தமிழ் விக்கி வம்புகள்- கடிதங்கள்

தமிழ் விக்கி வம்புகள்

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

அன்புள்ள ஜெயமோகன்,

தமிழ் விக்கி வம்புகள் பதிவை படித்தேன். பின் தமிழ் விக்கி லோகோவை திறந்து விமர்சனம் வைக்க ஏதேனும் உள்ளதாவென நுண்மையாய் தேடினேன். என்னுடைய வன்மையான கண்டனம் ஔவையாரின் கூந்தல் அடர்த்தியாக இல்லை. பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலே மணமுண்டாவென சிந்தித்த தமிழ் சமூகத்தில் வந்த ஔவையாரின் கூந்தல் அடர்த்தி இல்லாமல் இருப்பது தமிழ் பெருமையை மறைப்பதாகும். அதற்கு என் கண்டனங்கள்.

அன்புடன்
மோகன் நடராஜ்

***

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி வம்புகள் பதிவை படித்து மகிழ்ந்தேன். ஆழ்ந்த ஆய்வுகள் நம் சூழலில் நடைபெறுகின்றன. நம் பேராசிரியர்கள் எழுதியதை எல்லாம் பார்த்தால் இதைவிட சிரிக்க வழி உண்டு. ஒருவர் எழுதுகிறார், இதெல்லாம் எழுத்தாளர்களை அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுப்பதற்கான சூழ்ச்சியாம். நம் எழுத்தாளர்கள் எல்லாம் சேகுவேரா போல காட்டில் ஒளிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார்.

என் பங்குக்கு நான் ஒரு கேள்வி. விக்கி என்றால் விக்னேஷ்வரன். அது சம்ஸ்கிருதப் பெயர். தமிழ்ப்பிள்ளையார் என்று வைத்திருக்கலாமே? சுருக்கமாக தமிழ்ப்பிள்ளை என்று வைக்கலாம். அழகாக பிள்ளைத்தமிழ் என்று வைக்கலாம். எளிய தமிழ்ப்பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே?

மகேஷ்

முந்தைய கட்டுரைஅறம், பக்தி, இன்னபிற -கடிதம்
அடுத்த கட்டுரைஅரவாணிகள்- இரு பதிவுகள்