அமெரிக்கா, கடிதங்கள்

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அன்புள்ள ஜெ

நமது அமெரிக்க குழந்தைகள் தொடரை வாசித்து வருகிறேன். அங்குள்ள மெய்யான சிக்கலை அறிமுகப்படுத்தி விரிவான அளவில் தீவிரமாக அச்சிக்கலை கையாளும் கட்டுரை. பலமுறை நீங்கள் தனித்தனியாக குறிப்பிட்டு வந்ததெனினும் தொகுத்து ஒரே வீச்சில் சொல்கையில் அழுத்தம் கூடுகிறது. இக்கட்டுரை தொடர் எந்தளவு அங்குள்ளவர்களுக்கு முக்கியமோ அதே அளவிற்கு இங்குள்ள நம் அறிவார்ந்த வாசக சமுதாயத்திற்கும் முக்கியமானது. நமது பண்பாட்டு மரபென குழந்தைகளுக்கு கையளிக்க வேண்டியது எது என்பதற்கான தெளிவான வழிகாட்டல்.

இந்த கட்டுரை தொடர் வரிசையிலேயே இன்றைக்கு வெளியாகியிருக்கும் நம் குழந்தைகள் முன் பதிவில் இருக்கும் மேகனாவின் கடிதம் ஓர் உச்சம். படித்தது முதல் ஏற்பட்ட வியப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. உண்மையில் இந்த கடிதமே அந்த வியப்பை பகிரத் தான். பெரியம்மாவின் சொற்களுக்கு வந்த உச்சமான கடிதமாக இதுவே இருக்கும். தமிழகத்தில் வாழும் ஒருவனாக 15 வயது பெண் ஒருவரின் கடிதம் அது என்பது பெரும் வியப்பை அளிக்கிறது. அமெரிக்க கல்வித்தரமும் அங்கிருந்து வரும் ஒருவரின் சிந்தனையும் எந்தளவுக்கு வீரியமானது என்பதன் சான்று.

இவ்வளவு அறிவுத்தகுதி மிக்க குழந்தைகளிடம் தமிழ் பண்பாடு என நாலாந்தர மேடைப் பேச்சாளர்களையும் வெற்று சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் கோஷங்களையும் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும். இந்த குப்பைகளை முன்வைத்தால் அவர்களின் ஏளனம் மட்டுமே கிடைக்கும். சற்றேனும் அறிவும் நுண்ணுணர்வும் உள்ளவர்கள் செய்ய கூடாதது.

 

அன்புடன்

சக்திவேல்

 

அன்புள்ள ஜெ

அமெரிக்கக்குழந்தைகள் தொடரை வாசித்தேன். மிக மிக யதார்த்தமான பரந்துபட்ட ஆய்வு என்று சொல்லவேண்டும். உங்கள் இத்தகைய கருத்துக்களின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் அந்த நூல், இந்த கோட்பாடு, இந்த தரவு என்றெல்லாம்  ‘ஆய்வு’ பாவனை காட்டுவதில்லை. அந்தவகையான ஆய்வுகளைச் செய்பவர்கள் எல்லாருமே மலையைக் கெல்லி கடைசியில் எலியைத்தான் பிடிப்பார்கள். ஏற்கனவே முடிவுசெய்து வைத்திருக்கும் சர்வசாதாரணமான சில கருத்துக்களைச் சொல்வார்கள். அவை முற்போக்காக இருக்கவேண்டும், ஆய்வுநிறுவனம் விரும்புபவதாக இருக்கவேண்டும் என்றெல்லாம் பல நிபந்தனைகள் உண்டு.

நீங்கள் உங்கள் சுய அனுபவம், உங்கள் உள்ளுணர்வு ஆகியவற்றை நம்பி சொல்கிறீர்கள். உண்மையில் இதுதான் எழுத்தாளரின் வழி. இதைப்போல ஆய்வுகள் கூர்மையாக அமைய முடியாது. ஆய்வாளர்கள் தரவுகள் எங்கே என்று கேட்பார்கள். இதற்கு தரவுகள் தர முடியாது. வேண்டுமென்றால் ஒரே நாளில் தரவுகளை அள்ளிக் குவிக்கவும் முடியும். இதை வாசிப்பவர்கள் இதில் ஆதாரம் தேடுவதில்லை. உள்ளூர அவர்களுக்கும் இது சரி என அவர்களின் அனுபவங்கள் வழியாகத் தோன்றும். அதன்வழியாகவே இவை ஏற்கப்படுகின்றன.

ஸ்ரீனிவாஸ்

முந்தைய கட்டுரைஅரசியல் கவிதை பற்றி கடைசியாக- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகரசூர் பத்மபாரதி, ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்