமிழ்ச்சூழலில் இன்று எழுத்தாளர்கள் அதிகார அரசியலின் குரலாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் பெருமை கொள்கிறார்கள். என்றும் இப்படி இது இருந்ததில்லை. இது ஒரு அறிவுத்தள வீழ்ச்சி. கட்சிக்கொடியை தன் முகப்பில் வைத்துக்கொண்டிருக்கும் எழுத்தாளன் எழுத்தியக்கத்தின் அவமானச்சின்னம். கட்சித்தலைவருக்கு புகழ்மாலை பாடுபவனை நவீன இலக்கியச்சூழல் என்றுமே அருவருப்புடன் மட்டும்தான் பார்த்திருக்கிறது. இன்றைய சூழலில் காற்றில் எல்லா சருகுகளும் பறக்கும்போது சில கற்களை உருவாக்க எண்ணுகிறேன்/
ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதற்குரிய நியாயங்களை வைத்திருக்கிறது. அவை எளிமையாக மறுக்ககூடியவை அல்ல. ஏனெனில் அவை ஒருவரால் உருவாக்கப்படவில்லை. பல ஆயிரம் பேரால், பல லட்சம் பேரால் உருவாக்கப்படுகின்றன. தொடர்ந்து நூறாண்டுகளாக சமைக்கப்படும் ஒரு பெரும் கோட்பாடாகவே எந்த கட்சிக்கொள்கையும் இருக்கும் . ஆகவே எல்லாக் கேள்விகளுக்கும் எல்லா கட்சிக்கொள்கையிலும் ஏதோ ஒரு பதிலிருக்கும். மிகுந்த ஆற்றலுடன் சிந்திக்கும் தனி நபர் தவிர எவராலும் ஒரு கட்சி உருவாக்கும் ஒட்டு மொத்த தர்க்கத்துடன் விவாதிக்க முடியாது. ஏனெனில் அது ஒருவன் ஒரே சமயம் பல லட்சம் பேருடன் சண்டை போடுவது போல. தன் காலத்தை கடந்து எழுந்து நின்றிருக்கும் ஒருவனால் மட்டுமே அவ்விவாதத்தை கொஞ்சமேனும் நிகழ்த்தமுடியும்.
ஒவ்வொரு அரசியல் தரப்புக்கும் மிக விரிவான நியாயங்கள் இருக்கும். வரலாற்று நியாயங்கள், நடைமுறை நியாயங்கள், உணர்ச்சிகரமான நியாயங்கள், தனிப்பட்ட முறையான நியாயங்கள் .அதில் வரலாற்று நியாயம் என்பது மிக விரிவானதாக எழுதப்பட்டிருக்கும். ஏனெனில் அதை பல பேரறிஞர்கள் பலகாலமாக தொடர்ந்து எழுதியிருப்பார்கள். அது இந்துத்துவ தரப்பாக இருந்தாலும், திராவிடத்தரப்பாக இருந்தாலும், மார்க்சிய தரப்பாக இருந்தாலும். ஆகவேதான் பின்நவீனத்துவம் வரலாற்று வாதத்தை ஐயப்படுகிறது. எவர் ஒருவர் ’வரலாறு இப்படி உருவாகி வந்திருக்கிறது’ என்று பேசத்தொடங்கினாலும் அவர் சிந்தனையின் மேல் ஒரு ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பிக்கிறார் என்று சொல்கிறது.
இன்றைய நவீனச் சிந்தனையாளனின் அடிப்படைத் தகுதி என்பது ஆதிக்கத்திற்கு எதிராக நிற்பது. ஆதிக்கம் எனும்போது அது அமைப்புகளின் அதிகாரம் மட்டுமல்ல. அரசதிகாரமோ சமூக அதிகாரமோ மட்டுமல்ல. நம் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தி ஒரு குறிப்பிட்ட தரப்பில் நம்மை நிறுத்த முயலும் அனைத்து ஆதிக்கங்களுமே எதிர்க்கப்படவேண்டியவைதான். ஏதேனும் ஒரு தரப்பை நோக்கி நம்மைத் தள்ளும் எல்லாச் சிந்தனைகளுமே நம்மை செயலற்றவர்களாக்குகின்றன. அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பவனே சிந்தனையின் முதல்படியை கடக்கிறான். ஓர் ஆதிக்கத்தை எதிர்க்க இன்னொன்றை துணைக்கொள்பவன் தன்னை இருமடங்கு விசையுடன் ஆதிக்கத்துக்கு அர்ப்பணிக்கிறான். ஆதிக்கம் இழுக்கிறது, இவன் அதைநோக்கி தன்னை செலுத்தவும் செய்கிறான்.
இந்த நூற்றாண்டில் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும் அரசதிகாரம் நோக்கி சென்றுகொண்டிருக்கும் குழுக்களின் கருத்தியல் ஆதிக்கம் மக்களை இரண்டு மூன்று பெருங்குழுக்களாக பிரித்துக்கொண்டு விடுகிறது. அதிலொன்றை சார்ந்து மட்டுமே ஒவ்வொருவரையும் பேச வைக்கிறது .அதன் நியாயங்களுக்கு அப்பால் மாற்று நியாயங்களைப்பார்க்க முடியாதவர்களாக ஒவ்வொருவரையும் மாற்றுகிறது. அமெரிக்காவிலென்றால் நீங்கள் லிபரலா கன்சர்வேட்டிவா என்ற ஒரு கேள்வியில் ஒருவனுடைய அடையாளம் வகுக்கப்பட்டுவிடுகிறது. இந்தியாவில் என்றால் நீங்கள் இந்துத்துவரா இந்துத்துவ எதிர்ப்பாளரா என்ற வினாவில் இங்கு ஒருவனுடைய அடையாளம் வகுக்கப்பட்டுவிடுகிறது. இந்த வகுத்தல்களுக்கு அப்பால் நின்றிருக்கும் துணிவும் அதற்கான தேடலும் கொண்ட ஒருவன் மட்டுமே அசலாகச் சிந்திக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.
ஆகவே ஒருவகை அரசியலற்ற மனிதர்களை நான் உருவாக்க நான் எண்ணுகிறேன். ஆனால் அவர்கள் அரசியலற்றவர்கள் என்று சொல்லும்போது எந்த வகையான அரசியலும் அற்றவர்கள் என்று பொருளல்ல. இன்று பேசப்படும் பெருந்தரப்புகள் எதையும் தன் அரசியலாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்று மட்டும் தான் பொருள். அவர்கள் இதுவரை பேசப்படாத அரசியலைப் பேசுபவர்களாக இருக்கலாம். இனியும் உருவாக வேண்டிய ஒரு அரசியலை கற்பனை செய்பவர்களாக இருக்கலாம். மாற்று அரசியல் பேசக்கூடியவர்களாக இருக்கலாம்.
நான் பெருந்தரப்பு அரசியல் அனைத்துக்கும் அப்பால் சிறு அரசியல் பேசக்கூடிய அனைவரையுமே ஏற்றுக்கொள்ளக்கூடியவனாகத்தான் கடந்த முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருகிறேன் என்பதை என் எழுத்துக்களை படிப்பவர் அறிவர். ‘சிற்றரசியல்’ பேசக்கூடிய ஒருவரைக்கூட நான் அங்கீகரிக்காமல் இருந்ததில்லை. பெரிய அரசியல், குழுஅரசியல் அனைத்தின் மேலும் எனது அவநம்பிக்கையை பதிவு செய்யாமல் இருந்ததும் இல்லை.
ஒரு சமூகத்தில் இவ்வண்ணம் அரசியலற்ற ஒரு தரப்பு இருப்பதென்பது அந்த சமூகத்தின் சிந்திக்ககூடிய ஒரு பகுதி எஞ்சியிருப்பதற்கு சமம். எந்த செல்வாக்குக்கும் ஆட்படாமல், எளிதில் அடித்து செல்லப்படாமல் ஒரு பகுதி இருப்பதற்கு சமம். ஒரு மையம் அனைத்தையும் கண்காணித்தபடி பரிசீலித்தபடி இருப்பதற்கு சமம். அதிகாரம் நோக்கி போராடும் தரப்புகள் தான் சமகால அரசியல். அந்த எந்த அரசியல் தரப்புடனும் சேராத ஒரு குரல் ஒலிக்குமென்றால் அதற்கு மட்டுமே சிந்தனையில் ஏதேனும் மதிப்பிருக்கிறது. நான் உருவாக்க எண்ணுவது அந்தக்குரலைத்தான்.
ஜெ