அமெரிக்கா, கடிதங்கள்

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அன்புள்ள ஜெ

நம் அமெரிக்கக் குழந்தைகள் ஒரு முழுமையான கட்டுரை. அத்தனை நீளம் எதற்கென்றால் எல்லா வழிகளையும் அடைத்து எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி நிறுத்துவதற்காகவே என்று புரிகிறது.

நெற்றியில் அடிப்பதுபோல சில விஷயங்கள் உள்ளன. அதிலொன்று நாம் பயின்றது பின்தங்கிய ஒரு கல்விமுறையில், வெறும் பொறியியல் கல்வி மட்டுமே என்பது. அப்பட்டமான உண்மை. நான் பொறியியல் படித்து முடிப்பது வரை எனக்கு தெரிந்தது என்ன என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் இலக்கியம், பண்பாடு, வரலாறு எதைப்பற்றியும் எதுவுமே தெரியாது. பரிபூரணமான தற்குறி. ஆனால் நான் படித்தது கோவையில் ஒரு மிகச்சிறந்த கல்லூரியில். நான் மிகச்சிறந்த மாணவன். நீங்கள் சொல்வதுபோல நேராக ஐரோப்பா வந்தவன்.

ஆனால் உங்களுக்கே ஒரு மாயை இருக்கிறது. அதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். நீங்கள் முறையாகக் கல்வி முடிக்காதவர். ஆகவே கல்லூரிகளில் பொறியியலை மிகத்தீவிரமாக படிக்கிறார்கள் என நினைக்கிறீர்கள். மிகக்கடுமையான போட்டி இருப்பதனால் அப்படி படித்தே ஆகவேண்டும் என நம்புகிறீர்கள். அதுவும் பொய். நான் பொறியியல் கல்லூரியில் கற்றதெல்லாம் பொறியியலே அல்ல. பொறியியலை அப்படி கற்பிக்கவே முடியாது. கத்தோலிக்கர்கள் லத்தீன் மனப்பாடம் செய்வதுபோலத்தான் அறிவியல் விதிகளை படித்தோம். நான் படித்ததெல்லாம் வேலைபார்த்து கற்றுக்கொண்டதுதான்.

நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். வேலைபார்ப்பது, சேமிப்பது மட்டும்போதாது என்கிறீர்கள். கொஞ்சம் படியுங்கள், கொஞ்சம் பிள்ளைகள் கல்விநிலை அளவுக்கு நீங்களும் நகருங்கள் என்கிறீர்கள். அல்லது அப்படி ஓர் அறிமுகம் செய்து வைக்குமளவாவது தயார்செய்துகொள்ளுங்கள் என்கிறீர்கள். உண்மையில் அது மிகப்பெரிய சவால். அதற்கான எந்த வாய்ப்பும் புலம்பெயர் சூழலில் இல்லை என்பதே உண்மை. அதை மீறி எதையாவது செய்தால்தான் உண்டு.

ஆனால் அதற்கு எத்தனை தடைகள். இன்று, இக்கட்டுரை பற்றி ஒரு பேச்சுவந்தது. ஒருவர் “ஜெயமோகன் அறிவியலுக்கு எதிரானவர், மூடநம்பிக்கையை பரப்புபவர்’ என்றார். பொறியாளர்தான். ”எங்கே ஜெயமோகனை படித்தீர்கள், என்ன படித்தீர்கள்?” என்றேன். “அவர் இந்துஞானமரபு என்று பேசுகிறார்” என்றார். “சரி அறிவியல் மனநிலைக்கு எதிராக என்ன பேசியிருக்கிறார்?” என்றேன். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. எங்கோ வாட்ஸபிலோ டிவிட்டரிலோ எதையோ படித்திருக்கிறார். அதிகம்போனால் நாலைந்து வரி. அதையும் ஏதோ தற்குறிதான் எழுதியிருப்பான்.

நான் ‘தமிழில் அறிவியல் மனநிலை பற்றி முப்பதாண்டுகளாக ஓயாமல் எழுதி வருபவர் ஜெயமோகன்’ என்று சொல்லி உதாரணங்களை சொல்ல ஆரம்பித்தேன். “வேண்டுமென்றால் கட்டுரைகளை அனுப்புகிறேன். விரல்தொடும் இடத்தில் அவை உள்ளன” என்றேன். ஆர்வம் காட்டாமல் “அப்றமா பேசுவோம்” என்று எழுந்து சென்றார்.

இவர்கள் மழுமட்டைகளாக இருக்க இவர்களை ஓயாமல் மேலும் மழுமட்டைகளாக ஆக்கிக்கொண்டே இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்

சக்தி

***

அன்புள்ள ஜெ

நலம்.நலம் அறிய‌ ஆவல்!.

நான் அடிக்கடி எனக்குள் சொல்லிக் கொள்வேன், “நான் ஜெயமோகனின் அறிவியக்கத்தை சார்ந்தவன்” என, “நமது அமெரிக்க குழந்தைகள் -3”  கட்டுரையை வாசித்த பின் அதற்கான தகுதி எனக்கில்லை என்று தோன்றியது. “தமிழின் பெருமை என்ன?” என்ற கேள்விக்காக நீங்கள் சொன்ன பதில் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த எனக்கே நீங்கள் தான் இக்கட்டுரை மூலம் சொல்கிறிர்கள். தமிழ் உலகின் முதல் மொழி என்பது பிதற்றல் என்ற தெளிவு உள்ளது. ஆனால் அதன் பெருமை இலக்கிய வளம் என்று சொல்லியிருப்பேன். தொடர்ச்சி, தொடும் தொலைவின் கபிலன் இருக்கிறான் என்றெல்லாம் சொல்லியிருக்க மாட்டேன்.

ஜெவின் வாசகன் நான்,என்னை இம்மாதிரி கட்டுரைகள் தான் என் அறியாமைகளை நீக்கி அறிவியக்கத்தின் பாலபாடம் தருகின்றன.

பசியோடு காத்திருக்கிறேன்,வளர்க உங்கள் அறிவியக்கம்!

நன்றி,

அன்புடன்,

சரவணப் பெருமாள்.செ

முந்தைய கட்டுரைசெயல் – கடிதம்
அடுத்த கட்டுரைஅறம்