என் அப்பா பழமைவாதி. காரணம் புதுமை என்று சில விஷயங்கள் இருப்பதை அவர் தெரிந்துகொள்ளவே இல்லை. அவருக்குப் பிடிக்காததை யாரும் அவரிடம் சொல்வதேயில்லை என்பதுதான் காரணம். ஆகவே குழந்தைபிறந்தபோது முறைப்படி அவரது அப்பாவின் பெயரை முதல் குழந்தைக்குப்போட்டார்– சங்கரப்பிள்ளை. இரண்டாவது குழந்தையாகிய எனக்கு அம்மாவின் அப்பா பெயர், பரமேஸ்வர பிள்ளை. தங்கைபெயர் அம்மாவின் அம்மாவுடையது லட்சுமிக்குட்டி அம்மா. நாங்கள் இப்பெயர்களைப்பற்றித் தெரியாமல் தவழ்ந்து விளையாடிய காலம். பரமேஸ்வர பிள்ளை அப்பெயரின் சுமையாலோ என்னவோ பலவீனமாகவே இருந்ததாக தகவல்
அப்பாவின் தம்பி சுதர்சனன் நாயர் அப்போது புதுக்கோட்டையில் வேலைபார்த்தார். இலக்கிய ஆர்வம் உண்டு. பல நூலகங்களை நிறுவுவதில் பங்குகொண்டவர். அம்மாவுக்கு அவர் இலக்கிய சகா. பரமேஸ்வர பிள்ளையைக் கையில் எடுத்து ”எந்தாடா நின்னுடே பேரு?” என்றார்.”…பிறமேச பில்ல” என்றது நோஞ்சான். ”சேட்டத்தியே இவனுக்கு இவனுடே பேரின் கனம்கூட இல்லியே…” என்றார். அம்மா மனம் வெதும்பினார்.
பெயர்களை உடனே மாற்ற சித்தப்பா நடவடிக்கை எடுத்துக் கொண்டார். தன் பெற்றோர் பெயரை மாற்ற அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. மற்ற பெயர் எக்கேடோ போகட்டும் என்று சொல்லிவிட்டதனால் பரமேஸ்வர பிள்ளை அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லா நெடுவிவாதம் வழியாக வங்க நாவலில் உள்ள குடிகாரக் கவிஞனின் பெயரான ‘ஜெயமோக’னை அடைந்தார். பிற்பாடு அவர் தன்னைப் புரட்சிநெருப்பாகவும் ஆன்மீகச்செம்மலாகவும் உணர்ந்த நாட்களில் இந்த ‘குஜால்’ பெயரை எண்ணி மனம் வருந்தியிருக்கிறார்.
தங்கைபெயர் விஜயலட்சுமி ஆகியது. அண்ணாவின் பெயர் பாலசங்கர். விசித்திரக் கலவை. சங்கரன் எந்தக்காலத்தில் பாலனாக இருந்தார்? பாலவிஷ்ணு என்று யாராவது பெயரிட்டிருக்கிறார்களா என்ன? அப்பாவழிப்பாட்டிக்கு அவர் கணவர் பெயரைச் சொல்லக் கூச்சமில்லாவிட்டாலும் [கணவரையே சங்கு ஆசானே என்றுதான் அழைப்பாராம்] மரபுப்படி அண்ணாவுக்கு ராஜன் என்று இன்னொரு பெயரும் போடப்பட்டது. அண்ணா பாட்டிக்கு இருந்த சிறப்பான மூக்கை அடைந்தார்– நடிகர் நாஸரின் மூக்கு. கோபம் வரும்போது அது சற்றே அசையும். கோபம் அடிக்கடி வரும். நிமிடத்துக்கு இரண்டு தடவை.
முன்கோபம் எங்கள் குடும்பத்தின் சொத்து. சொந்தத்தில் கோபிநாதன் நாயர் முன்கோபிநாதன்நாயர் என்றும், கோபகுமாரன் முன்கோபகுமாரன் என்றும் ஊராரால் சிறப்பிக்கப்பட்டார்கள்.அப்பாவுக்கு ‘இஞ்சி’ என்று பெயர் உண்டு. ‘கடுவா’ ‘அசுரன்’ என ஏராளமான பிறபெயர்கள். உடம்பெங்கும் முடி இருப்பதனாலோ பிடித்த பிடியை விடாததனாலோ கரடி என்றும் சொல்வதுண்டு.
அப்பாவின் முன் கோபத்துக்கு ஒரு நிகழ்ச்சியை உச்ச உதாரணமாகச் சொல்வார்கள். போஸ்ட் ஆபீஸில் அப்பா விலாசம் எழுதுவதற்காக ஒரு பேனாவை அங்கே நின்ற யாரோ ஒரு ஓய்வுபெற்ற மலையாள ஆசிரியரிடமிருந்து கடன் வாங்கினார்.எழுதியபோது நிப் சிக்கியது. பொறுமையைத் தக்கவைத்தபடி எழுதிப்பார்த்தார். எழுதவில்லை. ஓங்கி அதைப் பலகையில் குத்தினார். நிமிர்ந்து பார்த்தபோது மலையாள ஆசிரியர் திக்பிரமை பிடித்து நிற்பதைக் கண்டு தார்மீக ஆவேசமடைந்து ”புலையாடிமோனே, கொண்டுபோய்க் குப்பையில் போடுடா இதை”என்று பேனாவை அவரை நோக்கி விட்டெறிந்தார். அவர் பொறுக்கி செருகிக் கொண்டு வெளியே விரைய பின்னால் ஓடிக் குடையை ஓங்கியபடி ”நாயிண்டே மோனே, உங்கிடே குப்பையிலபோடத்தானேடா சொன்னேன்?” ‘என்று கத்தினார்.
அவர் குடல்பதறி சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிக்க பின்னால் பாய்ந்து பிடிக்கமுடியாமல் திரும்பி வெறிகொண்டு அந்தசைக்கிள் சாய்த்து நிறுத்தப்பட்ட லாந்தர் கம்பத்தை ஓங்கிக் குடையால் நாலு அடி அடித்து மூச்சிரைத்தார். அதன் பின் அருகே சொத்தி நாராயணனின் வெற்றிலைபாக்குக் கடையில் சாய்ந்து அமர்ந்து காளிமார்க் சோடா குடித்து இளைப்பாறி விட்டு வீடு திரும்பி என்னிடம் ”எரப்பாளியுடே மோனே, போய்க் குடையை எடுத்து கொண்டு வாடா”என்றார். நான் கீழே விழுந்த வவ்வால்போலப் பல கோணங்களில் விரிந்து கிடந்த குடையை எடுத்துக் கொண்டுவந்தேன்.
”நல்ல காரியம். அந்த விளக்குத்தூணுக்கு இனியாவது நல்லபுத்தி வரட்டும்…”என்று அம்மா சொன்னாள். ”புலையாடி மோளே உன்னையும் கொன்று நானும் சாவேன்”என்று அப்பா விசிறியுடன் பாய்ந்து கொல்லைக்கு வர அம்மா ஓடிப்போய் சமையலறைக் கதவை மூடிக் கொண்டாள். அப்பா கதவை காலால் நான்குமுறை உதைத்து மூச்சுவாங்க நின்று முறைத்தபின் போய் மீண்டும் சாய்வுநாற்காலியில் அமர்ந்துகொண்டர். அன்றுமாலை காயத்திருமேனி எண்ணை விட்டு காலை அம்மா நீவி விட அப்பா வெற்றிலை குதப்பியபடி சரஸமாக உரையாடுவதைக் கண்டேன். முன்கோபத்தின் அன்றைய கணக்கு முடிந்தபின் அப்பா நகைச்சுவையுடனும் காதலுடனும் இருப்பார்.
அண்ணா பள்ளிநாளிலிருந்தே முன்கோபத்தைப் பல கோணங்களில் விஸ்தரித்து வந்தார். இரண்டு முறை எழுதி ஒரு எழுத்து சரியாக வரவில்லை என்றால் சிலேட்டை உடைப்பது வழக்கம். நோட்டுகளை சுக்கல்சுக்கலாகக் கிழித்து வீசி ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மிதித்து அரைப்பார். எதிரிகள் எத்தனைபேர் இருந்தாலும் என்ன ஏது என்று பார்க்காத ஆவேசத்துடன் பாய்ந்து உள்ளே நுழைந்து எப்படி எங்கு என்ற சிந்தை இல்லாமல் தாக்குவார். எங்கள் பள்ளி வரலாற்றில் பள்ளிமாணவர்களின் சண்டையில் பாறாங்கல்லைத் தூக்கித் தாக்கவந்த முதல் மாணவர் அவரே. அவரை ஆசிரியர்களும் அஞ்சுவார்கள். கோபம் வந்தால் பெஞ்சுகள் வழியாகப் பாய்ந்துபோய் ஆசிரியரின் குரல்வளையைப் பிடித்துவிடுவார்.
அண்ணாவின் முன்கோபம் பள்ளியில் என்னுடைய பிரதான ஆயுதமாக விளங்கியது. எனக்கும் அவருக்கும் ஒருவயதுதான் வேறுபாடு.ஆனால் அவர் அன்றும் இன்றும் என் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர்.நான் யாரையும் அடிப்பேன். மண்வாரி வீசுவேன். கிள்ளுவேன். ஆனால் எவரும் என்னைத் திரும்ப அடிப்பது எனக்கு நியாயமாகப் படவில்லை. ”சேட்டா!” என்று அலறினால் தாக்க நினைப்பவர்கள் சிதறிவிடுவார்கள். ஒருமுறை தடியன் தங்கச்சன் என் மண்டையில் தட்ட நான் கதறியபடி பித்தான் இல்லாதசட்டை சிறகாகிப் பறக்க, நழுவும் நிக்கரை ஒருகையால் பிடித்தபடி, ராமசுப்ரமணிய அய்யர் நடத்திக் கொண்டிருந்த அண்ணாவின் வகுப்புக்குள் பாய்ந்தேறி ”சேட்டா என்ன அடிச்சான்!! ” என்றுகூவினேன்
”ஆரெடா அவன்?”என்று அண்ணா பிளிறியபடி பாய்ந்து நாலைந்து பேரின் தலைமேல் எம்பி,ராமசுப்ரமணிய அய்யரைத் தள்ளி மல்லாக்கப் போட்டுவிட்டு வெளியே பீரிட்டு ,அதற்குள் மலக்குடல் உள்ளே சுருள வெகுதூரம் ஓடிவிட்டிருந்த தங்கச்சனைத் தார்ச்சாலையில் நான்கு கிலோமீட்டர் துரத்தி ,அவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்து, வீட்டுக்குள் போய் சமையலறையில் வைத்துப் பிடித்துக் கட்டிப்புரண்டு கலையங்களை உடைத்து மூடிபோடப்பட்ட கோழிகளைப் பறக்கவைத்துக் கொல்லைப்பக்கக் கரிய சேற்றில் குழம்பி எழுந்து கூட்டம் கூட்டமாகப் பெண்களால் பிடித்து விலக்கப்பட்டார். அம்மா ஏகப்பட்ட நஷ்டஈடு கொடுக்க நேர்ந்தது
அண்ணாவுக்கு எப்போதும் பல அடிதடி வழக்குகள் உண்டு. அரசுவேலைக்குப் போனபின்னர்கூட சக ஊழியர்களை அடித்துப் பலதடவை தற்காலிக வேலைநீக்கம் செயப்பட்டிருக்கிறார். மேலதிகாரியை சுத்தியலால் மண்டையில் அடித்து ஒருவருடம் வரை வேலை இல்லாமலிருந்த அனுபவமும் உண்டு. அவருடன் தொழிற்சங்கப்பணிசெய்த பணிக்கரை திருவட்டார் முச்சந்தியில் போட்டு புரட்டி எடுத்தது முக்கிய நிகழ்வு.”எரப்பாளி, என்ன தைரியம் இருந்தா எங்கிட்ட வந்து முகத்தப்பாத்து அப்படிச் சொல்லுவான்?”அண்ணா மறுவாரமும் குமுறினார்.”உபதேசிக்க வாறான் பரதேசி.அவனைக் கொல்லாமல் விட்டது தப்பு” நான் அண்ணாவின் கோபத்தைப் பொருட்படுத்த மாட்டேன். என்னிடம் கோபித்ததே கிடையாது. தம்பி என்றால் எப்போதுமே வேறு கணக்கு. ”என்ன சொன்னார் அப்டி?”
”என்ன சொன்னானா? எரப்பாளி..அவனை..”என்று உடனே மீண்டும் அடிக்கக் கிளம்ப நான் ”செரி தெரியாமல் சொல்லியிருப்பார்…” என்று சமாதானம் செய்து ”என்ன சொன்னார் அப்டி?” என்றேன். ”எனக்கு முன்கோபம் அதிகமாம் .அடக்கல்லேண்ணா தப்பாம். முன்கோபம் அவன் அம்மாவோட….” அண்ணா நரம்பு புடைக்க சொல்லி ” முன் கோபமாம்… ஆருக்குடா முன்கோபம்? எனக்கா? எரப்பாளி அவன் இனியும் என் கையிலே சிக்குவான்”என்றார்
சிங்கம்புலியுடனே வாழப்பழகியவர்கள் மனிதர்கள். அண்ணி அலட்டிக் கொள்ளாமல் வாழக் கற்றுக் கொண்டார்கள் என்றால் பிள்ளைகளுக்கு அவருக்கு முன்கோபம் உண்டு என்பதே தெரியாது. நான் அண்ணாவின் பையன் சரத்துக்கு ”சங்கரப்பிள்ளைக்குப் பிள்ளை இல்லாமல் சக்கைக் குருவைத் தத்தெடுத்தார். சங்கரப்பிள்ளைக்கு மக்கள் உண்டானப்போ சக்கைக்குருவை சுட்டுத் தின்றார்” [சக்கைக்குரு- பலாக்கொட்டை]என்ற பாடலைச் சொல்லிக் கொடுத்தேன். சரத்துக்கு நல்ல குரல்வளம். எம்.ஆர்.ராதா சின்னப்பிள்ளையாக இருக்கும்போது அப்படித்தான் பேசியிருப்பார். அண்ணா வீடுதிரும்பும்போது பாடலைக் கேட்டார். மூக்கு அசைந்தது.
”ஆருடா பாட்டு சொல்லிக் கொடுத்தது?” என்றார். ”கொச்சச்சன்” [சித்தப்பா]. அண்ணா மெல்ல அடங்கி ” அவனுக்குக் கிறுக்கு.இனி அந்தப்பாட்டைப் பாடக்கூடாது…”என்று சொல்லி ஓய்வெடுக்கையில் அண்ணி வந்து ”சக்கைக்குரு துவரன் வைக்கட்டா?”என்று கேட்க அண்ணா ”ச்சீ…எரப்பாளீடே மோளே…நீ என்னடீ சொன்னே?”என்று சீறி எழ எப்போதும் எதற்கும் தயாராக இருக்கப் பழகிய அண்ணி ஓடித்தப்பினார்
அண்ணா வீடுதிரும்பினால் டிவி பார்க்க விரும்புவார். ஆனால் ஒரே சானலைப் பார்க்கும் அளவுக்குப் பொறுமை இல்லை. ரிமோட்டைக் கையில் வைத்து அதிவேக டைப்பிஸ்ட் போல அழுத்திக் கொண்டே இருப்பார். பக்கத்து அறையிலிருப்பவருக்கு ”மன்மதராஜா மன்மதராஜா என்று கருணாநிதி மின்னும் சிவப்பழகை நன்றாக அலசி நீரில் போட்டு முக்யமந்த்ரி நாயனார் வழங்குவது உங்கள் ராஜ் டிவி வந்நு விளிச்சப்போள் ஆண்ட் எ டீர் இஸ் சம்திங் க்யூட் டெடிகேட் பண்ணப்போறீங்க?…” என்று ஒரு நிகழ்ச்சியின் ஒலியைக் கேட்கும் அனுபவம் கிடைக்கும். அண்ணி ”…ஆபீஸ் விட்டு வந்து கேறினா ஒடனே டிவிக்குக் கிறுக்கு பிடிக்கும்”என்பார்கள்.
அன்றைக்கு அண்ணா கைகால்கழுவி முகம் துடைத்து வந்ததுமே ”ரிமோட் எங்கேடா?” என்றார். ரிமோட் சிக்கவில்லை. ”டிவி இல்லாட்டியும் பரவாயில்லை ரிமோட் இருந்தாபோரும்”என்று அண்ணி. ”நீ போடி நாயே…..ரிமோட் எங்கேடா நாறீடே மோனே?” ரிமோட்டைத் தேடும் முயற்சியில் ஹாலில் உள்ள அத்தனைபொருட்களும் கலைத்து வீசப்பட்டன. பீரோ கவிழ்க்கப்பட்டது. சூட்கேஸ்கள் பிளந்து விசிறப்பட்டன. அண்ணி அதற்கு அலட்டிக் கொள்வதேயில்லை. ”ரிமோட் எங்கேடா?” அண்ணா கூவியபடி அங்குமிங்கும் ஓடினார்.சுவரை ஓங்கி மிதித்தார்.”இந்த வீட்டில் ஒரு காரியமும் வச்ச எடத்திலே இருககது…நாசமாப்போற வீடு”
எங்குமே ரிமோட் இல்லை. டிவியில் ஒருத்தி கலகலவென சிரித்தாள். அண்ணா திரும்பிப்பார்த்தார். ”ரிமோட் இல்லாம ஒரு டீவி .. அதில ஒரு சிரிப்பு……மண்ணாங்கட்டி”என்று கூவியபடி பாய்ந்துபோய் டிவியை அப்படியே தூக்கி சொடேல் என்று தரையில் வீச அது கண்ணாடித்தொட்டி போல உடைந்து ஹால் எங்கும் பரவி முடிப்பதற்குள் மகன் சரத் ”அச்சா இந்தா ரிமோட்”என்று எடுத்து நீட்டினான்.
கையில் ரிமோட்டை வாங்கி அண்ணா சில கணங்கள் டிவியைப்பார்த்தபடி சிந்தித்தார் என்று அண்ணி சொன்னார்கள். அதையும் போட்டு உடைப்பதா வேண்டாமா என்று அவரால் உடனே முடிவுசெய்ய முடியவில்லை.