வாசிப்பு – கடிதங்கள்

ஜெயமோகன்,

பனிவெளியிலே வாசித்தேன். கவிதைகள். வெறும் இரண்டு இரண்டு வரிகள். மிக அழகானவை, ரசனையைத் தூண்டியவை.
எத்தனை முறை நிகழ்ந்தாலும் இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் செயலற்று நிற்பது ஒவ்வொரு முறையும் புதிய திறப்பைப் போலவே நிகழ்கிறது அல்லவா?அலாதியானது.

ஏனோ தெரியவில்லை, இதை வாசிக்கும் போது தற்கொலை எண்ணத்துடன் சென்ற உங்களை இலையின் மீது இருந்த புழு வழியாகச் சந்தித்த இயற்கையின் ஒரு முகமும் ஞாபகம் வருகிறது. கண்ணால் அளவிட முடியாத வெளியில் இருந்து வந்த ஒரு கரம் அன்று உங்களைப் பற்றி இழுத்ததாக உருவகிக்க த் தோன்றுகிறது.

வாசகன்,
சுந்தரவடிவேலன்.
http://suzhiyam0.blogspot.com

அன்புள்ள சுந்தரவடிவேலன்

இயற்கை ஒரே சமயம் இரு மனநிலைகளையும் அளிக்கிறது. நான் மகத்தானவன் என்றும் நான் எளியவன் என்றும். அந்தந்தக் கணங்களுக்குரிய திறப்புகளாக.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,

நலம் அறிய ஆவல், தங்களின் வட கிழக்கு நோக்கிய பயணம் நல்லபடியாகப் போய்க்கொண்டு இருக்கிறதா சார்..? , தங்களின் கன்னியாகுமரி நாவலைத் திரும்பவும் வாசித்தேன். மீள் வாசிப்பின் வழியாகவே ஒரு வாசகனாக மீண்டும் மீண்டும் உணர வைத்த உங்கள் அனைத்துப்படைப்புக்களில் முக்கியமான ஒன்றாக நான் நினைப்பது இந்த நாவலை.. ஆணின் ஈகோவை இவ்வளவு நுட்பமாக உணரவைத்த அனுபவத்திற்காக நன்றி.கண்டிப்பாக ரவியைப்போல ஈகோவைத் தக்கவைத்துக் கொள்ள நானும் ஓரளவுக்கு அப்படித்தான் அந்த அனுபவத்தை கடந்து செல்ல முடியும் என்று நினைக்கிறேன் “நீ என்னை ரொம்ப அற்பமா நினைச்சிருப்பே- என்ன இன்னமும் ஸ்டீபனை காணும் ” என்று இந்த பலவீனமான உள்ளுணர்வே ஒரு பொது ஆணின் அடையாளம் ஆகி இருக்கும் போல!

ரவி, விமலாவிடம் நீண்ட நாள் கழித்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அந்த முதல் நிகழ்வே அவனின் அகங்கார சீண்டலுக்குத் தொடக்கம்.அது விமலாவின் தூய profile தன்மையால் மேலும் மேலும் இறுகிக் கொண்டே போகிறது ” படமே பார்க்கிறது இல்ல மத்தபடி வர்க வர்க வர்க தான், “ஆனா அவ அற்புதமா நினைச்சு என்ன தோற்கடிசிட்டா’’என்று பிரவினாவிடம் அவன் சொல்லும்போது,

“இவன் ஒரு சின்னப் பயன்னு தான் எனக்கு எண்ணம் , இப்ப இவனை நினைத்து கிட்டாலும்என்னை விட வயசு குறைவானவன்னு தான் என் மனசு பாவனை பண்ணும் , தனியே கூப்பிட்டு ஒரு அதட்டுப்போட்டா சரியாயிடுவான்’’என்று விமலா ரவியைப் பற்றி உதிர்க்கும் வரிகள், இறுதியில் அவன் உணரும் ஒட்டுமொத்தக் காட்சியும் தேவி முதற்கொண்டு காணாமல் போவது அவனை இனி மீளவே முடியாத ஒரு சுழலுக்குள் அவனின் அகங்காரமே தள்ளும்போது ரவியின் மேல் அனுதாமே வருகிறது .

பெண் என்பது உடம்பு மட்டும் அல்ல தன்னிலையும் அகங்காரமும் தான் ; அதை அகங்காரத்தால் மட்டுமே தொட முடியும் – நிதர்சன வரி கள் .

” சேர்ந்து வாழ்றதாவது ஐம் லிவிங் வித் சயின்ஸ்’’என்று தன் கடந்த கால அனுபவத்தை மறந்து சொல்லிக் கொண்டே போகும்போது லட்சியவாதியான ஆணை விட லட்சியவாதியான பெண் இன்னும் ஒரு படி மேல்.

அனுபவவாதியிடமிருந்து வரும் வார்த்தைகளே சிந்தனையின் பலம், வாழ்வியலை அவர்களின் சொற்களின் வழியே என்னால் உணர முயற்சிக்க முடியும் . விமலா அப்படி ஒரு ஆளுமை ;இதில் விமலா எவ்வளவு அசால்டாக சொல்லியபடியே போகிறாள்.

” இந்தக் கற்பு தூய்மை எல்லாம் சொல்ற அளவுக்கு மத்தவங்களுக்கு முக்கியம் இல்ல ”

“நடக்கும் பொழுது உள்ள பயங்கரம் நடந்து முடிந்த உடன் இல்ல ”

இருத்தலைப் பற்றிச் சொல்லும்போது , குற்றஉணர்வு இல்லாம நாம செய்ற எல்லாமே ஒழுக்கம் தான் இன்னும் நெறைய ,வாசிக்கையில் விமலாவின் அனைத்து அசைவுகளையும் பலவாறாகக் கற்பனை செய்து கொண்டேன்’ இந்த நாவலில் பிரவீனா அளவுக்கு சம நிலையான கதாபாத்திரம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன் ..

“மத்தவங்களை உணர்ச்சி ரீதியா பொருள் ரீதியா ஏமாத்தாம இருந்தா எல்லாமே ஒழுக்கம் தான் ” இந்த ஒரு வரி மூலியமாக கன்னியாகுமரியை என்னால் ஐம்பது வயதிலும் எடுத்து விட முடியும்.  ரவிக்கு நேர்ந்த இம்மாதிரியான அனுபவங்கள் வாசகனின் வாழ்வில் ஏற்படுவது அரிதே ;ஆனால் படித்து முடிக்கையில் ஏழாம் உலகத்தில் பெரிய போத்தி, போத்தியின் மகள் கல்யாணத்தில் வந்து அவளிடம் சொல்வாளே, எது நடந்தாலும் எதா இருந்தாலும் ஒரு பத்து நாள் கழிச்சு முடிவெடு என்று,அந்தப் பத்து நாட்களை பொறுத்துக் கொண்டபடி அதன் பின்பு ஏற்படும் கால சமநிலையை இது ஓரளவு தரும்.அப்படி ஒரு தனனங்கார மட்டுப்படுத்தலுக்காக. ஆசிரியருக்கு என் நன்றிகள் ..

Regards dineshnallasivam

அன்புள்ள தினேஷ்

கன்யாகுமரிக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். நானே எழுதிய புனைவுக்கதாபாத்திரங்கள் காலம் உருவாக்கிய தூரம் வழியாக உண்மையானவர்களாக மனதுக்குள் பதிந்திருக்கும் விந்தையை உணர்ந்தேன்

ஜெ

ஷிவாலிக் மலைத்தொடர் பற்றி பனிமனிதனில் உள்ளதாய்ப் பதிவில் சொன்னதும், மீதி வைத்திருந்த பனிமனிதனை முடித்தேன். [ கோதாவரி வரும்போது ஆரம்பித்தது.]

தகவல் களஞ்சியம்.! மூச்சு முட்டும் அளவு ஏகப்பட்ட விறு விறு சம்பவங்கள். வினோதப் பிராணிகள் அதற்கான சாத்திய விளக்கங்கள் என “இமயமலையின் ஜுராசிக் பார்க்” என்று படமே எடுக்கும் அளவுக்கு விஷயங்கள்.

தத்துவம், அறிவியல், நீதி எனப் பலவும் கலந்த அருமையான கதை. ஆழ்மன இணைப்பு, வவ்வால்களில் பறப்பது போன்றவை அவதார் போல உள்ளது.. !

புத்தர் ஏன் இவர்களை இங்கு பாதுகாத்து வைத்திருக்கிறார் என்பது Noah’s Ark மாதிரி. இறுதியில் வரும் புத்தர் வடிவ அமைப்பு, நல்ல அர்த்தபூர்வமான யோசனை …

என் பெண்ணுக்குக் கதை சொல்லப் புதிய புதிய விலங்குகள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.. இதுவரை நம்ம ஊர் காட்டு விலங்குகளை வைத்துக் கதை சொன்னேன். இனிமேல் பனிமனிதன் காட்டு விலங்குகள் தான் ..!

குறிப்பு : இதில் வரும் “மேஜர் பாண்டியன்” நம் வட்டத்தின் பயணங்களுக்குச் சரியாக ஒத்து வருவார் என்று நினைக்கிறேன்.

காரணம், எங்கே ஆற்றைப்பார்த்தாலும் குளிக்க ரெடியாகிவிடுகிறார்.. :)

நன்றி.

நேரம் கிடைக்கும் போது பதில் போடவும்..

அன்புடன்,

ஆனந்தக் கோனார்

அன்புள்ள ஆனந்தக்கோனார்

மதுரை அருகே சின்னமனூரில் பிறந்தவர் அவர். தண்ணீரைக்கண்டால் குளிக்காமல் விடுவாரா? அரங்கசாமிக்கும் அந்தக்குணம் உண்டு.

ஜெ

நூல்கள்:கடிதங்கள்

பனி மனிதன்குழந்தைகளுக்குப் பெரும் மர்மங்கள்

பனிமனிதன் ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஐரோம் ஷர்மிளா-கடிதம்