மின்மினித்தழல்

அன்புள்ள ஜெ.

சென்றவாரம் கோவையிலிருந்து வந்த நண்பர் ஒருவர்,  அவர் அழைத்துச்சென்று கோவையை சுற்றிய பகுதிகளில் நாங்கள் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி பேசிவிட்டு மீண்டும் ஒரு பயணம் செய்யலாம் எனவும் அழைத்தார்.

அப்போது நாங்கள் முன்பு சென்று வந்திருந்த ஆனைமலையில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு ஆச்சரியத்தை பகிர்ந்து கொண்டார்.

அந்தக் காட்டில் திடீரென லட்சக்கணக்கான மின்மினிகளால்  இரவில் காடே பச்சை நிறத்தில் ஒளிர்ந்ததாகவும், இதுபோன்ற நிகழ்வு சமீபத்தில் எதுவும் நடக்கவில்லை எனவும், நான் தவறவிட்ட இந்நிகழ்வு நாளிதழ்களில் வெளியாகி இருந்ததாக  சொல்லி ,  வெளியான செய்தியின் புகைப்படத்தை நேற்று அனுப்பியிருந்தார்.

உண்மையில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது.

வெண்முரசின் சொல்வளர்காட்டின் ஏழாவதான  சாந்தீபனியில் , சஸ்ரர்,  சாந்தோக்ய குரு நிலையிலிருந்து கிளம்பி சாந்தீபனி காட்டிற்கு வந்தபோது நடந்ததாக நீங்கள் எழுதியதல்லவா இது என நினைவை மீட்டிக்  கொண்டேன்.

அதில் உங்கள் வார்த்தைகள் அப்படியே….    “ஏழுநாட்கள் பயணம் செய்து அவர் அந்த காட்டை சென்றடைந்தார். அது ஒளிவிடுவது ஒரு விழியமயக்கோ என்னும் ஐயம் அவருக்கிருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் அணுகிச் செல்லும்தோறும் அந்த ஒளி மிகுந்தபடியேதான் வந்தது. அது இளநீல ஒளியெனத் தோன்றியது. செந்நிறமோ பச்சையோ என மாறிமாறி மாயம் காட்டியது. பேருருவம் கொண்ட மின்மினி அது என எண்ணம் குழம்பியது. கந்தர்வர்கள் மானுடரை ஈர்த்து அழிக்க வைத்த பொறியோ என்று அஞ்சியது

…… அந்த ஒளியில் இலைப்பரப்புகளும் பளபளத்தன. சற்றுநேரத்தில் கீழே சதுப்புவெளியிலிருந்து பல்லாயிரக்கணக்கில் மின்மினிகள் எரிகனல்மேல் காற்றுபட்டதுபோல கிளம்பத்தொடங்கின. அவை எழுந்து இலைகள்மேல் அமர்ந்தன. காற்றில் சுழன்று நிறைந்தன. காட்டின் ஒளி செந்நிறமாகியது. விழிகொள்ளாத விம்மலுடன் அவர் அதை நோக்கி அமர்ந்திருந்தார்.”.

என் ஆச்சரியம் எல்லாம் இதுதான்..

இது போன்று சமீபகாலங்களில் எதுவும் நிகழ்ந்திராத நிலையில் நீங்கள் இதுகுறித்து விபரமாக எழுதியிருந்தது வெறும் தற்செயல் தானா அல்லது சொல்லுக்கிறைவி கம்பநாடனை “துமி” என்ற வார்த்தைக்காய் காப்பாற்றியது போலவா..

( எழுத்தாளன் வார்த்தையின் அறம் என்ன விளைவைத் தரும் என்பதை விஷ்ணுபுரத்தின் இறுதி அத்தியாயத்தில் சோனாவின் நீர் உயரும் பகுதிகளை மெழுகு திரி வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது  உண்மையாகவே வீட்டின் வெளியே நீர் வரத்து ஏறி முழுகிப்போனதை 2015 ம் ஆண்டு முடிச்சூரில் நேரில் உணர்ந்தவன் என்பதால்கேட்கிறேன்.  (இது குறித்து விரிவாக பின்னர் எழுதுகிறேன்).

அன்புடன்

நாகராஜன்

முடிச்சூர்.

அன்புள்ள நாகராஜன்

இரண்டுவகை எழுத்தாளர்கள் உண்டு. தங்கள் எளிய சொந்தவாழ்க்கையை ஒட்டி எழுதுபவர்கள் ஒருவகை. அவர்களுக்கு ஒரு பங்களிப்பு உண்டு. ஆனால் பெரும்படைப்புகள் இன்னொருவகையினரால் எழுதப்படுகின்றன. அவர்கள் பெரும் பயணிகள். நிலத்திலும், நூல்களிலும், அகத்திலும் பயணம் செய்துகொண்டே இருப்பவர்கள். சைபீரிய நாரைகள்போல உலகை வலம்வந்தாலும் தீராதது அவர்களின் தாகம்

என் முன்னுதாரணங்கள் இரண்டாம் வகையினரே. நான் தொடர் பயணி. அந்த மின்மினிப்பெருந்தழலை பேச்சிப்பாறை பகுதியில் பலமுறை கண்டிருக்கிறேன். அதன்பின் மலேசியா சென்றபோது ம.நவீனுடன் Kampung-Kuantan என்னும் இடத்தில் படகில் சென்று ஒரு மின்மினித் தீவையே சுற்றி வந்தேன். சிறிய சதுப்புக்காட்டுத் தீவு. மொத்த தீவுமே மின்மினிகளால் சுடர்விட்டுக்கொண்டிருந்தது.

நான் நாவலில் எழுதிய சுடர்விடும் தாவரங்கள் கொண்ட காட்டையே கண்டிருக்கிறேன். ஒருவகை பூஞ்சை அது. இரவில் மென்மையாக மின்னும். நான் கண்டது நேபாள எல்லையில், இமையமலை அடிவாரத்தில். ஆண்டில் சில நாட்கள் மட்டுமே நிகழ்வது.

அதேபோல கடலில் சுடர்விடும் பூஞ்சை ஒன்றை காண  உடுப்பி அருகே மழையில் பயணம் செய்து காத்திருந்தோம். பார்க்க முடியவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைபடிகம் ரோஸ் ஆன்றோவின் இல்ல விழா
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி வம்புகள்