கனிமொழி

சென்ற சில நாட்களாக வெவ்வேறு இதழ்களில் இருந்தும் தொலைக்காட்சிகளில் இருந்தும் அழைத்துக் கனிமொழி பற்றிய என் கருத்துக்களைக் கோருகிறார்கள். எழுத வற்புறுத்துகிறார்கள். ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதச் சொல்லிச் சிலர். கனிமொழியின் இலக்கியத் தகுதி என்ன என்று சிலர். கனிமொழி, சிற்றிதழ்களைக் கையிலிட்டு ஆட்டி வைத்தது பற்றி எழுதும்படி சிலர்.

’அவங்க அதிகாரத்திலே இருந்தப்பக்கூட நீங்க அசராம அவங்களைப் பற்றிக் கடுமையாக் கருத்து சொன்னீங்க சார்’ என்றார் ஒருவர். …’அதனால நீங்கதான் கருத்துச் சொல்ல தகுதியான ஆள்’ என்றார்.

நான் கேட்டேன் ‘அந்தக் கருத்துக்களை நான் சொல்லி நாலைந்து வருடங்களாகின்றன. கனிமொழி அதற்குப் பதிலாக என் மனச் சமநிலை பற்றி எனக்கே இருக்கும் சந்தேகத்தைத் தானும் வழிமொழிந்தும் பல ஆண்டுகளாகி விட்டன. இன்று வரை நீங்கள் என்னிடம் ஏதும் கேட்கவில்லையே? இன்று வரை கனிமொழியைத் தமிழகத்தின் தலையாய இலக்கிய மேதையாகவும், அரசியல் விடிவெள்ளியாகவும் முன்வைக்கத் தானே உங்கள் ஊடகங்களைப் பயன் படுத்தினீர்கள்?இப்போது வழக்குகளில் சிக்கி அதிகாரம் இழந்து அவர்கள் இருக்கையில் அவர்கள் தமிழகத்தின் ஒரே தீயசக்தியாக ஆகிவிட்டாரா என்ன? என் தகுதி இருக்கட்டும், கருத்துச் சொல்வதற்கான உங்கள் தகுதி என்ன?’

உண்மையைச் சொல்லப் போனால் கனிமொழி சிறைக்குச் செல்லும் காட்சிகளைக் காணும்போது ஒருவகையான வருத்தம்தான் ஏற்படுகிறது. பெண் என்பதனாலா என்றால் ஆம் என்றே தோன்றுகிறது. அதைத் தர்க்கபூர்வமாக நியாயப்படுத்த என்னால் இயலாது. அப்படித் தோன்றுகிறது. இச்சூழலில் ஊரே கூடிக் கொண்டாட்டம் போடும் போது கூடவே சென்று நாலு அடி போடுவதில் எனக்கு ஆர்வமில்லை.

கனிமொழியைப் பற்றி ஏதேனும் சொல்வதாக இருந்தால் அவர்கள் திரும்பிப் பதவிக்கு வரட்டும், அப்போது சொல்கிறேன்.

 

கனிமொழி வணக்கம்

காலச்சுவடுக்கு தடை

நமது சிற்றிதழ்கள் -கடிதங்கள்

வடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.

கேள்வி பதில் – 73

 

 

 

 

 

முந்தைய கட்டுரைவிதி-கடிதம்
அடுத்த கட்டுரைகட்டிடங்கள்-கடிதங்கள்