அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
மணல்வீச்சு
இதெல்லாம் பார்க்கும்பொழுது “நெஞ்சு பொறுக்குதில்லையே. இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்” என்று பாரதி சொன்னதைத்தான் திரும்பச் சொல்லத் தோன்றுகிறது. கரூர்ப் பக்கம் வந்து காவிரி ஆற்றங்கரையைப் பாருங்கள். மணலையெல்லாம் அள்ளித் தோண்டிக் கடைசியில் வெறுங்குழிகள்தான் மிச்சம். வருங்காலத் தலைமுறைகளுக்கு மணலைக் காட்சிப் பொருளாகத்தான் வைத்துக் காட்ட வேண்டும் போல! இதனுடையவிளைவுகள் எங்கு கொண்டு செல்லும் என்று தெரியவில்லை. தவறான காலத்தில் தவறான இடத்தில் வந்து பிறந்து விட்டோம். என்ன செய்ய
அன்புள்ள
பா.மாரியப்பன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த மூன்று வருடங்களாகத் தங்களது படைப்புக்களை உங்களது இணையதளத்திலும் உங்களது புத்தகங்களின் வாயிலாகவும் வாசித்தும் ரசித்தும் வருகிறேன். கடந்த வாரங்களில் தங்களின் சிறுகதைப் பிரவாகத்தில் மிகவும் ஈர்த்த சிறுகதை சோற்றுக்கணக்கு(”கெத்தேல் சாகிப்”)
இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் மதுரையிலும் அவரைப் போல, எளியோரின் பசிப்பிணி தீர்க்கும் ஒரு முதியவர் பற்றிய தகவலை நான் வாசித்தேன். அந்த இணைப்பை இத்துடன் உங்களுக்கு அனுப்பி அச்செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
http://www.hindu.com/mp/2011/03/10/stories/2011031050650200.htm
மனிதநேயம் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. உங்களது எழுத்துக்கள் அதை எங்களுக்கு மறு அறிமுகம் செய்கிறது. நன்றி
அ. லட்சுமணலால்
ஜெயமோகன் அவர்களுக்கு,
“இன்றைய காந்தி”யில் காந்தியின் காமம் சார்ந்த பரிசோதனை முயற்சிகளைப் பற்றி எழுதி இருந்தீர்கள். அவை முற்றிலும் நிராகரிக்கத்தக்கவை என்று கூறி இருந்தீர்கள். அவரைப் பின்பற்றி மற்ற காந்தியவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணம் காரணமாக இருக்கலாம். காந்தி என்னதான் தன்னுடைய செயல்களிலும் எண்ணங்களிலும் வெளிப்படையாக இருந்தாலும், அது அவருடைய அந்தரங்கம் அல்லவா? அதை பற்றி விமர்சிக்கவோ விவாதிக்கவோ நமக்கு உரிமை இல்லை என்றே எண்ணுகிறேன்.அவர் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காகக் காந்திய எதிர்ப்பாளர்கள் இதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைப்பார்களேயானால் அது அநாகரிகமே ஆகும். இதை வைத்து காந்தியைத் தவறாக எடைபோட்டுவிடகூடாது என்ற தங்கள் எண்ணம் புரியாமல் இல்லை. ஆதவன் எழுதிய “புதுமைப்பித்தனின் துரோகம்” கதை தான் நினைவுக்கு வருகிறது. புதுமைப்பித்தனின் செக்ஸ் வாழ்க்கையை வைத்து மட்டுமே அவருடைய படைப்புகளை மதிப்பிடுவது புத்திசாலித்தனம் அல்லவே. அதுவும் ஒரு கோணமே என்ற வாதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது?
ப்ரியமுடன்
கோகுல்பிரசாத்
அன்புள்ள கோகுல்
இதைப்பற்றி மிக விரிவாக ஏற்கனவே எழுதிவிட்டேன். ஒன்று,எந்தப் பொதுமனிதருக்கும் அப்படி முழுமையான அந்தரங்கம் இருக்கமுடியாது. அவரது செயல்கள் மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பவை. ஆகவே அவர்களைப்பற்றி அறிய மக்களுக்கு உரிமை உண்டு. மேலும் காந்தி அவரை அவரே முன்வைத்தவர்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
பதில் அளித்தமைக்கு நன்றி.
தங்களின் “இன்றைய காந்தி” புத்தகத்தை சமீபத்தில் தான் வாசிக்கும் பேறு கிட்டியது. அதில் அஹிம்சை வழியில் போராடும் போது தவறான முடிவுகள் எடுக்கப் பட்டிருப்பின் அதனால் இழப்புகள் குறைவு என்றும் குறைகளைக் களைந்து மீண்டும் அப்போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் எழுதியிருந்தீர்கள்.
இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி வல்லரசு நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்தது. நான் அணு ஆயுத அரசியலை ஆதரிப்பவன் அல்ல. அது அழிவுக்கே வழிவகுக்கும் என்று நம்புகிறேன். ஒரு சமயம் என் நண்பர்களுடன் விவாதம் செய்ய நேர்ந்த பொழுது, சீன அரசு நம்மிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்ற பயத்தினாலேயே, போர் தொடுக்காமல் இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். தற்சமயம், சீனாவோ வேறு சில நாடுகளோ போர் தொடுக்கிறது என்றால் ஆயுதங்களே நம்மைக் காப்பாற்றும் என்பதை நிராகரிக்க முடியவில்லை.
அந்த சமயத்தில் அஹிம்சை எங்ஙனம் நமக்குப் பாதுகாப்பு அளிக்கும்?அஹிம்சை என்பது வன்முறையற்ற ,தேவையற்ற போர்கள் (போரே தேவையற்றதுதான்) இல்லாத சுரண்டல் இல்லாத சமுதாயத்தில் மட்டுமே சாத்தியம் அல்லவா? அஹிம்சை என்பது ஒரு ஆதர்சக் கனவு. அது இனி வரும் காலங்களில் எப்படி சாத்தியமாகும்? அப்படி ஒரு நிலை ஏற்படுமா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.
அன்புடன்
கோகுல்பிரசாத்
காந்தியை எப்படி வகுத்துக் கொள்வது?