இரவு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு….

வணக்கம்…நான் உங்கள் கதைகள் நாவல்கள் சிலவற்றைப் படித்துள்ளேன். ஆனால் “இரவு” படிக்கும்பொழுது என்னுடைய conscious  -இல்  ஏதோ ஒரு பக்கத்தை..,எப்படிச் சொல்வது என்று  தெரியவில்லை…ஏதோ முன் ஜென்மத்தில் இப்படித்தான் நான் வாழ்ந்திருபேனோ என்ற எண்ணம் கூட வந்தது…mysitc  என்று சொல்லலாமா?தெரியவில்லை…இந்தக் கதை படிக்கும்பொழுது ஏதோ எனக்காகவே என்னுடைய வாழ்க்கை பற்றி எழுதியதைப் போல உணர்ந்தேன்.அதனுடைய அழகியல் மட்டும் அல்ல சூழ்நிலையும் என்னைக் கட்டிப் போட்டது..ஆனால் கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும்,இது என்னுடைய தர்க்க மனதுக்கு அப்பாற்பட்டது …..யாராவது  இரவைப் பற்றித் தரக்குறைவாகவோ அல்லது வெறுத்துப் பேசினாலோஎனக்கு வரும் கோபத்துக்கு அளவு கிடையாது…இரவு ,அதற்கு உண்டான அழகு அதற்கு இருக்கிறது…

இங்கு சென்னையில் அந்த இரவுக்கு வாய்ப்பே இல்லை…என்னதான் வீட்டை இறுக மூடினாலும் இருட்டில் அடுத்தவர் முகம் தெரிந்து விடும்…அநேகமாக சென்னை வாசிகள் இரவு என்ற அற்புத இயற்கை அளித்த பெரும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்றே சொல்வேன் . என்னுடைய சிறு வயதில் எங்கள் வீடு கிராமத்தை விட்டுச் சற்றுத்தள்ளி இருக்கும்..இரவில் அடுத்தவர் முகம் கூடத் தெளிவாகத் தெரியாது. இரவு இரவாகத் துல்லியமாக இருக்கும்..அத்துடன் இரவு…எந்த சமரசமும் கிடையாது..விளக்கு வைத்து விரட்டாத வரை எங்கும் எவ்வளவு தீர்க்கமாக ஊடுருவ முடியுமோ அவ்வளவு தீர்க்கமாக ஊடுருவியிருக்கும்..நான் இரவில் மிதந்து கொண்டு இருப்பேன்..தூரத்தில் மின்சார விளக்குகள் சில வெளிச்சப் புள்ளிகளாய்த் தெரியும்..உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன்..சிறிது நேரத்தில் அந்த வெளிச்சப் புள்ளிகள் வெளிச்சக் கற்றைகளாக மாறும்..உடனே கண்ணை மூடிக் கொள்வேன்..தூரத்தில் கொல்லி மலையில் இரவில் மரங்கள் சில சமயங்களில் உராய்ந்து தீப்பிடித்துக்கொள்ளும்..ஒன்று இரண்டு பேருந்துகள் மலை மீது ஊர்ந்து செல்லும் பொழுது அவற்றின் கண்கள் மறைந்து மறைந்து செல்லும்..சிறு சிறு நெருப்புப் புள்ளிகள்,அந்த மரங்களின் பெரும் நெருப்புப் பந்தை நோக்கி வேக வேகமாக நகர்ந்து செல்வது போல இருக்கும்….

அந்த இருட்டின் பிசு பிசுப்பை என்னால் உதற முடிந்ததே இல்லை.அந்தக் கத கதப்பை என்னால் மறக்கவும் முடிந்ததில்லை.இன்று அந்தப் பழைய வீட்டில் நாங்கள் இல்லை..கிராமத்தின் பகுதிக்குள் வந்துவிட்டோம்.ஆனால் இன்றும் நான் ஊருக்குச் செல்லும்பொழுது அந்தப் பழைய வீடு இருந்த இடத்திலேயே நிறைய நேரத்தைச் செலவிடுகிறேன். இத்தனைக்கும் அந்த நிலத்தை நாங்கள் வேறொருவருக்கு விற்று விட்டோம். அவர்களுக்கு எனக்கும் அந்த இடத்திற்கும் இருந்த பந்தம் புரியும்.அதனால் அந்த வயல்களில் நான் நிறைய நேரம் இருந்தாலும் அவர்கள் எதுவும் சொல்வதில்லை.ஒரு வேளை அந்த இடத்தில இருந்துகொண்டு இரவை நெடு நாளாகச் சுவாசித்ததால்தானோ என்னவோ …..?

மீடியா நடராஜ்

அன்புள்ள நடராஜ்

இரவின் வசீகரத்துக்கான் முக்கியமான காரணங்களில் ஒன்று நாம் லௌகீகவேலைகளை முழுக்கப் பகலில்தான் செய்கிறோம், இரவை அதற்கு அப்பால் வைத்திருக்கிறோம் என்பதுதான் என நினைக்கிறேன்

சமீபத்தில் கோதாவரிக்கரையில் இருக்கையில் அதையே எண்ணிக்கொண்டேன். நாம் நம் லௌகீக வாழ்க்கைக்கு அப்பால் வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு இடம், ஒரு நேரம் நமக்கு இன்றியமையாதது

ஜெ

இரவில் மட்டும் வாழ முடியுமா?

இரவில் வாழ்தல்-கடிதம்

இரவு நாவல்-கடிதம்

இரவு முன்னுரை

 

முந்தைய கட்டுரைசின்னக்குத்தூசி
அடுத்த கட்டுரைடியூலிப் மலர்கள்