தேவநேயப் பாவாணர், சந்திரசேகர சரஸ்வதி, மொழியியல்

தேவநேயப் பாவாணர்

கபிலர் 

அன்புள்ள ஜெ,

தமிழ் விக்கியில் தேவநேயப் பாவாணரின் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டேன் ஆகா ஓகோ என எழுதியிருந்தீர்கள். நான் அறிந்த வரை இன்றைக்கு சீமான் போன்றவர்கள் தாக்கு – அட்டாக்கு என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதற்குக் காரணமாக அமைந்தவர் அவர்தான். அவரைப்பற்றி அப்படி ஒரு நீண்ட பதிவு எதற்காக? அவருக்கு நீங்கள் அளிக்கும் அறிவுத்தகுதி என்ன?

ஸ்ரீராம் மகாதேவன்

தேவநேயப் பாவாணர்

அன்புள்ள ஸ்ரீராம்,

இது இன்னொரு நண்பர் முகநூலில் இருந்து வெட்டி எடுத்து அனுப்பி உண்மையா என்று கேட்டது

கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்

“கலிஃபோர்னியா” என்ற இடத்துக்குப் பெயர்க் காரணம் சொல்கிறார் பெரியவா.
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக்கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு வம்சத்து சகரர் என்னும் அரசர் அச்வமேத யாகம் செய்தார். இந்த யாகத்தைச் செய்ய வேண்டுமென்றால், முதலில் ஒரு குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்புவார்கள்.

அதை எந்த அரசனாவது பிடித்துக் கட்டிப் போட்டால் அவனுடன் யுத்தம் செய்து வென்று, பிறகு எல்லோரும் பாராட்ட இந்த யாகம் செய்யப்படும். பொதுவாக எல்லா அரசர்களும் வம்பு செய்யாமல் அந்தக் குதிரைக்குரிய கப்பம் செலுத்திவிட்டு அரசனைச் சக்ரவர்த்தி என்று ஒப்புக்கொண்டு விடுவார்கள்.

ஆனால் இந்த யாகத்துக்கு முதலில் இந்திரன்தான் தடங்கல் செய்வான். ஏனெனில் நூறு அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திர பதவி ஒருவனுக்குக் கிடைத்துவிடும். தனது பதவி பறி போகாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது இந்திரன் வழக்கம். எனவே அவன் சகரர் விட்ட குதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாதாள உலகில்

கபிலர் தவம் செய்யும் ஆஸ்ரமத்தில் கொண்டு யாருக்கும் தெரியாமல் கட்டிவிட்டான். அதைத் தேடிக்கொண்டு வர சகரன் தன் நூறு பிள்ளைகளையும் அனுப்பவே, அவர்களும் எப்படியோ கபிலாச்ரமம் வந்து சேர்ந்து, கபிலர்தான் பிடித்துக் கட்டிவிட்டதாக நினைத்து அவரிடம் சண்டைக்குப் போனார்கள். அதனால் கோபங்கொண்ட கபிலர் ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான்! அங்கு வந்த நூறு பேரும் சாம்பலாகிப் போனார்கள். இது சகரனுக்குத் தெரிந்து அவன் சென்று கபிலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அசுவமேத யாகம் செய்து முடித்தானென்பது ராமாயண முன்கதையில் தெரிகிறது.

அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது. சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLAND என்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது.

இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்துபெரியவா சொன்னால் திகைப்பு அடங்கவே அடங்காது.

Jaya Jaya Shankara hare hare shankara

*

இதை என்ன சொல்வீர்கள்?

இதில் உள்ள நுண்ணடுக்குகள் பல. அமெரிக்காவை ‘பாதாள’ உலகமாக நினைப்பது முக்கியமானது.

சாங்கிய யோகத்தை உருவாக்கிய கபிலர் ‘பாதாளத்தில் தவம் செய்பவர்’ என்னும் தொன்மத்தின்  உட்பொருளும் நோக்கத்தக்கது. பல பௌத்த கதைகளில் அவர் வைதிகர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார் என வருகிறது. மிகப்பின்னரே அவர் ஏற்படைந்தார் என கோசாம்பி போன்றவர்கள் சொல்கிறார்கள்.

ஆக இந்த சொற்பகுப்பையும், விரும்பிய அர்த்தம் கொள்ளுதலையும் எல்லாரும்தான் செய்கிறார்கள்.

*

உண்மையில் சொல்வழியாகச் சிந்திப்பது என்பது இந்திய சிந்தனை முறையில் மிக அடிப்படையான ஒன்று. ஏனென்றால் இந்தியாவில் குறைந்தது ஐந்து மொழிகள் மிகத்தொன்மையான வேர்ச்சொல் அடுக்கு கொண்டவை. தமிழ், சம்ஸ்கிருதம் பாலி, பிராகிருதம், மற்றும் முண்டா மொழிகள். ஒரு கருத்தைப் பற்றிப் பேச அதற்குரிய சொல்லை எடுத்து, அதன் வேர்ச்சொல் கண்டடைந்து, அதிலிருந்து தொடங்குவதை இந்தியாவின் மரபுசார் அறிஞர்கள் அனைவரிடமும் காணலாம். குருகுலங்களில் அம்முறை இன்றும் உள்ளது

கருத்து என்ற சொல்லையே எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வேர் கரு. கரு என்றால் உள்ளிருப்பது. மறைந்திருப்பது என்னும் பொருள் அதிலிருந்து எழுந்தது. கரவு போன்ற சொற்கள். இருண்டது என்னும் பொருள் மேலும் வந்தது. கார் முகிலுக்கும், யானைக்கும் எல்லாம் அச்சொல் விரிந்து கொண்டே சென்றது. இந்த பெருஞ்சித்திரத்தை உருவாக்கிக் கொண்டால் முன்னோர் கருத்து என்பதை எப்படி பார்த்தார்கள், கருத்து என்னும் கருத்துருவம் எவ்வாறு வளர்ந்தது என்பதெல்லாம் வெளிப்படும். அச்சொல் இன்றைய நடைமுறையில் எப்படி செயல்படுகிறது, அது குறிப்பிட்ட தத்துவக் களங்களில் என்னென்ன பொருள் கொள்கிறது என்று ஆராய்ந்து மேலே செல்லலாம். அதன் அர்த்தவேறுபாடுகளை பற்றிப் பேசினாலே கருத்து என்னும் கருத்துருவின் எல்லா தளங்களையும் விரிவாகப்பேசிவிடலாம்.

ஆனால் இப்படிச் செய்ய வேண்டுமென்றால் சில தகுதிகள் தேவை. கலைச்சொல்லை கண்டறிதலும் சரி பொருள் கொள்ளுதலும் சரி இஷ்டத்துக்குச் செய்யக்கூடுபவை அல்ல. அதற்குச் சில முறைமைகள் உள்ளன. அந்த முறைமைகள் பழங்காலம் முதல் வளர்ந்து வந்துள்ளன. சென்ற நூறாண்டுகளில் மொழியியல், நாட்டாரியல், சமூகவியல், மானுடவியல், நவீன வரலாற்றெழுத்து ஆகியவை சார்ந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றை எல்லாம் கற்று, பயன்படுத்திக் கொண்டு செய்யப்படும் சொல்லாய்வே பயனுள்ளது.

ஆனால் அறிஞர்கள் சொல்லாய்வு செய்வதைக் கண்டு அனைவருக்கும் அதை தாங்களும் செய்யலாம் என்னும் நம்பிக்கை வருகிறது. அதற்கு பெரிய படிப்போ, நூல்களை மேற்கோள்காட்டும் நினைவுச்சக்தியோ தேவையில்லை. விரும்பியபடிச் செய்யலாம். பாமரர் நடுவே அறிஞர் என்ற பாவலாவையும் காட்டிக்கொள்ளலாம்.

சுந்தர ராமசாமி சொல்வார். எந்த ஒரு கருத்தைச் சொன்னாலும் தமிழ்ச்சமூகத்தில் இருந்து அதற்கு எதிர்வினையே வராது, ஆனால் சொல்லாய்வு செய்தால் மட்டும் எதிர்வினைகள் வந்து குவியும். சொல்லாய்வு செய்பவரைச்சுற்றி மட்டும் பெருங்கூட்டம் கூடிவிடும். ஏனென்றால் நம்மவர்களுக்கு புரிபடுவது, அவர்களாலும் செய்யக்கூடுவது அது ஒன்றென.

ஆகவே இங்கே சொல்லாய்வு என்றபேரில்தான் மொத்த ’சிந்தனை’யும் நடந்துகொண்டிருக்கிறது. வரலாற்றய்வு, பண்பாட்டாய்வு எல்லாமே சொற்களை எடுத்து விருப்பப்படி பொருள் அளிப்பதாகவே உள்ளது. அதை அறிஞர் முதல் பாமரர் வரை அனைவரும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு டீக்கடையில் பதினைந்து நிமிடம் நின்றாலே எவரேனும் ஒருவர் சொற்பகுப்பு செய்ய ஆரம்பிப்பதை காணலாம். ‘அதாவது இப்ப ஆரல்வாமொழின்னா என்ன? ஆரல்ங்கிற்து ஒரு மீனாக்கும்…’

சொற்பொருள் கொள்வதற்கு பழங்காலத்தில் சம்ஸ்கிருத மரபிலும், தமிழ் மரபிலும் இலக்கண நெறிகளும், வழக்கு நெறிகளும் பல உள்ளன.சொற்கள் எப்படி புணரும், எப்படி நீளும், எப்படி ஒலித்திரிபடையும், எப்படி ஒலிக்குறிப்பு வளரும் என்பதறான இலக்கணங்கள் அவை. சத்யகனின் மகன் சாத்யகி ஆவான். பாண்டுவின் மகன் பாண்டவன் ஆவான். குருவம்சத்தவன் கௌரவன் ஆவான். இந்த இலக்கணத்தை உதாரணமாகச் சொல்கிறேன். பூச்சை என்னும் தமிழ்ச்சொல் (பூனை) பூசை என திரிபடையும்.( கம்பராமாயணம்)

இந்த இலக்கணத்தை ஒருவர் நன்றாக அறிந்திருக்கவேண்டும். தான் ஒரு சொல்லைப் பற்றிப் பேசுகையில் அதன் இலக்கணக்குறிப்பைச் சொல்லி அதை நிறுவவேண்டும். அச்சொல்லை அப்படி பொருள் கொள்வதற்கான இலக்கிய முன்னுதாரணங்களை முன்னோடிப் பெரும்படைப்புகளில் இருந்து குறிப்பிடவேண்டும். அப்படிச் சொன்னால்தான் பழங்கால அவைகளில் மதிப்பார்கள். இல்லாவிட்டால் கல்லாதான் கற்ற கவி. அல்லது முகநூலான் உதிர்த்த முத்து. அவ்வளவுதான்.

ஆனால் இன்று அது மட்டும் போதாது. இன்றைய அறிவுத்துறைகளில் அறிமுகம் இருக்கவேண்டும். மொழியியல், நாட்டாரியல், மானுடவியல், சமூகவியல் மற்றும் நவீன வரலாற்றெழுத்துமுறை ஆகியவற்றில் அறிமுகமில்லையேல் மரபார்ந்த பேரறிஞர்கள் கூறுவதுகூட உளறலாக ஆகிவிடும்.

ஒன்று சொல்கிறேன், என் இல்லத்தருகே வாழ்ந்தவர் எனக்கு மிக அணுக்கமானவரும் ஆசிரியர்போல இருந்தவருமான மலையாள நாட்டாரியல் பேரறிஞர் திரிவிக்ரமன் தம்பி. இடப்பெயர் வரலாறு போன்ற பெருநூல்களின் ஆசிரியர். அவர் நாட்டாரியல் உலகம் முழுமையிலும் இருந்து கண்டடைந்த ஒரு பொதுவிதியையும், தமிழ்ச்சூழலில் அதற்கு இருக்கும் ஒரு விதிவிலக்கையும் பற்றிச் சொன்னார்.

அதாவது ஓர் ஊரின், அல்லது ஒரு பொருளின் பெயர் ஒருபோதும் செவ்வியல் வழக்கில் இருந்து போடப்பட்டிருக்காது. எந்த ஊருக்கும் அரசாங்கமோ, கவிஞனோ பெயர் சூட்டுவதில்லை. மக்கள் வழக்கில் இருந்தே பெயர் உருவாகி வந்திருக்கும். ஆனால் நம் தொடக்ககால அறிஞர்களுக்கு ஒரு மயக்கம் இருந்தது. எல்லா சொற்களும் தொடக்கத்தில் ‘தூய’ நிலையில் இருந்தன, பின்னர் பேச்சுவாக்கில் திரிந்தன என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. ஆகவே எல்லா சொல்லுக்கும் தூயவடிவை கண்டடைய முயல்வார்கள். அதுவே மூலம் என்று சொல்லி வைப்பார்கள்.

நாட்டாரியலின்படி அந்தப்பார்வை பிழையானது. அப்படி செவ்வியல் பெயர் திரிந்து உருவானவை அல்ல ஊர்ப்பெயர்களில் பெரும்பாலானவை. அவை மக்கள் வழக்கில், அன்றாட நடைமுறையில், இயல்பாக அமைந்த பெயர்கள்தான். பலசமயம் பின்னர் அவை செவ்வியல்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே பெயர்களை செவ்வியல் உச்சரிப்பு நோக்கி கொண்டுசென்று பொருள்கொள்ளும் பிழையை ஆய்வாளர் செய்ய மாட்டார்கள்.

ஆனால் விதிவிலக்கு உண்டு. அரசனால் உருவாக்கப்பட்ட ஊர்கள், ஆலயம் அமைந்து அதன்பின் உருவான ஊர்கள் செவ்வியல்பெயர்கள் கொண்டிருக்கும். அவற்றுக்கு கவிஞர்கள் போட்ட பெயர் இருக்கும். ஆனால் ஆராய்ந்து சென்றால் அப்படி அந்தப் பெயர் போடப்படுவதற்கு முந்தைய நாட்டார் மரபு சார்ந்த ஒரு பெயரும் அந்த ஊருக்கு இருக்கும்.

திரிவிக்ரமன் தம்பி

திரிவிக்ரமன் தம்பி அளித்த இந்த புரிதல் விஷ்ணுபுரம் நாவல் முழுக்க இருப்பதை வாசகர்கள் உணர்ந்துகொள்ள முடியும். அந்தில் எல்லா ஊர்களுக்கும், மலைகளுக்கும், ஆறுகளுக்கும் ஒரு பழங்குடிப்பெயர், ஒரு நாட்டார் பெயர், ஒரு செவ்வியல் தமிழ்ப்பெயர், ஒரு சம்ஸ்கிருதப்பெயர் இருக்கும்.

திரிவிக்ரமன் தம்பியும் சரி, வையாபுரிப் பிள்ளையும் சரி, அவர்களின் வழிவந்த அ.கா.பெருமாளும் சரி, ஒரு சொல்லை பொருள்கொள்ளும்போது கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் அச்சொல் எப்படி உள்ளது என்பதை பார்க்கிறார்கள். முதன்முதலில் அச்சொல் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதில் இருந்தே ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு சொல்லுக்கு ஒரு குறிப்பிட்ட வகையில் பொருள்கொள்வது என்றால் அதற்குமுன் அதேசொல்லை, அல்லது அதைப்போன்ற சொல்லை எப்படி பண்டைய இலக்கியங்களில் பொருள்கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவார்கள்.

இதுதான் அறிவியல் முறைமை. துரதிருஷ்டவசமாக நாம் சயன்ஸ் என்றும் அறிவியல் என்றும் பேசுவதெல்லாம் தொழில்நுட்பம் பற்றி மட்டுமே. அறிவியல் முறைமைகளின்படியே மொழியும்,சமூகமும், பண்பாடும், வரலாறும் ஆராயப்படமுடியும் என நாம் உணர்வதே இல்லை.

*

தேவநேயப் பாவாணரும் சரி, காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியும் சரி பேரறிஞர்கள் என்றே நான் நம்புகிறேன். அவர்களின் ஒட்டுமொத்த பேச்சு, எழுத்தை வைத்து அதைச் சொல்கிறேன். ஆனால் நவீன அறிவியல் முறைமைகள் பற்றிய அறிதல் இன்மையாலும், பலவகை பண்பாட்டு முன்முடிவுகளாலும் அவர்கள் இழைக்கும் பிழைகளும் பல உண்டு.

அறிஞர்கள் சொல்லும் சரிகள் வளர்வதைவிட பிழைகள் பலமடங்கு பெரிதாக வளர்கின்றன. ஏனென்றால் வழிவருவோருக்கு அவைதாம் புரிகின்றன. மேலே வளர்த்துக்கொள்ள எளிதாக உள்ளன. அவர்களைக்கொண்டு நாம் அறிஞர்களை கணக்கிடக்கூடாது.

தேவநேயப் பாவாணரின் மொழியாய்வில் பல எல்லைமீறல்களும் அதன் விளைவான பெரும்பிழைகளும் உண்டு. இன்று அவை நகைப்புக்கிடமானவையாக தெரியலாம். அவர் நவீன மொழியியலையோ நாட்டாரியல், சமூகவியல் ஆகியவற்றையோ அறியாதவர். அவர் தமிழாசிரியர் மட்டுமே. அவருக்கு வரலாற்றின் எழுத்துமுறை, தொல்லியல் மற்றும் அதன் அறிவியல் சார்ந்த எந்தப்புரிதலும் இல்லை என அவர் தமிழிலக்கியங்களுக்கு காலக்கணிப்பு செய்தமையே சான்று.

அதேபோலத்தான் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியும். அவர் சம்ஸ்கிருதப் பேரரறிஞர். ஆகமங்கள், நிகமங்களில் ஆராய்ச்சி கொண்டவர். ஆனால் நவீனச் சொல்லாய்வுக் களங்களை அறியாதவர். அறிஞர்களின் எல்லைகளை அறிந்திருக்கவேண்டும், அதைவைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது.

தமிழின் மாபெரும் வேர்ச்சொல் தொகுதியை, அச்சொற்க்களஞ்சியத்தின் வளர்ச்சிமுறையை, அதன் பல உள்ளுறைந்த நெறிகளை அடையாளம் காட்டியவர் பாவாணர்  தான். அதன் அரசியலில் எனக்கு ஈடுபாடில்லை. ஆனால் அது இலக்கியவாதியாகவும், தத்துவ மாணவனாகவும், பண்பாட்டு ஆய்வாளனாகவும் எனக்கு மிகமிக முக்கியமானது.

ஜெ

***

முந்தைய கட்டுரைமைத்ரி – லோகமாதேவி
அடுத்த கட்டுரைகார்கடல், கடிதம்