லோலோ

லோலோ ஃபெராரி (Lolo Ferrari) என்னும் பெயரை கேள்விப்பட்டிருப்பவர்கள் கொஞ்சம் வயதானவர்களாகவே இருப்பார்கள். ஏனென்றால் தொண்ணூறுகளில் புகழ்பெற்றிருந்த அந்த பாலியல்பட குணச்சித்திர நடிகை மறைந்து, அடுத்தடுத்த நடிகைகள் வந்து கால்நூற்றாண்டு ஆகிறது. என்னை விட ஒரு வயதுதான் இளையவர். வாழ்ந்திருந்தால் பாட்டியாக திகழ்ந்திருப்பார். 2000 த்தில் மறைந்தார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ணன் என் கைக்குழந்தை என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது குமுதம் தீராநதி இதழில் வெளிவந்து பின்னர் வாழ்விலே என்னும் தொகுப்பாக ஆகியது. அக்கட்டுரை லோலோ பற்றியது.

லோலோ பெராரி வரலாற்றில் இடம்பெறுவது ஒரு குறிப்பிட்ட காரணத்தால். அந்த அம்மையார்தான் மைக்கேல் ஜாக்ஸனுக்கு நிகராக தன் உடலை அறுவை சிகிழ்ச்சை வழியாக மாற்றிக்கொண்டவர். அவர் தன் உடல்வழியாக பயணம்செய்துகொண்டே இருந்தார் என்று நான் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்

லோலோவின் மார்பகங்கள் அசாதாரணமான அளவுக்கு பெருகவைக்கப்பட்டன. அந்த எடையை தாங்க முதுகெலும்பில் உலோகத்தகடுகள் பொருத்தப்பட்டன. இடை மிகச்சிறிதாக ஆக்கப்பட்டு, அதன்பொருட்டு கருப்பையும் இரைப்பையும் நீக்கப்பட்டன. அவர் புரோட்டின் ஜெல்லி மட்டுமே உண்ணமுடியும். அவர் உதடுகள் பெரிதாக்கப்பட்டன. கண் மாற்றியமைக்கப்பட்டது. அவருடைய பெயர் கூட உண்மையானது அல்ல.

லோலோவின் மூக்கு உதாரண ரோமன் மூக்காக ஆக்கப்பட்டது. ஆகவே மூச்சுவிடமுடியவில்லை. ஆகவே ஆக்ஸிஜன் அறைகளில் வாழ்ந்தார். கடுமையான உடல்வலியால் வலிநிவாரணிகளை உண்டார். உடல் ஒவ்வாமையை தவிர்க்க நோய் எதிர்ப்புசக்தி குறைக்கப்பட்டது. டாக்டர்கள் அவர் உடலில் சோதனைகளை செய்துகொண்டே இருந்தனர்.

லோலோ தன் 38 ஆவது வயதில் மருந்துகளின் ஒவ்வாமையால் மறைந்தார். அதன்பின் அவர் கணவர் கொலைக்குற்றத்துக்கு விசாரிக்கப்பட்டார். ஆனால் லோலோ மறைந்தபோது எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் வழியாக அவரை அறிந்த நான் திகைப்ப்படைந்தேன். அவரை ’மண்ணுக்கு வந்த தேவதை’ என பலர் விம்மியிருந்தனர். அவர் ஒரு பார்பி பொம்மை. தசையில் வடிக்கப்பட்டவர்

ஆணின் அத்துமீறிய கற்பனைக் காமம் உருவாக்கிய பிம்பம் லோலோ.  அவன் பகற்கனவில் உருவான ஓர் உருவம் நோக்கி அவரை செதுக்கிச் செதுக்கி கொண்டுசென்றனர். பலிகொண்டனர்.

நந்திகலம்பகத்தில் வரும் ஒரு பாடல் இது.

(இந்த நூல் சுவாரசியமான சில பின்கதைகள் கொண்டது பார்க்க நந்திக் கலம்பகம் )

கைக்குடம் இரண்டு கனகக் கும்பக் குடமும்

முக்குடமும் கொண்டால் முறியாதோ – மிக்கபுகழ்

வேய்காற்றினால் விளங்கும் வீரநந்தி மாகிரியில்

ஈக்காற்றுக்கு ஆகா இடை

கையில் ஒரு குடம்.மார்பகங்கள் இரண்டும் பொன்னாலான கும்பம் போன்ற குடங்கள். மூன்றுகுடங்களை ஏந்திச்சென்றால் முறியாதா, புகழ்மிக்க நந்தியின் மூங்கில்காற்றில் விளங்கும் மாநகரில் ஈபறக்கும் காற்றுக்கே தாங்கமுடியாமல் துவளும் உன் இடை?

மிகையின் அழகு என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் ஓர் எல்லை வேண்டாமா என்று சொல்லத் தோன்றுகிறது.

சங்ககாலத்துக் கவிதையில் ஒரு சமநிலை உண்டு. ஒன்று யதார்த்தச் சித்திரம். இன்னொன்று அதிலிருந்து எழும் கற்பனை. பசலை படர்தல், கைவளை நெகிழ்தல் எல்லாமே கற்பனையின் விரிவாக்கம்தான். ஆனால் இணையாக மறுபக்கம் உண்மையான வாழ்க்கையின் உணர்ச்சிகளும் சித்திரங்களும் உண்டு.

கற்பனை மேலெழுந்து நிற்பது கம்பராமாயணத்தில். அதிலுள்ள காமம் முழுக்கமுழுக்க நகைகளைச் செதுக்குவதுபோல உருவாக்கப்பட்டது. உருவாக்க உருவாக்க போதாமலாகி, மேலும் மேலுமென்று போய், மிகையாகிவிட்டது. ஆனால் கம்பனின் மிகை என்பது வர்ணனைகளில்தான். நாடகீயத் தருணங்களில் வாழ்க்கையின் சித்திரம் உள்ளது. அது ஈடுசெய்யும் அம்சம்.

கம்பராமாயணத்தை ஒட்டி பின்னர் உருவான புராணங்கள், சிற்றிலக்கியங்களில் கற்பனை மட்டுமே உள்ளது. அனேகமாக வாழ்க்கையே இல்லை. அவர்களின் பெண்கள் எல்லாமே லோலோக்கள்தான். ஆண்களின் கனவை, கற்பனையை, அவற்றின் அத்துமீறலை தங்கள் வடிவமாகக் கொண்ட லோலோக்கள்.

ஆனால் ஈக்காற்று ஒரு நல்ல சொல்லாட்சி

*

நந்திக் கலம்பகம் தமிழ் விக்கி

நந்திவர்மன் காதலி தமிழ்விக்கி


வாழ்விலே ஒருமுறை வாங்க

வாழ்விலே ஒருமுறை கடிதங்கள் 

முந்தைய கட்டுரைஆறுமுகப்பெருமாள் நாடார், நாட்டாரியல் உ.வே.சா.
அடுத்த கட்டுரைஇரண்டு பாம்புகள்