கன்யாகுமரிக்கு வருவதற்கு மிகச்சிறந்த காலகட்டம் ஆனியாடி சாரல் இருக்கும் ஜூன், ஜூலை மாதம். இந்தவருடம் சாரல் இப்போதே ஆரம்பித்துவிட்டது. குளிரும் இளமழையுமாக இருக்கிறது ஊர். சுந்தர ராமசாமியின் 80 ஆவது நினைவுநாளை ஒட்டி காலச்சுவடு ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்குக்கு கன்யாகுமரிக்கு வந்த பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்தச் சூழல் உதவியாக இருந்தது என்றார்கள்.
கிட்டத்தட்டத் தமிழ் எழுத்தாளர்களில் அனைவருமே வந்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். தியோடர் பாஸ்கரன் நிகழ்ச்சிக்கு வருவதாகவும் நான் கலந்துகொள்ளமுடியுமா என்றும் கேட்டிருந்தார். பொ.வேல்சாமி கூப்பிட்டிருந்தார்.நான் அவரைச் சந்தித்து நெடுநாட்களாகிறது. என் மனதில் எப்போதும் ஓர் ஆசிரியரின் இடத்தில் இருப்பவர். அவரையும் நண்பர்களையும் சந்திப்பதற்காகவே கருத்தரங்குக்குச் சென்றேன். சென்னையில் இருந்து திரும்பி கனடா பயண ஏற்பாடுகளில் இருக்கிறேன். அருண்மொழியின் அப்பா அம்மா வந்து வீட்டில் இருக்கிறார்கள். நிகழ்ச்சிகளில் முழுக்கப் பங்கேற்க நேரமில்லை.
நீண்டநாட்களுக்குப் பின் பிரேமையும் மாலதி மைத்ரியையும் பார்த்தேன். பிரேம் மெலிந்திருக்கிறார். சர்க்கரைநோய். மாலதி அதே உற்சாகத்துடன். பி.ஏ.கிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் நரைத்து இன்னும் கொஞ்சம் பேராசிரியர் களையுடன். தொடர்ச்சியாகத் தூரமாகஆன நண்பர்களையும் மூத்தவர்களையும் சந்தித்ததனால் ஒரு நெகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்தேன். தியோடர் பாஸ்கரனுடன் சென்று மதியம் சாப்பிட்டேன். மீண்டும் அரங்குக்குள் சென்றாலும் பலரையும் சந்தித்த பரபரப்பில் என்னால் எதையுமே கவனிக்கமுடியவில்லை.
ஜி எஸ் ஆர் கிருஷ்ணனைப் பத்து வருடம் கழித்து சந்தித்தேன். என்னுடைய ‘சு ரா நினைவின் நதியில்’ நூலை ஒரு கிளாசிக் என்று மிகுந்த உணர்ச்சிகரத்துடன் மீண்டும் மீண்டும் சொன்னார். ’தமிழில் எவருக்கும் இப்படி ஒரு அற்புதமான நினைவஞ்சலி செலுத்தப்படவில்லை’ என்றார். அருகே நின்ற யுவன் ‘நான் அதை எத்தனையோ வாட்டி சொல்லியிருக்கேன் சார்’ என்றான். அபாரமான ஒரு நிறைவு ஏற்பட்டது.
தமிழ் இலக்கியத்தின் அக்கப்போர் சூழலில் முன்முடிவுகளுடன் வாசிக்கப்பட்டுத் தவறாகவே முத்திரைகுத்தப்பட்டு ஒருவகை புறக்கணிப்புக்கு உள்ளான நூல் அது. அதன் பல பக்கங்கள் சரியான முறையில் வாசிக்கப்படவேயில்லை. அதிலுள்ள சுராவின் சித்திரம் அளவுக்கு தமிழில் எந்த ஆளுமையைப்பற்றியும் எவரும் எழுதவில்லை என்றே என்னால் சொல்லமுடியும். அத்தனை உத்வேகத்துடனும் துல்லியத்துடனும் நானே இன்னொருமுறை எவரைப்பற்றியேனும் எழுதுவேன் என்றும் தோன்றவில்லை. அதில் உச்சகட்ட கவித்துவமும் உயர்ந்த அங்கதமும் கலந்த பல பகுதிகள் கண்டிப்பாக அதை ஒரு கிளாசிக் ஆக ஆக்குகின்றன என்றே நினைக்கிறேன். ஜி எஸ் ஆர் கிருஷ்ணன் போன்ற ஒருவரின் வாயால் அதை கேட்டது அந்நூலைப்பற்றி எனக்கிருந்த ஆதங்கத்தை முழுமையாகவே தீர்த்தது. அவரளவுக்கு சுந்தர ராமசாமியை அறிந்தவர்கள் சிலரே. அவரளவுக்கு இலக்கிய ரசனை கொண்டவர்களும் சிலரே.
பொ.வேல்சாமியைப்பார்த்தேன். சமீபத்தில் புத்தகம் பேசுது இதழில் தமிழ்நாட்டு நிலத்துக்கும் சாதிகளுக்குமான உறவைப்பற்றி பொ.வேல்சாமி எழுதிய கட்டுரை மிகமிக முக்கியமான ஒன்று என்று தோன்றியிருந்தது. அதை அவரிடம் சொன்னேன். அவரது இடம் அதுதான். நெடுங்காலம் தமிழ்ச்சூழலின் அர்த்தமில்லாத அக்கபோர்களில் அவரைப்போன்ற ஆய்வாளர்கள் நேரத்தை வீணடித்தது ஓர் இழப்பு என்றே நினைக்கிறேன். ’பாரதி’ மணி வந்திருந்தார். ஐம்பதாண்டுகளுக்குப் பின் அவர் பிறந்த பார்வதிபுரம் அக்ரஹாரத்தை கிருஷ்ணன்நம்பியின் தம்பி வெங்கடாசலத்துடன் சென்று பார்த்ததாகச் சொன்னார்.சொ.தர்மன் அவரது சிறுகதை தொகுதியை தந்தார்.
பத்தாண்டுக்காலத்தில் சந்திக்க விட்டுப்போன பெரும்பாலானவர்களை மீண்டும் சந்தித்தேன். நினைவுகூர்ந்து தேடி காணாத விடுபடல் என்றால் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சொல்லலாம். பெருந்தேவியை நீண்ட இடைவேளைக்குப்பின் கொஞ்ச நேரம் அடையாளம் காணமுடியாத தடுமாற்றத்துக்குப் பின் சந்தித்தேன். பெண் தெய்வங்களைப் பற்றிப் பேசிக்கொண்டோம். ஞாநி அவரது நாடகத்தைப் போட்டுக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். ஒரு ஹலோ சொன்னேன். ஞானியுடன் கே.ஆர்.அதியமான் வந்திருந்தார்.
பொன்னீலனின் தோள்பற்றிச் சென்ற கி.ராஜநாராயணனிடம் ஒரு வணக்கத்தைச் சொன்னேன். பெருமாள் முருகன் ஏனோ இளந்தாடியுடன் சற்றே களைத்த தோற்றத்தில் இருந்தார். க.பூரணசந்திரனைப் பார்த்தேன் என்றாலும் அவரிடம் அதிகமாகப் பேசமுடியவில்லை.
இலங்கையில் இருந்து ஏசுராஜா வந்திருந்தார். அவரை 1995ல் பார்த்தபின் இப்போதுதான் பார்க்கிறேன். அதே சோகமான தனியனின் முகபாவனைகள். பருத்தித்துறை ஆர்.டி.குலசிங்கத்தைப் பார்த்தேன். லண்டனில் இருந்து திரும்பி யாழ்ப்பாணத்தில் இருப்பதாகச் சொன்னார். மட்டக்களப்பில் இருந்து உமாவரதராசன் வந்திருந்தார். இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன். சேரனின் சகலையும் சரிநிகர் ஆசிரியருமான விக்கினேஸ்வரனை அறிமுகம் செய்துகொண்டேன். மலேசியாவில் இருந்து சை.பீர்முகமது வந்திருந்தார். ஈழத்தில் இருந்து தீபச்செல்வன் வந்திருந்தார். சின்னப்பையன்.
மிகப்பெரிய அளவில் கருத்தரங்கை ஏற்பாடுசெய்திருந்தார்கள். இளைய படைப்பாளிகளில் கணிசமானவர்களை சந்தித்தேன். அவர்களுக்கு மூத்த படைப்பாளிகளை அறிமுகம் செய்துகொள்ளவும் பேசவும் உகந்த ஒரு சூழலாக கன்யாகுமரி இருந்திருக்கும் என நினைக்கிறேன். விவேகானந்தர்நிலையத்தின் சூழலும் அழகானது.
இரண்டாம்நாள் பி ஏ கிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பான ‘திரும்பிச்சென்ற தருணம்’ என்ற கட்டுரை நூலை நான் வெளியிட்டேன். இரண்டாம்நாளிலும் முன்னரே செல்ல முடியவில்லை. மதுரையில் இருந்து தலித் வரலாற்று நூல்வரிசை வெளியீட்டாளர்களான நண்பர்கள் அலெக்ஸ், பாரிசெழியன் இருவரும் வந்திருந்தார்கள். சில எதிர்கால திட்டங்களைப்பற்றிப் பேசிக்கொண்டோம். அவர்களையும் கூட்டிக்கொண்டு காரில் கிளம்பி சென்று கூட்டத்தில் கலந்துகொண்டு அதே காரில் திரும்பி வந்துவிட்டேன்.
முதல்நாள் செல்லும் வழியில் என்னுடைய செல்பேசியைத் தொலைத்துவிட்டேன். பேருந்தில் வளைந்து தூங்கிக்கொண்டு போய் இறங்கிய இடத்தில் அது காணாமலாகிவிட்டிருந்தது. அதை எடுத்த புத்திசாலி உடனே அதன் ஆன்மாவை பிடுங்கி வீசிவிட்டான். இழப்பெல்லாம் இல்லை. மிகப்பழைய நோக்கியா அடிப்படை மாதிரி செல்பேசி. விற்கப்போனால் ஐம்பது ரூபாய்க்கு மேலே கிடைக்காது. ஆனால் அதைத் தேடி ஆட்டோவில் பேருந்தைத் துரத்திப்போய்த் திரும்பிய வகையில் நூறு ரூபாய்செலவானது. எல்லா எண்களும் போயிற்று. கருத்தரங்கில் நண்பர்களை சந்திக்க வேண்டியிருந்த நேரமும் வீணாயிற்று
சரி, நண்பர்கள் தங்கள் எண்களை பெயர்களுடன் எனக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினால் நட்பு நீடிக்கும். இல்லாவிட்டால் எனக்கிருக்கும் மறதியில் பலரை அடுத்து இம்மாதிரி ஏதாவது கருத்தரங்கில்தான் சந்தித்து மறு அறிமுகம் செய்துகொள்ளவேண்டியிருக்கும்