ஒன்பதாம் தேதி இந்திய நேரம் விடியற்காலை ஒன்றேமுக்கால் மணிக்கு எனக்கு லுஃப்தான்சா விமானத்தில் பயணம் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் விமானம் மூன்றரை மணிநேரம் தாமதம். அருண்மொழி கண்ணயர நான் சிறிது எழுதினேன். உற்சாகமாக இருந்தது. விமானநிலையத்தில் இருவகை மக்கள். உயர்குடிகள்,உயர்குடிகளைப்போன்றவர்கள் . நான் மூணாம் வகை. இரு சாராரையும் வேடிக்கை பார்ப்பவன். ஆகவே கண்ட இடத்தில் வாயைப்பிளந்துகொண்டு நிற்கும் பிறப்புரிமை கொண்டவன்.
உரிய குளறுபடிகளுக்குப்பின்னர் விமானத்தில் ஏறினோம். ஏறியதுமே தூக்கம். அதற்கு முன் ஹிண்டுவில் மைசூரில் யானை புகுந்த செய்தியை வாசித்தேன். வந்தது வந்துவிட்டது, அது ஏதாவது வெண்கலக்கடையில் புகுந்திருக்கலாம் என்று ஒரு கேனத்தனமான ஆசை ஓடியது.
பிராங்பர்ட்டில் இறங்கினோம். இணைப்பு விமானம் சென்றுவிட்டது. ஆகவே புதிய விமானம். சென்னை விமானநிலையத்தில் லுஃப்தான்ஸா ஊழியர் ஒருவர் என்னை அடையாளம் கண்டு ‘நீங்க ஜெயமோகன் தானே?’ என்றார். எம்ஜிஆர் ரசிகராக இருப்பாரோ என்ற பீதி எழுந்தாலும் ‘ஆமாம்’என்றேன். அவர் இங்கே இணைப்புவிமானத்தை எழுதியே கொடுத்தார். ஆனாலும் தடுமாறி விமானநிலையத்தின் நேர் மறு எல்லைக்குச் சென்றுவிட்டோம். ஜெர்மனிய மங்கை ‘இந்தப்பகுதியில் நீங்கள் வந்தே இருக்கக்கூடாதே’ என்றாள். பர்க்மானின் கவிஞனைப்போல ‘எழுத்தாளர்கள் கூடவா?’ என்று கேட்க எண்ணினேன்
அதிகம் காக்காமல் அடுத்த லுஃப்தான்ஸா. தேன்போட்டு சமைத்த சிக்கன் சாப்பிட்டோம். ‘நல்லாத்தான் இருக்கு..’ என அருண்மொழி இழுத்தாள். நல்ல மதியம் மூன்றரை மணிக்கு வந்திறங்கினோம். வெளியே வர நாலேமுக்கால். ஒரு கேள்வியும் இல்லை. ஆகவே தயார் செய்து வைத்த பதில்களை என்னசெய்வதென்று தெரியாமல் கூடவே கொண்டு அலைந்தேன். வெளியே வந்தால் வரவேற்க யாருமில்லை. மதியம் பன்னிரண்டு மணிக்கு வரவேண்டிய விமானத்தை இரவு பன்னிரண்டு மணி என நினைத்துவிட்டிருந்தார்கள். ஒருவழியாக உஷா மதிவாணனுக்கு ஃபோன் செய்தேன். விமானநிலையத்தில் காத்திருந்தோம். டாம் சிவதாசனும் காலம் செல்வமும் வந்து அழைத்துச்சென்றார்கள்.
டொரொண்டோவில் உஷாவின் வீட்டை அடைந்தோம். அவர் மகள் ரீங்காவும் கணவர் மதிவாணனும் இருந்தனர். அ.முத்துலிங்கம் வந்து காத்திருந்தார். உற்சாகமான சந்திப்பு. இரவு ஒன்பது மணிக்கு தூங்கினேன். எழுந்தபோது நான்கு மணி. இப்போது என் கணிப்பொறியில் இந்திய நேரம் மூன்றரை.
ஜெ