கடிதங்கள் – அசோகவனம்

அன்புள்ள ஜெ

அசோகவனம் புத்தகத்தை அச்சிடுவதைக் கண்டேன். மகிழ்ச்சி.நினைத்ததை விடச் சிறிய வடிவத்தில் கைக்கு அடக்கமாக வந்திருக்கிறது.ஆமாம்!முதல் பாகத்திற்கே அந்த அச்சகத்தார் இப்படி பயந்தால் எப்படி?

அன்புடன்
ராமானுஜம்.

அன்புள்ள ராமானுஜம்,

ஒரு நகைச்சுவை. நடிகர் சார்லி சொன்னது. ஒரு பிரபல வாரிசு நடிகர், அவருக்குக் கதையே புரியாது. ஆனால் தினம் கதைகேட்டு உதவி இயக்குநர்களைக் கொடுமை செய்வார்.

ஒருவர் கதை சொல்லச் சென்றார். நடிகர் கேட்க அமர்ந்தார். கதை சொல்லி,ஆரம்பித்தார் ‘திங்கள்கிழமை காலை சுமார் ஐந்தரை மணி அளவுக்கு மாடிவீட்டு சாந்தா தன் வீட்டு வாசல்படியில் நின்று தெருவை வேடிக்கை பார்த்தபடி நிதானமாக  ஈரக்கூந்தலை ஆற்ற ஆரம்பித்தபோது’

நடிகர் சொன்னார் ‘நல்ல லைன் தலைவா, டெவலப் பண்ணுங்க’

கதைசொல்லி சொன்னார் ‘சார் இது படத்தோட தலைப்பு. கதைய இனிமேல்தான் சொல்லப்போறேன்’

ஜெ

==============================

என்ன படித்து என்ன பிரயோஜனம்?

மடையன் எல்லாம் வெறுமனே நிமிர்ந்து நடப்பதன் மூலமும் வெறுமனே கெத்தாகப் பேசுவதின் மூலமுமே பெரிய அறிவாளியைப் போல் மற்றவர்கள் மனதில் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தைப் பதிய வைத்து விடுகின்றான். என்ன படித்து என்ன பிரயோஜனம்?

எஸ். மணி

 

அன்புள்ள மணி,

உண்மைதான். நானும் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆகவே ஒன்றும் படிக்காதவர்களைப் போல நடந்துகொள்வது. அப்போது ‘ஏமாத்திட்டேனே’ என்கிற சந்தோஷம் வருகிறதல்லவா?

===============

அன்புள்ள ஜெயமோகன்,

நிஜமாகவே அசோக வனம் இத்தனை பெரிய புத்தகமா?! இத்தனை நீண்ட கதை எனில் தனித் தனி பாகங்களாக வெளியிடலாமே?  இந்தப் புத்தக வெளியீட்டைப் பற்றி மேலும் கொஞ்சம் சொல்லுங்கள்.

பாலா
கோவில்பட்டி

அன்புள்ள பாலா

நூல்வெளியீட்டையும் கல்ஃபோர்னியாவிலேயே வைத்துக்கொள்ள எண்ணம். நூலை வெளியிடவும் பெற்றுக்கொள்ளவும் ஆரோக்கியமான வி ஐ பிக்கள் தேவை என்பதனால் ஆர்னால்ட் சிவநேசரிடமும்  சிலுவைஸ்டார் ஸ்டாலனிடமும் பேசிக்கொண்டிருக்கிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைகாடு, களம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜக்கி, கடிதம்