பாபா ராம் தேவ்- இன்னொரு கடிதம்

1. இந்தியாவில் அனைத்து பரந்த வெகுஜன அரசியலுமே ’சாமியார்கள்’ என்று நாம் சொல்லும் வகையறாக்களின் பங்களிப்பு இல்லாமல் நடந்ததில்லை. அலெக்ஸாண்டர் காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை அன்னிய் ஆக்கிரமிப்புக்கு எதிராக துறவிகள் தீவிரமாகவே அரசியல் களம் இறங்கியிருக்கிறார்கள். வட இந்தியாவின் ஒவ்வொரு பக்தி இயக்கமும்  ஒரு வாள் தூக்கிய அரசியல் இயக்கமாகத்தான் முடிந்திருக்கிறது.

 

2. காந்தியையே இந்த சாது – சன்னியாசிகளின் நீட்சியாகத்தான் பார்க்க முடியும். வரலாற்றாசிரியர் வில்லியம் பிஞ்ச் ‘Peasants and Monks in British India’ எனும் தன் நூலில் இதை ஆதாரத்துடன் விளக்குகிறார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கமே மதக்குறியீடுகளை பயன்படுத்துவதாக பிரிட்டிஷ் ஆதரவு சஞ்சிகைகள் கூறின (’கறாரான வக்கீலாக மட்டுமே நடந்து கொண்டிருந்த காந்தி தன் சொந்த பிரச்சனையால் அரசியலில் குதித்தார் வெகுஜன இயக்கங்களில் அனுபவம் இல்லாத இவர் மத ரீதியிலான பிரசங்கங்களை நம்பி இப்படி களம் இறங்கியது சரியா’ என்று யாராவது கேட்டார்க்ளா தெரியவில்லை) ஆனால் பிஞ்ச் பிரிட்டிஷ் உளவுத்துறை எப்படி சாமியார்களை வேட்டையாடியது என்றும் அவர்களை குறித்து அவதூறு பிரச்சாரங்களை செய்தது என்பதையும் கூறுகிறார், பிரிட்டிஷ் ஏகாதிபத்ய எதிர்ப்பு பிரச்சாரத்தை ராம-ராவண யுத்தத்துடன் இணைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்ததையும் ஒரு கட்டத்தில் ராம்லீலா மைதானத்தில் ராம்லீலாவை தடை செய்ய பிரிட்டிஷ் உளவுத்துறை முடிவு செய்ததையும் பிஞ்ச் குறிப்பிடுகிறார்,  காந்தியின் இயக்கத்தில் பெரிய அளவில் நாக சன்னியாசிகளின் பங்கு இருப்பதை பிரிட்டிஷ் உளவுத்துறை குறிப்பிடுகிறது. நேதாஜியின் ஆஸாத் ஹிந்து பவுஜியின் பின்னாலும் ஒரு ’கமர்ஷியலான’ துறவியும் அவரது அமைப்பும் செயல்பட்டுள்ளன.

 

சரி பிறகு வந்து விரிவாக இது குறித்து உரையாடுகிறேன். ஜெ சொல்வது அத்தனை ஏற்கத்தக்கதல்ல. இத்தனை நாள் இந்த ஆசாமி என்ன செய்தார்? வணிக ரீதியாக அமைப்பைதானே உருவாக்கினார் என்றால்… உண்மையில் ஹஸாரேக்கு முன்னாலேயே தன்னுடைய யோக முகாம்களில் ஊழலுக்கு எதிராக மக்களை அணி திரட்டுவது குறித்து பேச ஆரம்பித்தவர் ராம்தேவ்தான். இந்தியா முழுக்க யோக சிபிர்களில் இது குறித்து பேசினார். இதில் அவர் எல்லா மதத்தினரையும் இணைத்தார். அதில் ஆர்.எஸ்.எஸ்ஸை அவர் விலக்கவில்லை என்பதுதான் மற்றவர்களுக்கு இவர் மீதுள்ள வயிற்றுக்கடுப்பு. இந்த விதத்தில் அண்ணா ஹஸாரேயை விட பாபா ராம்தேவ் நேர்மையான காந்தியவாதி என்று கூட சொல்லலாம்.

 

 

அரவிந்தன் நீலகணடன்

முந்தைய கட்டுரைபுகழேந்தி-சங்கீதா
அடுத்த கட்டுரைசுரா 80- இருநாட்கள்