கிருத்திகா:அஞ்சலி

கன்யாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலின் அருகே உள்ள இரு ஊர்கள் இலக்கியத்தில் வகிக்கும் இடம் பற்றி பொதுவாசகர்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? திருப்பதிச்சாரம், பூதப்பாண்டி. இரண்டுமே முக்கியமான கோயில் கிராமங்கள். இரண்டும் சோழர் காலத்தில் உருவான.தொன்மையான வேளாளர் ஊர்கள். வசதியான பெரிய வீடுகள் கொண்ட அழகிய தெருக்களும் தெருக்கள் நடுவே பெரிய கோயிலும் தெப்பக்குளமும் ஊரைச்சுற்றி ஆறும் வயல் வெளியும் கொண்டவை. சென்று பார்க்கும் எவருக்கும் அங்கே தங்கவேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்குபவை.
 
திருப்பதிச்சாரம் ‘திருவெண்பரிசாரம்’ என்ற தூய பெயரின் மரூஉ. ஸ்ரீனிவாசன் என்ற பெயரின் தமிழ் வடிவம். அங்கே உள்ள திருவாழிமார்பன் ஆலயம் குமரிமாவட்டத்தின் முதன்மையான  மூன்று பெருமாள் கோயில்களில் ஒன்று . திருவட்டார், பறக்கை ஆகியவை பிற இரு பெருமாள் ஆலயங்கள். . இந்த ஊரில்தான் நம்மாழ்வார் பிறந்தார்.

 

 

திருப்பதிசாரத்தில் பிறந்த முக்கியமான எழுத்தாளர் மா.அரங்கநாதன். மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ் அவர்களின் தம்பிதான் அரங்கநாதன். மொழிபெயர்ப்பாளர் அச்சுதன் அடுக்கா அல்லது தி.அ.ஸ்ரீனிவாசன் இவ்வூரைச்சேர்ந்தவர். மேலும் பல எழுத்தாளர்கள் இந்த ஊரைச்சேர்ந்தவர்கள். இங்கே முன்பு முக்கியமான ஒரு நூலகம் இருந்திருக்கிறது

இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பூதப்பாண்டி அதன் நடுவே இருக்கும் பூதநாதர் கோயிலுக்காக புகழ்பெற்றது. பூதப்பாண்டியில் பிறந்த சொறிமுத்துப்பிள்ளை தான் பின்ன தோழர் ஜீவானந்தம் ஆனார். அங்கே உரக்கடை வைத்திருந்தவர் கிருஷ்ணன் நம்பி.

பூதப்பாண்டியில் பிறந்தவர் கிருத்திகா. இயற்பெயர் மதுரம். அவர் திருப்பதிசாரத்தைச் சேர்ந்த பூதலிங்கம்பிள்ளையை மணம்செய்துகொண்டார். பூதலிங்கம் பிள்ளை ஐ.சி.எஸ் படித்து பிரிட்டிஷ் அரசில் வேலைபார்த்தார். பின்னர் நேருவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். இந்திய உருக்குத்தொழிலை பொதுத்துறை சார்ந்து உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர் பூதலிங்கம் பிள்ளை.

டெல்லியின் அதிகார உள்வட்டத்தில் இருந்த கிருத்திகா ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத ஆரம்பித்தார். பாரதி மீது அதீதமான மோகம் கொண்டவர் அவர். அவரது முதல் நாவல் ‘புகைநடுவினில்…’ புகைநடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே’ என்ற பாரதி வரியில் இருந்து எடுக்கப்பட்டது. பொன்கூண்டு, வாசவேஸ்வரம், நேற்றிருந்தோம், புதிய கோணங்கி போன்றவை கிருத்திகாவின் நாவல்கள். ஆங்கிலத்திலும் கிருத்திகா நிறைய எழுதியிருக்கிறார். இதிகாச மறுஆக்கம், இலக்கிய அறிமுகம், தமிழகச் சிற்பக்கலை ஆகியவற்றைப்பற்றி.

கிருத்திகா தமிழின் பெண் எழுத்தாளர்களில் மிக அபூர்வமான தனித்தன்மை கொண்டவர். வழக்கமாக பெண்கள் எழுதும் கருப்பொருட்கள் பெண்ணுரிமை அல்லது பெண்ணின் வாழ்க்கைச்சிக்கல்கள் சார்ந்தவையாகவே இருக்கும். இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர் அவர். அவ்வகையில் குர் அதுல் ஐன் ஹைதர்-ருடன் ஒப்பிடத்தக்கவர் அவர். அவரது படைப்புகள் குறியீட்டுத்தன்மையுடன்  சமகால உயர்மட்ட அதிகார அரசியலை விவாதிப்பவை. அங்கதச்சுவை கொண்டவை. அங்கதத்தை கையண்ட ஒரே தமிழ்ப்பெண்ணெழுத்தாளர் அவரே.

கிருத்திகாவின் பெரும்பாலான நாவல்களை தமிழ் உலகம் சரிவர உள்வாங்கிக்கொள்ளாமல் இருக்கிறது. அதற்கு அவற்றின் கூறுமுறை ஒரு முக்கியமான காரணம். சம்பிரதயமான கதை பெரும்பாலும் எந்த நாவலிலும் கிடையாது. கரு புதுமையானதாக இருந்தாலும் நடை பழைமையானதாக இருக்கிறது. மகாபாரதத்தையும் டெல்லி அரசியலையும் பிணைத்து எழுதப்பட்ட அவரது அரசியல் அங்கத நாவல்களை விமரிசகர்கள் விவாதிக்கும்போதுதான் எளிய வாசகர்கள் உள்ளே நுழைய முடியும். அது நிகழவில்லை. இப்போது அவரது பல நாவல்கள் கிடைப்பதே இல்லை.

கிருத்திகாவின் முக்கியமான நாவல் வாசவேஸ்வரம். இது அவரது புகுந்தவீடான திருப்பதிசாரத்தை களமாக்கியது. இந்தியா விழித்தெழும் காலகட்டத்தில் பண்பாட்டுத்தேக்கத்தில் ஊறிச் செயலற்றுக்கிடக்கும் ஒரு கிராமத்தைச் சித்தரிக்கிறது வாசவேஸ்வரம். பொதுவாக இத்தகைய கிராமியச் சித்தரிப்பு நாவல்களில் உள்ள கடந்த கால ஏக்கம், இழந்ததைப்போற்றுதல் இதில் இல்லை. கிராமத்தின் சில்லறைத்தனங்களும் கண்மூடித்தனங்களும் எள்ளலுக்கு ஆளாகின்றன. அத்துடன் கடுமையான ஆசாரங்களுக்கு அடியில் பாலியல் மீறல் இயல்பாக நடந்தபடியே இருப்பதையும் வாசவேஸ்வரம் காட்டுகிறது.

கிருத்திகாவின் எழுத்துக்களில் மொழித்தீவிரம் இல்லை. அங்கத்தைத் தாண்டிய ஆழமான அரசியல் தரிசனமும் இல்லை. இலக்கிய நுட்பங்கள் என்று பொதுவாக அன்று அறியப்பட்ட பல விஷயங்கள் இல்லை. ஆகவே கா.நா.சு  தலைமுறையும் சுந்தர ராமசாமி தலைமுறையும் அவரை பொருட்படுத்தவில்லை. பெண்ணியம் உருவாகி வந்தபின் கிருத்திகா மறுவாசிப்புக்கு ஆளாகியிருக்க வேண்டும். அவரது அங்கதம் உண்மையில் ஆண்-மைய அரசியலை நோக்கிய பெண்ணின் சிரிப்பு. ஆனால் வாசிக்கும்பழக்கம் கொண்ட பெண்ணியர்கள் நானறிந்தவரை தமிழில் யாருமில்லை
 
கிருத்திகா ஒருவகையில் நிறைவாழ்வு வாழ்ந்தார். உயர் பதவியில் இருந்த கணவருடன் சிறந்த இல்லறம். அவரது மகள் மீனா பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை மணந்தார். மணிக்கொடி தலைமுறையைச் சேர்ந்த அவருக்கு பிற்கல எழுத்தியக்கத்துடன் தொடர்பு இருக்கவில்லை. சுப்ரபாரதி மனியனின் கனவு நடத்தப்பட போது ஆரம்பநாட்களில் அவர் அதற்கு பண உதவி செய்திருக்கிறார்.  பெங்களூரில் 93 வயது வரை வாழ்ந்தார்.  13-2-2009 அன்று காலமானார்.

மரணம் எழுத்தாளருக்கு ஒரு தொடக்கம் என்பார்கள். கிருத்திகா மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டால் அது ஒரு சிறந்த விஷயமாக அமையும். கிருத்திகாவின் மகளுக்கும் அவர்களின் மாபெரும் அமைப்புக்கும் தமிழின் மீது பெரிய மதிப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் கிருத்திகாவை ஒரு தமிழ் எழுத்தாளராக முன்னிறுத்தவில்லை. ஆகவே அவரது நூல்கள் இன்று கிடைப்பதே இல்லை. எவராவது ஆர்வம் எடுத்து அவற்றை வெளியிடலாம்.

கிருத்திகாவுக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைவாசகர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநான் கடவுள், மேலும் இணைப்புகள்