கதிரும் கிளியும்

கபிலர் தமிழ் விக்கி

கபிலர்
கபிலர் – தமிழ் விக்கி

தொண்ணூறு கடந்த காளிக்குட்டி பாட்டியிடம் அமர்ந்து ‘பேச்சு கேட்பது’ எனக்கெல்லாம் அன்று பெரிய பொழுதுபோக்கு. காளிக்குட்டிப் பாட்டி ஒரு தொல்பொருள். காலம் முப்பதாண்டுகளுக்கு முன்னரே உறைந்துவிட்டது அவருக்கு. நான் சந்திக்கும் எழுபதுகளின் இறுதியில் அவர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்தார்.

அப்போது அவருடைய கணவர் உயிருடன் இருந்தார். அவருடைய ஒரே மகளும் உயிருடன் இருந்தாள். கணவர் எண்பது வயதில் மறைந்து முப்பதாண்டுகள் ஆகிவிட்டிருந்தன அப்போது. மகள் எழுபது வயதாகி மறைந்துவிட்டிருந்தாள். பேரப்பிள்ளைகளிலேயே நாலைந்துபேர் நாற்பது கடந்து இயற்கை மரணம் அடைந்துவிட்டிருந்தனர். பாட்டி பேரனின் மகனின் இல்லத்தில் ஒரு திண்ணையில் நடமாட்டம் இல்லாமல் அமர்ந்தும் படுத்தும் காலமில்லாத காலமொன்றில் வாழ்ந்தார்.

எல்லாமே ஒளிமிக்க நினைவுகள். முதல் நீலநிற ஜாக்கெட் தைத்துக்கொண்டது. முதல் பொன் கம்மல் அணிந்தது. திருவனந்தபுரம் ஆறாட்டுக்குப் போனது. திருவட்டாறிலும் திர்பரப்பிலும் பார்த்த கதகளிகள். திருவாதிரைக்களியில் பார்க்கவியையும் அம்புஜத்தையும் வென்று நின்று ஆடியது. நள்ளிரவில் குளிக்கச்செல்லும் நோன்புகாலம். இரவெல்லாம் அடைப்பிரமனுக்காக அடை அவிக்கும் ஓணத்துக்கு முந்தைய நாட்கள்.

பாட்டி தன் கணவரை நினைவுகூரும்போது எப்போதுமே முதல் வரி “என்ன உயரம்…நிலை தட்டும்…அப்படி ஒரு எடுப்பு!” உயரம் அவ்வளவு ஆழமாக பதிந்துவிட்டிருந்தது போல. பன்னிரண்டு வயதில் இருபத்திமூன்று வயது கணவனை ஏறிட்டுப்பார்க்கும் அளவுக்கே பாட்டி இருந்திப்பாள். அடுத்த நினைவு ‘வெள்ளிச்சரிகை போட்ட நேரியது….அந்தக்காலத்திலே ஊரிலே ஒரே சரிகைத்துணி அதுதான்…அறைக்கல் மகாராணிய விட்டா சரிகைத்துணி வச்சிருந்தது நான்தான்’

ஆனால் அந்த ஓரிரு வரிகளுக்குப் பின் ஆரம்பிப்பது ஒரு மாபெரும் விருந்து வர்ணனை. ”ஏழு கோட்டை அரிசி பொங்கியிருக்கு. சோறு வடிச்சு கொட்டுறதுக்கு பதினெட்டு பாயி. அதிலே ரெண்டாள் உயரத்திலே சோறு…ஆளுக்காள் வந்து சோறப்பாத்து அன்னலட்சுமீன்னு கும்பிடுறாங்க… பின்னே, அன்னம் தெய்வமாக்குமே? கண்கண்ட தெய்வமாக்குமே… “

“குழம்புகளை ஊத்தி வைக்கிறதுக்கு ஆத்திலே இருந்து தோணிய கொண்டுவந்து கழுவி உலத்தி வச்சிருக்கு….நாலு பெரிய தோணி. ஒண்ணிலே எரிசேரி, ஒண்ணிலே புளிசேரி, ஒண்ணிலே கூட்டுகறி, ஒண்ணிலே எரிவுகறி….உருளியிலே குழம்ப காய்ச்சி எடுத்து அப்டியே கொட்டி அதுக்குள்ள நல்லா அடுப்பிலே போட்டு சுட்டு பழுத்த கல்லுகளை போட்டு மூடிவைச்சா தளதளன்னு கொதிச்சுக்கிட்டே இருக்கும்…”

“எட்டூருக்குச் சோறு….ஒரு ஊரிலே ஒரு அடுப்பு எரியப்பிடாதுன்னு அப்பா சொல்லிட்டார்…வந்துகிட்டே இருக்காங்க.பன்னிரண்டு கொட்டகையிலே பந்தி. கைகழுவுறதுக்கு ஆத்துத் தண்ணிய அணகட்டி வாய்க்கால் வெட்டி கொண்டுவந்து ஓடவைச்சிருக்கு… ஒருவேளைச் சோறில்லை…ஒம்பதுவேளைச் சோறு. மூணுநாள் கல்யாணம். மருமக்கத்தாயம் மாதிரி இல்ல. எங்க மக்கத்தாய முறையிலே கல்யாணம்னா சோறாக்கும்… ஊருக்கே சோறு….”

“ஏன்னா, அப்டி சோறுபோட்டா ஆயிரம்பேரு வந்தா அதிலே அம்பதுபேரு அன்னம் தேடிவாற பேய்பூதங்களாக்கும். ஆவிரூபங்களுண்டு. தேவரூபங்களும் உண்டு. அம்பிடுபேருக்கும் அன்னம். அன்னமிட்டு நிறைஞ்சபிறகுதான் கல்யாணம்…”

அதுபோய்க்கொண்டே இருக்கும். ஒவ்வொரு கறியும், அதன் மணமும், அதன் காய்களும். அன்றெல்லாம் கடுகு தாளிக்கும் வழக்கம் இல்லை. கடுகே இல்லை. பச்சைமிளகாயும் கறிவேப்பிலையும்போட்டு தாளிப்பார்கல். கமுகுப்பாளை கோட்டிய கிண்ணங்களில் பாயசம். சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு…

நான் பேச்சை அவர்கள் குடும்பவாழ்க்கை நோக்கி கொண்டுசெல்வேன். ஆனால் பாட்டியை எவரும் வெளியே இருந்து தொடர்புகொள்ள முடியாது. உள்ளிருந்து காலத்தில் மறைந்தவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தனர். நாலைந்து வரி வேறேதேனும் பேசினால் மீண்டும் அந்தச் சோற்று வர்ணனை

“அந்தக்காலத்திலே சோறு அவ்ளவு அருமையாட்டு இருந்திருக்கு” என்று வெட்டுகத்தி தாமு சொன்னான்

திண்ணையில் அமர்ந்திருந்த குஞ்சன் பாட்டா “ஏலே, அப்பமும் இப்பமும் இங்க தீனிக்கு பஞ்சமில்லை. காய்ச்சிலும் கிழங்கும் இருக்க வேணாட்டிலே வேறெது தீனி? அது பஞ்சத்துக்க கொண்டாட்டம் இல்ல. ருசிக்கொண்டாட்டம்” என்றார். சீவிய பாக்கை வாயில் போட்டு “ஆனா அந்த ருசி சோத்துக்க ருசி இல்லடே. அது கூடி இருந்து திங்குறதுல இருக்குத ருசி… இப்பவும் காணிக்காரன் அப்டித்தான் திங்குதான். காக்காக்கூட்டம் அப்டித்தான் திங்குது. கிளிக்கூட்டம் அப்டித்தான் திங்குது”

”ஒரு சோற பத்தாளு தின்னா பத்துமடங்கு ருசி. பத்தாயிரம்பேரு தின்னா பத்தாயிரம் மடங்கு ருசி…எதுக்கு எட்டூரு சேத்து கூப்பிடுதாரு அவளுக்க அப்பா? ருசிய கூட்டுறதுக்காகத்தாண்டே…அதெல்லாம் உன்னை மாதிரி ரேடியோ கேட்டு சீரளியுதவனுக்கு மனசிலாகாது”

பாட்டியின் உள்ளத்தில் அவள் திருமணம் ஒரு பெருங்கொண்டாட்டமாக, தீனிக்களியாட்டாக பதிந்துவிட்டிருக்கிறது. உண்டாட்டு என்கிறார்கள் பழந்தமிழில். பழையகாலத்தவர் நினைவில் எல்லாமே கல்யாணம் என்றால் அதுதான். பெருமை என்றால் அந்த உணவுத்திருவிழாவின் பங்கேற்பும் உணவின் அளவும்தான்

சங்ககாலம் முதலே அப்படித்தான் போல. கபிலரின் நற்றிணை 376 ஆம் பாடல்.

முறஞ்செவி யானைத் தடக்கையில் தடைஇ
இறைஞ்சிய குரல பைந்தாள் செந்தினை
வரையோன் வண்மை போலப் பலவுடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்
குல்லை குளவி கூதளங் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்
சுற்றமை வில்லன் செயலைத் தோன்றும்
நற்றார் மார்பன் காண்குறின் சிறிய
நன்கவற்கு அரிய உரைமின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி
வறும்புனங் காவல் விடாமை
அறிந்தனிர் அல்லிரோ அறனில் யாயே.

முறம்போன்ற செவிகொண்ட யானை
தும்பிக்கையை வளைப்பதுபோல
முதிர்ந்து வளைந்த செந்தினையை
கூவி அழைக்கும் கூச்சல்களுடன்
வள்ளல் வழங்க களியாடும் மக்கள் போல
சுற்றத்துடன் உண்ணும்
வளைந்தவாய் பசுங்கிளிக்கூட்டமே
துளசி, காட்டுமல்லி, கூதாளி, குவளை
என மலர்சேர்த்த மாலையை அணிந்து
தோளிலமைந்த வில்லுடன் வந்து
அசோகமரத்தடியில் நின்றிருப்பவனைக் கண்டால்
அவனிடம் கூறுங்கள்
நாளை அணங்கும் அணங்குகொள்ளும் போலும்!
அணங்கை உணர்ந்து
தினைப்புனக் காவலுக்கு என்னை விடுதில்லை
கருணையற்ற அன்னை என்று
அறியமாட்டீர்களா என்ன?

இற்செறிப்புக்கு அன்னை ஆணையிட்டுவிட்டாள். ஏனென்றால் தலைவிக்கு அணங்கு கூடியிருக்கிறதென்று நினைக்கிறாள். நாளை வரும் வேலன் வெறியாட்டில் அணங்கு என்ன என்று சொல்லப்போகிறான். அவனிடம் திருமணம் பேசச்சொல்லுங்கள் என்கிறாள். அவனை அவள் வில்லேந்தியவன் ஆயினும் குளிர்மலர் மாலை அணிந்தவன். அசோகமரத்தடியில் வந்து நிற்பவன்.

ஆனால் கிளிகளைச் சொல்லுமிடத்தில் அவள் கனவு வந்துவிட்டது. உண்டு களியாடும் கிளிக்கூட்டம்.அது ஒரு மாபெரும் விருந்தின் காட்சி. சங்க இலக்கியங்களில் தலைவி திருமணம் குறித்து பேசும்போதெல்லாம் இந்த ஊண்களியாட்டு குறிப்புணர்த்தப்பட்டு விடுகிறது.

அத்துடன் கவிதை வாசிப்பில் எப்போதுமே கொஞ்சம் வழிவிட்டு செல்ல, அத்து மீற இடமுள்ளது. அந்தக் கிளிகளைத்தானே அவள் அத்தனை நாள் ஆலோலம் பாடி துரத்திக் கொண்டிருந்தாள்? சுற்றம் அலர்பேசும் நாவும் நோக்கும் கண்களுமாக மட்டும்தானே இருந்தது?

அதற்குமேல் கபிலனுக்கே உரிய அந்த உவமை. இலைமடல்கள் செவிகளென்றாக, விளைந்த கதிர் தும்பிக்கை என கீழே சரிந்த தினை. தினையை முன்னரே கண்டவர் ஒருகணம் அகம் மலர்ந்து ஆம் எனும் தருணம்.செம்பூக்கள் பரவிய மதகளிற்றின் துதிக்கையைத்தான் தினை மெய்யாகவே நடிக்கிறது. கவிதை நமக்களிக்கும் உச்சம். கபிலனுக்கும் நமக்குமிடையே அந்த ஈராயிரம் ஆண்டுகள் இல்லையென மறையும் மாயம்.

கபிலர் குன்று தமிழ் விக்கி

கபிலர் குன்று
கபிலர் குன்று – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவன் சந்திரசேகர், மாற்று மெய்மை
அடுத்த கட்டுரைபாடத்திட்ட அரசியல் திணிப்பு