கட்டண உரை, கடிதங்கள்

வணக்கங்கள்….தாங்கள் நலமா

தாங்கள் திருப்பூரில் “கல்தூணும் கனிமரமும் ” என்ற தலைப்பில் நிகழ்த்திய கட்டண உரை சிறிது காலத்திற்கு பின் யூ டியூப் தளத்தில் கிடைக்கும் என பதிவிட்டிருந்தீர்கள்.

தற்போது அடுத்த கட்டண உரை அறிவிப்பும் வந்தாகி விட்டது, மனம் கனிந்து அந்த உரையினை பதிவிட வேண்டுகிறேன்.

தங்களது திருக்குறள் உரை, கீதை உரை , மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி மற்றும் கல்லெழும் விதை போன்ற விதைகள் போன்ற உரைகள் என்னுடைய வாழ்க்கைப் பார்வையை விசாலப்படுத்தியது.

பொருளாதார மற்றும் லௌகீக சிக்கல்களினால் நேராக வரமுடியாத என் போன்றோருக்கு தங்களை அணுக யூ டியூப் மற்றும் உங்கள் இணையதளம் தானே வழி……

தயவுசெய்து தங்களது உரையை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்…..

அன்புடன்

கந்தசாமி

***

அன்புள்ள கந்தசாமி

அந்த உரை சுருதிடிவியிடம் உள்ளது. அவர்கள் ஏதோ ஒருவகையில் அதை வெளியிடுவதாகச் சொன்னார்கள். எப்போது வெளியிடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ

நாமக்கல் உரை பற்றிய அறிவிப்பு கண்டேன்

உங்கள் மற்ற உரைகளில் இருந்து இந்த வகையான உரைகள் மேலும் ஒருபடி மேலே உள்ளன. இவை ஒரு முழுநூலையும் வாசித்து முடித்த அனுபவத்தை அளிக்கின்றன. ஒட்டுமொத்தமான ஒரு பார்வையை உருவாக்குகிறீர்கள். ஒருபக்கம் வரலாறு இன்னொரு பக்கம் தத்துவம். ஆனால் மொழி இலக்கியம்.

எதிர்பார்க்கிறேன்

செந்தில்ராஜ்

***

அன்புள்ள செந்தில்ராஜ்

இந்த உரைகளை நான் ஒரு தொடராகவே செய்துவருகிறேன். என் நோக்கம் எனக்கே ஒரு விரிந்த பார்வையை உருவாக்கிக் கொள்வது. நான் உணர்ந்து தெளிவுற்றவற்றையே சொல்கிறேன். ஆனால் அவை என்னால் இன்னமும் எண்ணி அடுக்கப்படாதவை. ஆகவே இந்த உரைகள் நன்கு தயாரிக்கப்பட்ட அறைகூவல்தன்மை கொண்ட உரைகள் அல்ல. எனக்கு என்னுடன் பொறுமையாக கூடவரும் ஒரு அவை தேவை.

ஜெ

***

முந்தைய கட்டுரைஇரண்டு பாம்புகள்
அடுத்த கட்டுரைதாவரங்கள் காத்திருக்கின்றன – லோகமாதேவி