தமிழ் விக்கி -தூரன் விருது- கி.ச.திலீபன்

தமிழ் விக்கி தூரன் விருது

கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு

கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கியின் தூரன் விருது அறிவிக்கப்பட்டதைப் பார்த்து பேருவகை கொண்டேன். பத்மபாரதி அவர்கள் எழுதிய ‘நரிக்குறவர் இன வரைவியல்’ மற்றும் ‘திருநங்கைகள் சமூக வரைவியல்’ என்கிற இரு ஆய்வு நூல்களைப் பற்றி நீங்கள் ஓர் நெடுங்கட்டுரை எழுதியிருந்தீர்கள். 2015ம் ஆண்டின் இறுதியில் எழுதப்பட்ட அக்கட்டுரையைப் படித்ததும் நான் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த குங்குமம் தோழி இதழுக்காக அவரை பேட்டி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இந்த இரு நூல்களும் அப்போது அச்சில் இல்லை. உங்களது கட்டுரையை மட்டுமே தரவாகக் கொண்டுதான் பேட்டி எடுக்கத் திட்டமிட்டேன். எனது நண்பரும், உங்களது மிகத்தீவிரமான வாசகருமான தமிழ்ச்செல்வன் பேட்டி எடுக்கையில் உடன் வர விருப்பம் தெரிவித்தார்.

பத்மபாரதியின் தொடர்பு எண்ணைப் பெற்று அவரிடம் பேசினேன். சராசரியான நடுநாட்டுப் பெண் பேசும் தொணியில் வெகு இயல்பாக பேசினார். அவரைப் பேட்டி எடுக்க வேண்டும் என்றதுமே சற்று தயக்கம் காட்டினார். பின்னர் பொறுமையாக அனைத்தையும் விளக்கி அவரை சம்மதிக்க வைத்தேன். புதுச்சேரியில் ரோமன் ரோலண்ட் நூலகத்துக்கு எதிரே இருக்கும் பாரதி பூங்காவில் நானும் நண்பர் தமிழ்செல்வனும் அவரைச் சந்தித்தோம்.

தான் அப்படி ஒன்றும் பெரிதாக எதையும் செய்து விடவில்லையே என்பது போலத்தான் அவரது பேச்சு இருந்தது. அதில் நிறைந்திருந்த யதார்த்தம் எங்களை மேலும் கவர்ந்தது. வணிக இதழ்களைப் பொறுத்த வரையிலும் சினிமா பிரபலங்களிடம் மட்டும்தான் கேள்வி பதில் வடிவில் பேட்டி வெளியாகும். மற்றவையெல்லாம் கட்டுரை வடிவில்தான் எழுத வேண்டியிருக்கும். கேள்விகளை முன் தயாரித்துச் செல்லவில்லை. இயல்பாக அவரது ஆராய்ச்சிகள் சார்ந்து ஓர் உரையாடலை நிகழ்த்தினோம். அவரும் மிகப் பட்டவர்த்தனமாக இந்த ஆய்வுகள் குறித்துப் பேசினார்.

பேட்டி முடித்ததும் “எழுத்தாளர் ஜெயமோகன் உங்கள் நூல்களைப் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்த பிறகுதான் உங்களைப் பேட்டி எடுக்க வந்தோம்” என்றேன். “ஓ… அவர் நல்ல ரைட்டர்ல” என்று சொன்னார். நான் தமிழைப் பார்த்து சிரித்தேன்.

ஜெயமோகன் வாசகர் வட்டம் ஓர் குருகுலத்தைப் போன்றது. அதன் பீடாதிபதியான ஜெயமோகன் தனது சீடர்களை மட்டுமே முன் நிறுத்துவார் என்பது போன்ற கருத்துகள் நிலவிய சூழலில் இருந்து பார்க்கையில் அது எனக்குப் பெரும் முரணாகத் தெரிந்தது.அக்கட்டுரையில் நீங்கள் முன்நிறுத்தியது அப்பிரதிகளை மட்டும்தான். “திருநங்கைகள் வாழ்வை திருநங்கைகள் கூட இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்ததில்லை” என அக்கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்

உங்களை ஓர் நல்ல எழுத்தாளர் என்கிற அளவு மட்டுமே அறிந்திருந்த / உங்களை சந்தித்தே இருக்காத பத்மபாரதியை நீங்கள் மிகச்சிறந்த ஆய்வாளராக முன் நிறுத்தியிருந்தீர்கள். உங்கள் மீதும், பத்மபாரதி மீதும் பெருமதிப்பு உருவான தருணமாக அச்சந்திப்பு அமைந்தது. நவீன இலக்கியத்தில் மட்டுமல்ல முனைவர்கள் / பேராசிரியர்கள் ஒன்றுக்கும் பெறாத கவிதை நூல், ஆய்வு நூல் என எதையாவது எழுதிவிட்டு தமிழ் அறிவியக்கத்துக்கு தான் பெரும்பங்காற்றி விட்ட தோரணையில் நடந்து கொள்வதைக் கண்டு சலிப்புற்றிருக்கிறேன். அரும்பணி ஒன்றைச் செய்து விட்டு எந்த வித மிடுக்கும் இல்லாமல் “இவரா இதை எழுதியது” என்று கேட்குமளவுக்கு யதார்த்தமானவராக பத்மபாரதி இருக்கிறார்.

ஓர் நல்ல பிரதியைக் கண்டடைவது வாசகரின் வெற்றி. அப்பிரதிக்கான உரிய அங்கீகாரத்தை வழங்குவது ஓர் அறிவுலகச் செயல்பாட்டாளரின் வெற்றி. அவரது ஆய்வுப்பணியை முன்நிறுத்திய உங்களுக்கும், இவ்விருதினை வழங்கவிருக்கிற தமிழ் விக்கி குழுமத்துக்கும் நன்றி! கரசூர் பத்மபாரதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

கி.ச.திலீபன்

குங்குமம் தோழியில் வெளியான பத்மபாரதி பேட்டி பின்வருமாறு…

பதில் தேடும் பயணங்கள்!

நிலையான இருப்பின்றி அடிப்படை வாழ்வாதாரச் சிக்கலோடு நாடோடி வாழ்க்கை வாழும் நரிக்குறவர் இனத்தையும், மூன்றாம் பாலினமாக சமூகத்தின் அத்தனை புறக்கணிப்புகளுக்கும் ஆளாகினாலும் தங்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருநங்கையர் சமூகத்தையும் மிக ஆழமாக ஆராய்ந்து பதிவு செய்திருப்பவர் கரசூர் பத்மாபாரதி!

இவரது ‘நரிக்குறவர் இன வரைவியல்’ மற்றும் ‘திருநங்கையர் சமூக வரைவியல்’ ஆகிய ஆய்வு நூல்கள் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றதோடு, முக்கியமான ஆவணங்களாகவும் கருதப்படுகிறது. புதுச்சேரி கரசூரைச் சொந்த  ஊராகக் கொண்ட இவர், கவிதை, சிறுகதை என இலக்கியத் தளத்திலும் இயங்கி வருகிறார்.

‘‘புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் துறையில் படித்தேன். முதுகலைத் தமிழ் இறுதித் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டிய குறு ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்புதான் ‘நரிக்குறவர் சடங்குகள் ஓர் ஆய்வு’. நரிக்குறவர் இன மக்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பின்பற்றும் சடங்குகளைப் பற்றி மட்டும் ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் அறிவுநம்பி இந்த ஆய்வுக்கான தலைப்பை வழங்கி வழிகாட்டவும் செய்தார். குறு ஆய்வு என்பதால் எடுத்துக் கொண்ட தலைப்பைத் தாண்டி, வேறு பரிமாணத்தில் எல்லாம் செல்லவில்லை. முதுகலை தமிழ் முடித்த பின் இளமுனைவர் பட்ட ஆய்வுக்காக ‘சிறு பத்திரிகை வரலாற்றில் கசடதபறவின் பங்களிப்பு’ எனும் தலைப்பை எடுத்துக்கொண்டேன்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறிது காலமே வெளிவந்திருந்தாலும் அழுத்தமான தடத்தைப் பதித்துச் சென்ற ‘கசடதபற’ இதழிலிருந்து தலா 10 சிறுகதைகள், கவிதைகளை எடுத்துக்கொண்டு ஆய்வு சமர்பித்து இளமுனைவர் பட்டம் பெற்றேன்’’ என்று தனது ஆராய்ச்சிகளின் தொடக்கம் பற்றி பேசுகிறார் பத்மாபாரதி. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானுடவியல் பட்டயம் படித்தபோது பத்மாபாரதிக்கு நெறியாளராக இருந்தவர் பக்தவச்சலபாரதி. தமிழகத்தின் மிக முக்கியமான மானுடவியல் ஆய்வாளரான இவரது வழிகாட்டுதல் இன்றி தனது இரு நூல்களும் சாத்தியப்பட்டிருக்காது என்கிறார் பத்மாபாரதி. ‘‘நரிக்குறவர் சடங்குகள் பற்றிய குறு ஆய்வை புத்தகமாக்க வேண்டும் என பக்தவச்சலபாரதி ஐயாவிடம் சொன்ன போது, ‘ஒரு முழுமையான நூல் ஆவதற்கு இந்தத் தகவல்கள் மட்டும் போதாது… மேலும் பல தகவல்களை ஆராய்ந்து எழுத வேண்டும்’ என்றார்.

கள ஆய்வுக்கான நெறிமுறைகளையும் கற்றுத்தந்தார். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் இனப்பெண்கள் பொதுவெளியிலே குழந்தைக்கு பால் கொடுத்த வண்ணமும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பார்கள். ஏன் அவர்கள் இப்படியாக வாழ்கிறார்கள்? உலகம் பெரிய வளர்ச்சி கண்டுவிட்டாலும் கூட, ஏன் இவர்கள் இப்படியே இருக்கிறார்கள்? இப்படி எழுந்த கேள்விகள்தான் இந்த ஆராய்ச்சிக்கான பாதையை எனக்கு அமைத்துத் தந்தது. அதற்கு பதில் தேடும் பயணமாகவே இந்த ஆராய்ச்சி இருந்தது’’ என்கிறார். ஒரு கிராமத்துப் பெண்ணாக இருந்து களத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்வதில் பல சவால்கள் இருந்த போதிலும் அவற்றையெல்லாம் கடந்து இந்த ஆராய்ச்சியை முடித்திருக்கிறார்.

‘‘புதுச்சேரி நகரம் மற்றும் பெத்திசெட்டிப்பேட்டை, வில்லியனூர், உத்தரவாகினிப்பேட்டை, சண்முகாபுரம், மதகடிப்பட்டு, விழுப்புரம் அருகே கூட்ரோடு ஆகிய பகுதிகளில் நரிக்குறவர் இன மக்கள் சாலையோரங்களில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கு காலையில் நேரமே எழுந்து சென்று விடுவேன். நாம் நினைக்கிறபடி கேட்டவுடனே எல்லாவற்றையும் சொல்லி விட மாட்டார்கள். சில பேர் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள். அவர்களுக்கு சன்மானமாக வயதானவர்களாக இருந்தால் வெற்றிலை பாக்கு, குழந்தைகளாக இருந்தால் சாக்லெட், நடுத்தர வயதினருக்கு காசு கொடுத்தால்தான் பேசக்கூட செய்வார்கள். அப்படியே பேசினாலும் நாம் எதிர்பார்க்கும் பதில் கிடைக்காது. எதை எதையோ பேசுவார்கள். எல்லாவற்றையும் கேட்கக்கூடிய பொறுமை இருந்தால் மட்டுமே ஆராய்ச்சியை முடிக்க முடியும். நான் எனக்கான தகவல்கள் எல்லாம் கிடைக்கும் வரையிலும் ஓயாமல் கள ஆய்வுக்கு சென்று கொண்டிருந்தேன்.

நரிக்குறவர் இன மக்கள் ‘வாக்கிரி போலி’ எனும் மொழியைப் பேசுகின்றனர். வாக்கிரி என்றால் குருவி… ஆகவே அதனை குருவிக்கார மொழி என்கிறார்கள். இந்த மொழிக்கு பேச்சு வடிவம் மட்டும்தான் இருக்கிறது. 1972ம் ஆண்டு சீனிவாச சர்மா என்பவர் இம்மொழியைப் பற்றி ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அதில் இந்த மொழி ஆரியம், திராவிடம் என இரண்டு வகையறைக்குள்ளும் அடங்காமல் இருக்கிறது என்கிறார். உருது, மராத்தி என இரண்டு மொழிகளையும் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் மராத்தி, உருது தெரிந்தவர்களால் இவர்களது வாக்கிரிபோலி மொழியைப் புரிந்து கொள்ள முடியாது. வாக்கிரிபோலி மொழியோடு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக வாக்மேன் எடுத்துக் கொண்டு போவேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு வாக்மேன் என்பதே புதிதாக இருந்ததால் அதைக் கொண்டு போனாலே சில பேர் பேச மாட்டார்கள். இயல்பாகப் பேசும்போதுதான் அவர்களோடு கலந்து பல தகவல்களைப் பெற முடியும்.

இவர்கள் குழுக்குழுவாகப் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர் ஒருவர் இருப்பார். அவரிடம்தான் சாமி மூட்டை எனும் அவர்களது கடவுள் சிலையை கொண்டிருக்கும் மூட்டை இருக்கும். அந்த மூட்டையைப் பிரித்துப் பார்க்கவோ, தொடவோ பெண்களுக்கு அனுமதியில்லை. பெண்கள் தொட்டால் தீட்டு என ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களது இனப்பெண்களுக்கே அனுமதியில்லை எனும்போது, நான் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. ஒரு நாள் அந்தத் தலைவரின் மகள் என்னை அழைத்து ஒருவரைக் கொண்டு சாமி மூட்டையைத் திறந்து காண்பிக்கச் செய்தார்.

அதனுள் வெள்ளியினாலான காளி சிலையை பதப்படுத்திய ஆட்டுத்தோல் கொண்டு மூடி வைத்திருந்தனர். நரிக்குறவர்களிலேயே பல பிரிவினர் இருக்கிறார்கள். சிலர் வெள்ளாட்டை பலியிடுவார்கள், சிலர் எருமையை பலியிடுவார்கள். பலியிட்ட பின் அதன் தோலை பதப்படுத்தி வைத்திருந்தனர். மேலும் பலியிடுவதற்கும் பூஜைக்கும் தேவையான கத்தி, தாம்பூலத்தட்டு, சலங்கை, பூஜை சாமான்கள் என பலவும் அந்த மூட்டைக்குள் இருந்தது.

விழுப்புரத்தில் வேறொரு பிரிவைச் சேர்ந்த நரிக்குறவர் திருவிழா நடந்தபோது நான் சென்றிருந்தேன். எருமையைக் கட்டி வைத்து அதன் காதோரத்தில் போகும் நரம்பை அறுத்து பலி கொடுத்தார்கள். அப்போது திபுதிபுவென வெளியேறிய ரத்தத்தைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். சாமி ஆடுபவரிடம் குறி கேட்பார்கள். அதனையெல்லாம் அவர்களது மொழியிலேயே பதிவு செய்தேன். இந்த ஆராய்ச்சியில் இறங்கியதிலிருந்து, பல பகுதிகளிலும் யாரேனும் இறந்தால் தகவல் சொல்லும்படி சொல்லி வைத்திருந்தேன். பெத்திசெட்டிப்பேட்டையில் ஒருவர் இறந்து அடக்கமும் செய்து விட்டனர். கருமாதியின் போது எனக்குத் தகவல் கிடைக்கவே நேரடியாகச் சென்றேன். அவர்களது சடங்குகள் பெரும்பாலும் நீர் நிலைகள், மர நிழல் இருக்கும் பகுதிகளில்தான் நடக்கின்றது. நரிக்குறவர் வாழ்வியலில் மெச்சக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. அவர்களுக்குள் மறுமணம் என்பது மிகவும் இயல்பானது’’ என்று நரிக்குறவர் இன வரைவியல் நூலுக்கான களப்பணி குறித்துப் பேசுகிறார் பத்மாபாரதி.

5 ஆண்டுகால உழைப்புக்குப் பின், 2004ம் ஆண்டு அந்த ஆய்வை எழுதி முடித்து தமிழின் பதிப்பக வெளியீடாக ‘நரிக்குறவர் இன வரைவியல்’ நூலைக் கொண்டு வந்திருக்கிறார். தமிழக அரசின் 2004ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான விருதையும், சுடராய்வுப் பரிசையும் அந்நூல் பெற்றிருக்கிறது. பத்மாபாரதி முனைவர் பட்ட ஆய்வுக்காக ‘புதுவை ஒன்றியத்தில் அடித்தள மக்களின் மரபுவழி இனப்பெருக்க மருத்துவம்’ என்கிற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அட்டவணை சாதிகளில் ஒன்றான பறையர் சமூக மக்களின் இனப்பெருக்க மருத்துவம் பற்றி முழுமையாக ஆய்வு செய்திருக்கிறார்.

‘‘இனப்பெருக்கம் தொடர்பான கை வைத்தியங்களை ஆய்வு செய்தேன். குழந்தை பிறப்பதற்கு முன்/பின் செய்யப்படும் சடங்குகள், குழந்தை பிறந்ததும் என்ன மாதிரியான உணவுகள் வழங்குகிறார்கள். உடல் பற்றிய நுண்ணிய வகைப்பாடுகள் என பல தலைப்புகளின் கீழ் ஆய்வைத் தொகுத்தேன். குழந்தைப்பேறுக்காக மாதவிடாயின் 3வது நாளில் புள்ளப்பூச்சி எனும் பூச்சியை வாழைப்பழத்தில் வைத்து சூரியன் உதிப்பதற்கு முன் சாப்பிடக் கொடுக்கிறார்கள். கெட்ட ரத்தத்தை வெளியேற்ற பெருங்காய உருண்டை சாப்பிடக் கொடுக்கிறார்கள்.

பூப்பெய்தாமல் இருக்கும் பெண்களை கோயிலில் தங்க வைக்கின்றனர். கருப்பையில் பிரச்னை இருந்தால் வேப்பிலை அரைத்து கொடுக்கின்றனர். இப்படியாக இவர்களின் வைத்திய முறைகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்தேன். இது மருத்துவம் மற்றும் அறிவியல் பூர்வமாக சரியானதா என்பதை ஆய்வுக்குட்படுத்தவில்லை’’ என்பவர், நாட்டு மருத்துவர்கள், கோயில் பூசாரிகள், பிரசவம் பார்க்கும் பெண்களிடம் நேர்காணல் புரிந்து, 2010ம் ஆண்டு இந்த ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

‘‘மானுடவியல் படித்த போது அதற்காக நடத்தப்பட்ட குறு ஆய்வு தான் திருநங்கையர் சமூக வரைவியல். நரிக்குறவர் ஆய்வு போலவே இதையும் விரிவாக செய்ய வேண்டும் என்று தோன்றியதுமே களத்தில் இறங்கி விட்டேன். ஆரம்பத்தில் திருநங்கைகளை அணுகுவதில் கொஞ்சம் பயம் இருந்தது. விழுப்புரத்தில் ஒரு வீட்டில் திருநங்கையர் வசித்து வந்தனர். அங்கு அடிக்கடி சென்று அவர்களிடம் பேட்டி கண்டேன். பிள்ளையார்குப்பத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவுக்கு சென்று அவர்களின் வழிபாட்டு முறையை பதிவு செய்தேன். திருநங்கையரும் குழுக்குழுவாக வசிக்கிறார்கள்.

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவி இருப்பார்கள். நான் அணுகிய குழுவின் தலைவியான ராதா அம்மா மிகவும் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசுவார். கிராமத்தில் வளர்ந்த பெண் என்பதால் பல தகவல்கள் எனக்கு புதிதாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தன. ஆரம்பத்தில் இருந்த பயம் அவர்களுடன் கலந்து பேசப் பேச அகன்றது. நம் எல்லோரையும் போலவே அன்புக்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் இவர்களும் ஏங்குகிறார்கள். இன்றைக்கு மூன்றாம் பாலினம் என்கிற பார்வையாவது அவர்கள் மீது இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்போதிருப்பதை விட சமூகப் புறக்கணிப்பு அதிகம் இருந்தது.

ஒவ்வொருவரிடம் பேசும்போதும் அந்த வலியை உணர முடியும். அந்த வலியின் பிரதிபலிப்புதான் ‘திருநங்கைகள் சமூக வரைவியல்’ நூல். 2000ம் ஆண்டு இவர் எழுதிய ‘இளமை நதியில் முதுமை ஓடங்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு புதுவை இலக்கிய ஆய்வு மன்றத்தின் சார்பாக சிறந்த கவிதை நூலுக்கான விருதைப் பெற்றிருக்கிறது. அடுத்ததாக உயிர்ப்பு எனும்  சிறுகதைத் தொகுப்பு, ஈசல் கனவுகள் எனும் கவிதைத் தொகுப்பு மற்றும் உயிர்ச்சொல் எனும் ஹைக்கூ தொகுப்பையும் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். குழந்தைகள் நல குழுமத்தில் புதுச்சேரியின் உறுப்பினர்களில் ஒருவராகவும் செயல்படுகிறார். குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து குழந்தைகள் உதவி மையத்தில் பதியப்படும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். ‘‘வெளிப்படையான பார்வையை வைத்து எந்த ஒரு சமூகத்தையும் தீர்மானித்து விட முடியாது. இறங்கி ஆய்வு செய்யும்போதுதான் உண்மை நிலையை அறிய முடியும். இன்னும் ஆய்வு செய்வதற்கு எத்தனையோ இருக்கிறது. என்னால் இயன்ற வரையிலும் பங்காற்றுவேன்’’ என்கிறார் பத்மாபாரதி.

– கி.ச.திலீபன், குங்குமம் தோழி – 16.01.2016

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி வம்புகள்
அடுத்த கட்டுரைஅ.ச.ஞாவும் தமிழர் மெய்யியலும்