«

»


Print this Post

ஜக்கி, கடிதம்


ஜக்கி,சூழியல்,கடிதம்

அன்புள்ள ஜெ.,

வணக்கம். சூழலியலுக்கும், தனி மனித ஆரோக்கியத்திற்கும் பிவிசி டிஜிடல் ப்ளெக்ஸ் பதாதைகளால் எப்படி குந்தகம் விளைகிறது என்பதைத் தான், அறிவியல் தளத்தில் எனது தொழில் அமைந்துள்ளதால், எனது முந்தைய கடிதம் மூலமாகச் சொல்ல விழைந்தேன்.

ஜக்கியின் இஷா யோகா இயக்கத்தினர், கடந்த டிசம்பர் மாதம், பசுமை சேலம் எனும் மரம் நடும் விழாவை நடத்திய போது, சேலம் நகரையே பிரும்மாண்டமான  பிவிசி பதாதைகளால் மூழ்கடித்திருந்தனர். அதைக் கண்ணுற்ற என் சூழலியல் நண்பர்கள் (மத வெறுப்பு நண்பர்களல்ல) உண்மையாகவே திகைத்து விட்டனர். சென்னையிலும் மரம் நடும் கின்னஸ் சாதனையை, அவர், கலைஞர் கருணாநிதி முன்னிலையில் தொடங்கிய போது,  அவர்களது பிரும்மாண்ட பிவிசி விளம்பர ப் பதாதைகள் சென்னை நகரையே மூழ்கடித்ததைக்கண்டு வருத்தம் மேலிட்டது. ஒரு வேளை, எனது கடிதத்தில் இதனை விளக்கியிருக்காதது எனது தவறு என்று கருதுகிறேன்.

எனது கடிதத்தில் உள்ள வசைபாடும் தோரணை – வெறுப்பிலேயே ஆரம்பிக்கும் முறை உங்களுக்கு மிகுந்த மனவிலகலை அளிக்கிறது என்று நீங்கள் எழுதியதைக் கண்டு பயந்து விட்டேன்.யார் மீதும் எனக்கு வெறுப்பு கிடையாது.  சூழலியல் என்பது முழுமையாகப் பார்க்க வேண்டிய ஒன்று.மரம் நடுவோம், ஆனால் பிவிசியினால் நகரைக் குப்பையாக்குவோம் என்பது தவறு. இந்நிலையைக்கண்ட வருத்தத்தினாலும், அதனால் ஏற்பட்ட தார்மீக ‘கோபத்தி’லும்தான் எனது கடிதத்தை ஆரம்பித்திருந்தேன். அது அவரது ஆன்மீகத்திற்கு, மதத்திற்கு எதிரான  ‘வெறுப்பாக’ வெளிப்படுகிறது என்று நீங்கள் கருதினால், என்னை மன்னிக்கவும்.

அந்நியத்துணி பகிஷ்கரிப்பும், பட்டுத்துணியும் வெவ்வேறு. காந்தி இரண்டையும் சேர்த்து குழப்பியிருந்தால்தான் தவறு. அவர் குழப்பிக்கொள்ளவில்லை. தெளிவான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார்.  ஆனால், மரம் நடுவதும், பிவிசியைத்தடுப்பதும் இரண்டுமே சூழலியல் மேம்பாடு தொடர்பானது தான். இரண்டையும் வெவ்வேறாகப் பார்ப்பது தான் அபத்தம். நான் இவர்களின் இந்த சூழலியல் அபத்தத்தை மட்டுமே விமர்சித்தேன். ஆன்மீக செயல்பாடுகளை இல்லை.

சூழலியலை, கூடியமட்டும் நடைமுறை சார்ந்து, ஆனால் முழுமையாகப் பார்ப்பது தான் சரியான நிலைப்பாடாக இருக்கும் எனும் பொருள்படும் விதத்தில்தான் எனது விமர்சனத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அது அபத்தம் என்பதாக நீங்கள் புரிந்துகொண்டால், எனது எழுத்து நடையைத்தான் நான் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆபத்தான பிவிசி ஐட்டம்களை, ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், காது குத்துக் கல்யாணம் நடத்துபவர்கள் எல்லோரும் தான் பயன்படுத்துகிறார்கள் என்று தான் எழுதியிருக்கிறேன். இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரக்கேடுகளை மட்டுமே சிறிது பட்டியலிட்டேன். அதோடு, எப்படி இந்த பிவிசி சந்தை நிறுவனங்கள்,  விளம்பர நுகர்வாளர்கள் மூலம் இதனைத் தமிழகத்தின் தலையில் கொட்டி, ஆபத்தான  குப்பைத்தொட்டியாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் பதிவு செய்திருந்தேன்.

மதவாதிகள், மீதோ, ஆன்மீக வாதிகள் மீதோ, (ஏன் கடவுள் மறுப்பாளர்கள் மீதோ கூட) எனக்கு எந்த விதக் கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் எதுவும் இல்லை.அதனை நான் எனது முந்தைய கடிதத்தில் வெளிப்படுத்தவும் இல்லை. எனது பதிவில், மதத்தைப்பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லையே? தேவையில்லாமல்  ஜக்கி மீதான எதிர்ப்பையும் சூழலியல் நோக்கையும் கலந்து கொள்கிறேன் என்று எப்படி மிக எளிதாகக்  கூறுகிறீர்கள் என்பதும் எனக்கு  திகைப்பை ஏற்படுத்துகிறது. (வசைபாடுதல், வர்க்க எதிரி, பாவனை என்றெல்லாம் சொல்லாடல்களை ஏன் உங்கள் பதிலில் பயன்படுத்தினீர்கள் என்பது சற்று வியப்பாக இருக்கிறது).

தமிழகத்தில் வைக்கப்படும் பல லட்சம் வினைல் போர்டுகளில் ஜக்கி வைக்கும் போர்டுகளின் விகிதாச்சாரம் என்ன? என்ற உங்களது கேள்விக்கு எவ்வாறு உங்களுக்கு மனவிலகல் அளிக்காமல் பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும்  துணிப்பையையோ, கூடையையோ, கடைக்கு எடுத்துச்செல்லும்போதும், கடைக்காரர் கேட்பார். நீங்கள் ஒருவர், பாலிதீன் பைகளையும், மினரல் வாட்டர் பாட்டில்களையும் பயன்படுத்தாமல் அறவே தவிர்ப்பதனால், தமிழகத்தை பிளாஸ்ட்டிக் குப்பையில்லாத மாநிலமாக மாற்றிவிட முடியுமா, அட போங்க சார் என்று என்னிடம் கடைக்காரர் கிண்டலடிப்பார்.

அதற்கு விடைகாணும் விதமாக, இரு வருடங்கள் முன்பு சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்குத்தொடுத்தேன். அதற்கு நல்லவிதமாக விடையளிக்கும் விதத்தில், உயர்நீதி மன்றம், அறுபது மைக்ரான் தடிமன் வரையிலான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு அறிவுரை வழங்கியது. அதை முந்தைய அரசு செவி சாய்க்கவில்லை. ஆனால், தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்பின் துணையுடன் ஊடகங்கள் மூலமாகவும், நேரிலும், மனுக்கள் மூலமாகவும் அரசிடம் தீவிரமாக வாதாடிவந்தேன். அதற்குக் கைமேல் பலன். அறுபது மைக்ரான் வரை தடை செய்யும் முற்போக்கான முடிவை, ஜே எடுத்து ஆளுநர் உரை மூலம் இப்பொழுது தெரியப்படுத்தியுள்ளார் என்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. பிவிசி ப்ளெக்ஸ் பிரச்சனையிலும், தீர்வு காணும் நோக்கில் மதிய மாநில அரசுகளிடம் வாதாடி வருகிறேன். உயர்நீதி மன்றத்தில் வழக்கு போடுவதற்கான ஆவணங்களும் தயார் நிலையில் தான் இருக்கிறது.

ஒரு வேளை வெற்றிபெற்றால், ஜக்கியும், திருமாவும், அழகிரியும், ஜெயலலிதா தொண்டர்களும், விளம்பர நிறுவனங்களும் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். தோற்றால், நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்தோம் என்ற திருப்தி மட்டுமே மிஞ்சும்.

அரசியல்வாதிகளைப்போன்றே, ஆன்மீக வாதிகளும் ஆர்ப்பாட்டமாக விளம்பரம் செய்கிறார்கள் என்ற எனது விமர்சனம், மதத்தின் மீதான சாடுதல் என்று நீங்கள் கருதினால், அதற்கும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
அ.நாராயணன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/16823/