சின்னக்குத்தூசி

அன்புள்ள ஜெ

சின்னக்குத்தூசி அவர்களை உங்களுக்கு அறிமுகமுண்டா? நீங்கள் அவரைப்பற்றி ஏதேனும் எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். அவருக்குக் கலைஞர் ஏதாவது உதவிகள் செய்தாரா என அறிய ஆசை.

அன்புமணி.கெ

அன்புள்ள அன்புமணி,

[விளிக்க என்ன இதமாக இருக்கிறது!]

சின்னக்குத்தூசி அவர்களை நான் பார்த்ததில்லை. அறிமுகமும் இல்லை. ஆனால் நான் அறிந்தவரை ஒரு சராசரி தமிழ் வணிக-கட்சி இதழாளர். எந்தத் துறையிலும் நீண்டநாள் இருந்தால் அதைப்பற்றிய தகவல்கள் நினைவில் இருக்கும். அவ்வளவுதான் அவரது திறமை. அந்தத் திறமையைக் கண்மூடித்தனமான தனிநபர் விசுவாசத்துக்காக மட்டுமே செலவிட்டவர், அதுதான் அவரது தகுதி.

மு.கருணாநிதி அவர்களின் இலக்கியத் தகுதி பற்றி நான் என் கருத்துக்களைச் சொன்னபோது சின்னக்குத்தூசிதான் அந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார். அதற்கு ஒருநாள் முன்னர் என் நண்பரிடம் கூப்பிட்டு நான் யார், என்ன எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் ஐந்துநிமிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். அதற்கு முன் அவருக்கு என் பெயர் அறிமுகமில்லை. என் நண்பர் கொடுத்த தொலைபேசி அறிமுகத்துக்கு அப்பால் எதையும் தெரிந்துகொள்ளவும் அவர் முயலவில்லை. அவர் எழுதிவந்த வசைமாரி கட்டுரைகளுக்கு அவ்வளவே போதுமென அவருக்குத் தெரிந்திருந்தது. எந்த விஷயத்திலும் அவருக்கு அவ்வளவுதான் அறிமுகம். அவரது கட்டுரைகளை வாசித்தால் தெரியும்.

அவருக்கு வரும் அஞ்சலிக்கட்டுரைகளைப் பார்க்கையில் தமிழ் இதழாளர்களின் தரம் என்னவென்று தெரிகிறது. குருநாதரே இந்த லட்சணத்தில் இருக்கிறார்.

தீப்பொறி ஆறுமுகம் ஒரு கூட்டத்திலே சொன்னார். கருணாநிதி அவர்களுக்காக இரவுபகலாக அவர் மேடையிலே பேசியநாட்கள். பெண்ணுக்குக் கல்யாணம் வைத்திருந்தார். யாரோ சொன்னார்கள் ‘முப்பது வருஷம் கட்சிக்காகப் பேசியிருக்கிறாயே, கட்சி உனக்கு என்ன தந்தது? பெண் கல்யாணத்துக்காகப் போய் உதவி கேள்’ என்று.

சென்னை சென்றார் தீப்பொறி ஆறுமுகம். கருணாநிதி அவர்களைச் சந்தித்தார். தீப்பொறியைக் கண்டதுமே கருணாநிதி கேட்டார். ‘’ஏய்யா கட்சியிலே முப்பது வருஷமா இருக்கியே, இந்தான்னு ஒரு ஆயிரம் ரூபா கொண்டாந்து எனக்கு குடுத்தியாய்யா நீ ?’

ஜெ

முந்தைய கட்டுரைஜீவாவுக்கு விருது
அடுத்த கட்டுரைஇரவு ஒரு கடிதம்