இருளில் வாழ்தல் -ஸ்ரீராம்

H.P.Lovecraft

ஒரு நாளின் டைரி

வணக்கம் ஜெ

ஒரு கட்டுரையில் லௌகிராஃப்ட்-ஐ இன்றும் வாசிப்பவர் எவரேனும் உள்ளனரா என கூறியிருந்தீர்கள். நான் திரும்ப திரும்ப வாசிக்கவரும் எழுத்தாளர்களில் லௌகிராஃப்ட் ஒருவர். எம் .ஆர். ஜேம்ஸ், லௌகிராஃப்ட் போன்ற திகில் (horror) எழுத்தாளர்களில் நான் முதன்மையாக கருதுவது ஆல்ஜெர்னான் ப்ளாக்வுட். உண்மையில் நான் இவர் பெயருக்காகவே இவரின் கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். Algernon Blackwood என்ற பெயரில் ஒரு வித authority மற்றும் mystery இருப்பதாக தோன்றும். தி வில்லோவ்ஸ் எனும் நாவலின் மூலம் இவரின் எழுத்துலகிற்குள் நுழைந்தேன்; இக்கதையை ஆங்கில இலக்கியத்தின் சிறந்த அதிஇயற்கை (supernatural) கதை என லௌகிராஃப்ட் கூறியுள்ளார்.

இன்று Ancient Sorceries எனும் ப்ளாக்வுட்டின் சிறுகதை வாசித்தேன். கிட்டத்தட்ட உங்களின் இரவு நாவல் போன்றதொரு கதை. நாயகன் பிரான்சில் ரயிலில்  சென்றுகொண்டிருக்கையில் ஒரு கிராமத்தின் மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. ரயிலை விட்டு அக்கிராமத்திற்குச் சென்று அங்கு ஒரு விடுதியில் தங்குகிறான். கிராமத்தில் வசிப்பவர் அனைவரும் வேறு ஏதோ உலகில் இருப்பதுபோல் இவனுக்கு தோன்றுகிறது. மெல்ல மெல்ல அவர்களுள் ஒருவனாக இவனை உணர தொடங்குகிறான். பின்பு அவர்கள் அனைவரும் இரவில் மட்டுமே முழுமையாக வாழ்பவர், பகலில் வாழ்வது போல் வேடமிட்டு நடிக்கின்றனர் என்பதை அறிகிறான். இரவு நாவலில் தந்திர முறைகளை பற்றி பேசியது போல், இங்கிருந்து கதை ஐரோப்பிய மந்திரவாத கூறுகளை கொண்டு நகர்கிறது. Empress, High Priestess போன்ற Tarot archetypes-ஐ பயன்படுத்துகிறார்.

நீலிமா போல் இங்கும் ஒரு பெண் வருகிறாள். காதல் கொள்ளும் அனைவரையும் போல் முதலில் அப்பெண்ணை கடலென கண்டு மலைத்து, பின் அவளின் நடை, சிரிப்பு, கைகளின் மினுமினுப்பு என ஒவ்வொரு அலைகளாக பிரித்து பிரித்து கண்டு முழுதும் மூழ்குகிறான்.

கதையை வாசித்துக்கொண்டிருக்கையில் கோயாவின் (Francisco Goya) The Witches Sabbath ஓவியம் ஏனோ மீண்டும் மீண்டும் நினைவில் எழுந்தபடி இருந்தது. அதேபோலவே கதையின் உச்சதருணத்தில் ஒரு வெறியாட்டு நடைபெறுகிறது. இரவில் வாழும் மனிதர்கள் சாத்தானின் மந்திர எண்ணையை பூசிக்கொண்டு பூனைகளாக விண்ணில் ஏறி வட்டமிட்டு நடனமிடுகின்றனர். கதை ஒரு தர்க்கபூர்வமான உளவியல் சார்ந்த விளக்கத்துடன் முடிகிறது.

லௌகிராஃப்டினால் ஈர்க்கப்பட்ட காமிக்ஸ் எழுத்தாளர் ஆலன் மூர் இதே போல் இரவுலாவிகளை பற்றி ஒரு சிறு காமிக்ஸ் எழுதியிருக்கிறார். ப்ளாக்வுட் லௌகிராஃப்ட் மூர் ஜெயமோகன் என தொடரும் ஒரு கதைக்களம்.

வலி பயம் போன்ற நம் ஆதி உணர்வுகளை, முழு நிலவு இரவில் குகைகளில் பந்தவெளிச்சத்தில் கதை கேட்கும்போது அடைந்த அதே உணர்வை, நவீன வாழ்க்கையில் controlled environment-இல் மீண்டும் மீட்டிக்கொள்ள இவ்வகையான கலை வடிவங்கள் நமக்கு தேவை படுகின்றன. வலியை மீட்ட துன்பக்கதைகளும் (tragedies) பயத்தை மீட்ட அதிஇயற்கை திகில் (supernatural/ cosmic horror)  கதைகளும் நாட்டார் கலை முதல் செவ்வியல் கலை வரை தொடர்கிறது.

ஸ்ரீராம்

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன், ஒரு பேட்டி
அடுத்த கட்டுரைமைத்ரியுடன் இரண்டு நாட்கள்