விமர்சனத்தை எதிர்கொள்ளுதல்…

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்  ‌,

 என் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு “மீச்சிறுதுளி” கடந்த மார்ச் மாதம் வாசிகசாலை பதிப்பகம் மூலம்  வெளியானது. நூல் வெளியானவுடனேயே தங்களிடம் தந்து ஆசி பெறவே மனம் துடித்தது. நீங்கள் தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் குமரகுருபரன் விருது விழாவில்தான் நேரில் சந்தித்து ஆசி பெற முடிந்தது. நூல் வெளியான நிறைவை அப்போதுதான் அடைந்தேன். வீட்டுச் செடியில் மலர்ந்த மலரை தெய்வத்தின் சன்னதியில் சேர்த்த நிறைவு அது.

பதிப்பகம் சார்பாக நூல் அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு சிறப்புரையாற்ற யாரை அழைப்பது என்பதை என்னைக் கேட்டே முடிவு செய்தார்கள். தெரிந்த நண்பரையே நான் பரிந்துரைத்தேன். அந்நண்பர் சிறுகதைகள் ஜெயமோகனின் மாடன் மோட்சம், திசைகளின் நடுவே போலவோ ஜி. நாகராஜனின் “துக்க விசாரணை’ போலவோ தன்னை பாதிக்கவில்லை எனக் கூறி  நூலிலுள்ள கதைகளை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார். இந்நிகழ்வுக்குப் பின் கதை எழுத அமர்ந்தால் நண்பர் கூறியதுபோல அழுத்தமான கரு இல்லையோ கூர்மையான மொழியில்லையோ என எண்ணங்கள் தோன்றி எழுதவிடாமல் செய்தன. சில நாட்களுக்குப் பிறகு மதிப்பிற்குரிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அலைபேசியில் அழைத்து, முதல் தொகுப்பைவிட மீச்சிறுதுளி தொகுப்பு மேம்பட்டதாக உள்ளதென்றும் முக்கியமாக கன்னிச்சாமி, நீர்வழிப்படுதல் மற்றும் மீச்சிறுதுளி கதைகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார். இது என் மனதை  சற்று ஆசுவாசப்படுத்தியது.

என் வாழ்க்கையை எழுதுவதற்காகத்தான் நான் எழுத வந்துள்ளேன். அது எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்பதில்லை என எனக்கே சமாதானம் செய்து கொண்டாலும் எழுத மனம் கூடவில்லை. அப்போதுதான் தங்களை சந்திக்க வாய்த்தது. உங்களிடம் அதைப்பற்றி எதுவும் கூறவில்லை. நூலை கையில் வாங்கியவுடன் சிறு பிள்ளை பரிசை பெறுவதுபோல தங்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி எனக்குள் பெறும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அதனை திரும்பத் திரும்ப அடையவே தொடர்ந்து எழுதுவது என உறுதி கொண்டுவிட்டேன். என்னால் இயன்ற மலர்களை இறைவன் சன்னதியில் வைப்பதே என் கடன் எனத் தெளிந்துள்ளேன். இது சரியா.

நான் எழுதுவதையே தொடரலாமா அல்லது தீவிரமான கரு மற்றும் அடர்த்தியான மொழியை கண்டடைய வேண்டுமா என்பதை தெளிவுறுத்துமாறு தங்களைக் கோருகிறேன்.

அன்புடன்

கா. சிவா

அன்புள்ள சிவா

என்னுடைய சில நாவல்கள் இன்று ஒரு கல்ட் என்னும் அளவுக்கு வாசிக்கப்படுபவை. விஷ்ணுபுரம், காடு, இரவு மூன்றும் வெவ்வேறு களங்களில் பெரிய எண்ணிக்கையில் தீவிரவாசகர்களைக் கொண்டவை. மூன்று நாவல்களும் வெளியானபோது கடுமையான எதிர்விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக காடு பற்றி திட்டமிட்டே அன்றிருந்த இலக்கிய இதழ்களான காலச்சுவடு போன்றவை மிக எதிர்மறையான விமர்சனங்களை வெளியிட்டன. எல்லாவகையிலும் முதிர்ச்சியற்ற சிறுமனிதர்கள் ஆணையை தலைக்கொண்டு எழுதிய மதிப்புரைகள் அவை. அவற்றால் என்ன ஆயிற்று?

பெரும்பாலும் ஒரு முக்கியமான படைப்பு உடனடியாக சில எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுவிடுகிறது. இரண்டு காரணங்கள். ஒன்று, பொறாமை. அதை ஓடிப்பிடித்து வாங்கி வாசிப்பவர்களில் ஒருசாரார் அதன் போட்டியாளர்கள். இன்னொன்று, புரியாமை. ஒரு புதிய படைப்பு புதிய களம், புதிய சுவை ஒன்றை கொண்டுவருகிறது. அதை கொஞ்சம் முன்னகர்ந்து அடையவேண்டும். உறுதியாக நின்றிருப்பவர்களால் அது இயலாது.

ஆகவே, விமர்சனங்கள் எவ்வகையிலும் எழுத்தாளனை பாதிக்கவேண்டியதில்லை. எந்த விமர்சனமும் அறுதியானது அல்ல. ஆனால் விமர்சனங்களை கவனிக்கவேண்டும். அதைச் சொல்பவர் நம்மிடம் மேலும் எதிர்பார்க்கிறாரா என்பது ஒரு கேள்வி. நாம் எழுதியவற்றிலுள்ள நுட்பங்கள் அவருக்கு தெரிகிறதா என்பது அடுத்த கேள்வி. இரண்டுக்கும் ஆம் எனில் நாம் அவரை கவனிக்கவேண்டும்.

நம் படைப்பில் நாம் எய்தியவை என நாமறிந்தவற்றை தொட்டுப் பேசும் ஒருவன் மேலே சொல்லும் விமர்சனங்களுக்கு மட்டுமே ஏதேனும் மதிப்பு உள்ளது. அல்லாதவர்கள் நம் வாசகர்கள் அல்ல.

சரியான விமர்சனம் நமக்கு அறைகூவல். நாம் முன்னகர்வதற்கான தூண்டுதல். எழுத்தாளன் ஒருபோதும் நான் இவ்வளவுதான், இதையே எழுதுவேன், இங்கேயே நிற்பேன் என முடிவுசெய்துவிடக்கூடாது

ஜெ

மீச்சிறு துளி வாங்க 

முந்தைய கட்டுரைஅன்புராஜ், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎம்.எஸ்.கமலா, மறதி எனும் அரசியல்