வடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா

பாரோவிலிருந்து இரவோடிரவாகத் திரும்பினோம். இனி நேராக ஊர் திரும்புதல்தான் என்ற எண்ணம்,மனதை நிறைவும் கனமும் கொள்ளச்செய்தது. ஆனால் ஊர் மிகத்தொலைவில் இருந்தது. பல மாநிலங்களுக்கு அப்பால். இருளில் சுழன்று மறைந்த மலைகளைப்பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம்.

பூட்டானின் பழைய மாளிகைகளில் ஒன்று

வரும் வழியில் பார்த்த பாலம் இருளிலேயே மறைந்தது. அதற்கும் முன்னால் ஒரு பழைய இடிந்த பூட்டானிய வீட்டைச் சென்று பார்த்தோம். மண்ணால் கட்டப்பட்ட அடித்தள அமைப்பு மட்டுமே இருந்தது. உள்ளே நீர் தேங்கியிருந்தது. ஒரு பூட்டானிய நிலப்பிரபுவின் வீடு. கனத்த மரங்களாலான உத்தரங்கள். ஆழமாக மண்ணுக்குள் செல்லும் கலவறை. இந்தப்பயணத்தில் கிராமப்புற பூட்டானை பார்க்க முடியவில்லை. இரண்டுநாள் இரண்டு நகரங்கள் மட்டும்.

திம்புவில் மதியம் பார்த்த ஒரு காட்சி நினைவில் மீண்டு வந்தபடியே இருந்தது.  ஒரு ஓட்டலுக்கு மாமிசம் கொண்டுசென்றார்கள். பிரம்மாண்டமான மாட்டைக் கொன்று உரித்து நாலைந்து பெரிய துண்டுகளாக ஆக்கி அப்படியே புத்தம் புதிய காரில் பின்பக்கம்  ஏற்றிக்கொண்டுவந்து தலைமேல் சுமந்து கொண்டு செல்வதைக் கண்ட அரங்கசாமி மேற்கொண்டு மாமிசமே உண்ணப்போவதில்லை எனச் சூளுரை செய்தார். ஏன் இப்படிக் கொண்டுசெல்கிறார்கள் என்று தெரியவில்லை. குளிர்நாடானதனால் மாமிசம் எளிதில் கெடாது போலும்.

கொலை!

குட்டி பூட்டானி ஆர்வமாக ரசிக்கிறான்

நள்ளிரவில் திம்புவந்தோம். ராவன் ஓட்டலில் கர்மா எங்களுக்காக உணவுடன் காத்திருந்தாள். அன்று தூங்கியதுபோல நண்பர்கள் எப்போதுமே தூங்கியிருக்க மாட்டார்கள். அதிகாலையில் எழவேண்டும் என்று கிருஷ்ணன் வழக்கம்போலப் பயமுறுத்தினாலும் வழக்கம்போல அதை எவரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. மறுநாள் காலை கிளம்பி நேராக மீண்டும் ஃபூச்சலிங் வந்து எல்லை கடந்து மேற்குவங்கம் வந்தோம். ஜெய்கோன்நகரில் அதே ராஜஸ்தானி ஓட்டலில் மதியம் சாப்பிட்டோம். அழுக்கு,குப்பை,தூசி,நெரிசல் எனக் கைவிடப்பட்ட நகர் வழியாக நடந்த போது பூட்டான் ஒரு கனவுபோல நினைவில் புதைந்துசென்றது.

தீஸ்தாவில்

கல்கத்தா  ஆபாச மஞ்சள் நிற டாக்சி

அங்கிருந்து இன்னொரு வண்டியில் சிலிகுரிக்கு. உண்மையில் சிலிகுரிக்கு அல்ல, அருகே ஒரு பெரிய ரயில்நிலையம் உள்ளது. நியூ ஜல்பாகுரி,நம் ஊர் அரக்கோணம் போல ஒரு ரயில்சந்திப்புநகரம். மொத்த வடகிழக்குக்கும் அதுவே சந்திப்புமுனை.அங்கே இருந்து ஒன்பது மணிக்கு எங்களுக்குக் கல்கத்தாவுக்கு ரயில். செல்லும் வழியில் மேற்குவங்கத்தைப் பார்த்துக்கொண்டே சென்றோம். வளம் மிக்க ஊர். கேரளம்போலவே பிரமை எழுந்தது. ‘சித்திரங்கோடு குலசேகரம் ரோடு மாதிரி இருக்கிறது’ என்றார் வினோத்

செல்லும் வழியில் பல சிற்றாறுகள். ஓர் இடத்தில் குளிக்க இறங்கினோம். பெரியநதி தீஸ்தா வருகிறது என்றார் ஓட்டுநர். தீஸ்தா விரிந்து கிடந்தது. வெண்மணல் வெளியில் வழியும் நீலநீர் சரடு. காரை நிறுத்திவிட்டு இறங்கிச்சென்றோம். மாலை சிவந்தடங்கும் நேரம் . குளிர்நாட்டில் இருந்து திரும்பியபோது எழுந்த வெக்கைக்குக் குளியல் நல்லதுதான். ஆனால் நீர் ஆழமே இல்லை. எங்குமே இரண்டடிக்கு மேல் நீர் ஓடவில்லை. கொடிமரம்முன் விழுந்து கும்பிடுவதுபோல கும்பிட்டுத்தான் தீஸ்தாவில் குளிக்கவேண்டும்

ஒன்பதுமணிக்கு ரயில்நிலையத்தில் உணவு. இங்கே மீனைப் பொரித்து ரசம்போல இருக்கும் குழம்பில் விட்டு சிவப்பு அரிசியுடன் தருகிறார்கள். நன்றாகவே இருந்தது. ரயிலில் ஏறியதுமே தூங்கிவிட்டோம். காலையில் கல்கத்தாவின் பிரம்மாண்டமான சேரிகள் நடுவே குப்பை போன்ற வீடுகள்,குப்பை போன்ற மனிதர்கள், குப்பை போன்ற வண்டிகளைக் காட்டியபடி ரயில் வந்து நின்றது. எங்களுக்கு மாலை நான்கு மணிக்கு விமானம். அதுவரை தங்க இடம் வேண்டும். ஒரு விடுதியறைக்காக அலைந்தோம். கடைசியில் அறைகிடைத்தது, ஆயிரம் ரூபாய். விசித்திரமான ஒரு சந்துக்குள் காற்றோ வெளிச்சமோ புகாத அறை. ஆனால் ஒன்பதுபேர் குளித்து உடைமாற்ற அது போதும்

 

மேமாத வெயிலில்

கீழே சென்று ரசமலாயும் பூரியும் சாப்பிட்டோம். வெயில் எரிந்தது. வசந்தகுமாரும் கிருஷ்ணனும் தங்கவேலும் மீண்டும் கல்கத்தாவைப் பார்க்கச் சென்றார்கள். நான் தனியாக ஒரு சுற்று சுற்றி ஒரு இணையநிலையத்தைக் கண்டுபிடித்து மின்னஞ்சல்கள் பார்த்து ஒரு பயணக்குறிப்பையும் எழுதி இணையத்தில் ஏற்றினேன். மீண்டும் அறைக்குத் திரும்புகையில் கண்டுபிடிக்கவே முடியவில்லை. விடுதிவாசலை மூடியபடி இரு லஸ்ஸி கடைகள் முளைத்திருந்தன. வெயிலில் அரைமணிநேரம் சுற்றிவந்தேன்

வேறெந்த இந்தியநகரத்திலும் இந்தக் கொடும் வறுமையைக் காணமுடியாது. கை ரிக்‌ஷாக்கள்,தெருச்சிறுவர்கள். தெருவிலேயே வாழும் பெரும் சமூகம் இங்கே உள்ளது. காலை ஒன்பது மணிக்கு நம் அண்ணாசாலை போன்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் மீன்கறி சமைத்தார்கள். சாப்பிட்டார்கள். தூங்கினார்கள். குளித்தார்கள். மேம்பாலங்களுக்கு அடியில் நம்பவே முடியாத அளவுக்கு அழுக்கும் குப்பையும் நிறைந்த கடைகள் செறிந்திருந்தன. ஒரு நிலத்தடிப்பாதையில் இறங்கினேன். நான்கடவுள் படத்தின் பாதாளம் போல ஒரு இடம். குப்பைகள்,சிறுநீர்,மலம் நடுவே பிச்சைக்காரர்கள். குழந்தைகள் அங்கே விளையாடிக்கொண்டிருந்தன.

ஓட்டலுக்கு ஆட்டுச்சடலம்

முப்பதாண்டுகளாக ஒரு இடதுசாரி மனிதவிரோதக்கும்பலால் மனசாட்சியே இல்லாமல் சீரழிக்கப்பட்ட நரகம் இது. இதை எப்படி மீட்டெடுப்பதென்பது எவருக்கும் தெரியவில்லை. கல்கத்தா அதன் சணல் தொழில், துறைமுகம் இரண்டையும் மட்டுமே நம்பி இருந்த நகரம். இரண்டுமே தொழிற்சங்க குண்டர் அரசியலால் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. கிராமங்களில் நிலஉடைமைச் சமூக அமைப்பு இடதுசாரி பௌடர்பூச்சுடன் அப்படியே பேணப்பட்டமையால் தலித்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கிவிட்டார்கள்.

கல்கத்தாவின் தெருக்கள் வழியாகச் சுற்றிவந்து வசந்தகுமார் அதன் விரிந்த சித்திரத்தைக் காட்டினார். அறுபதுகளில் சென்னையில் காதுக்குறும்பி எடுக்கவும் காலில் முள் எடுக்கவும் ஆட்கள் இருந்தார்கள், அவர்கள் இல்லாமலாகி முப்பதாண்டுகளாகிவிட்டன, கல்கத்தாவில் இன்றும் அவர்கள் இருக்கிறார்கள் என்றார். சாலைகளில் கைவண்டி இழுப்பவர்கள், சாலையிலேயே வாழ்பவர்கள் என ஏராளமான புகைப்படங்களை எடுத்திருந்தார்.

வங்கத்தை மீட்க தீதி என்னமோ செய்து பார்க்கிறார். அரசூழியர்கள் கண்டிப்பாகப் பத்து மணிக்கு வந்தாகவேண்டும் என்று முதல் அறிவிப்பு. ஆனால் அவரே பத்தேமுக்காலுக்குத்தான் அலுவலகம் வர முடிந்தது. கல்கத்தாவில் சாலைவிதிகள் என ஏதும் இல்லை.  அவர் ஒரு பிடிவாதமான பெண்மணியே ஒழிய நிர்வாகி அல்ல. ரயில்வே அமைச்சகத்தில் அவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அவரது கட்சிக்காரர்களும் மார்க்ஸியப் பண்பாட்டில் ஊறிய சோம்பேறிகளே. ஒரு தலைமுறையே அப்படி உருவாகி விட்டது. ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை சீரழிந்து விட்டது. அவர் மார்க்ஸிய எதிர்ப்பாளர்கள் அனைவரையும் திரட்டிப் பதவிக்கு வந்திருக்கிறார். அவர் ஏதும் செய்யமுடியாதென்பதே வங்காளிகளின் எண்ணமும் கூட. கால்நூற்றாண்டில் முதல்முறையாக மக்கள் ஓட்டுப் போட்டு ஓர் அரசு வந்திருக்கிறது என நிறைவடையலாம், அவ்வளவுதான்

நூற்றுக்கணக்கானவர்களின் தொழில் இது. ஒருநாளுக்குப் பத்து கால் கிடைத்தால் போதும்

மதிய உணவுக்குப்பின் கிளம்பினோம். கல்கத்தாவில்தான் இந்தியாவிலேயே டாக்ஸி வாடகை குறைவு. அந்த நாற்பத்தேழு மாடல் டாக்ஸிகள் இந்தியாவில் வேறெங்கும் ஓடுமா என்றும் தெரியவில்லை.  அந்த ஆபாசமஞ்சள் நிற வண்டியில் ஏறியமைக்கு எங்களுக்குத்தான் பணம் கொடுக்கவேண்டும்

டாக்ஸியில் சூட்கேஸ்களைத் தூக்கி வைக்க ஓட்டல் ஊழியர்கள் இருவர்,தெருவாசிகள் நால்வர் வந்தனர். அவர்களுக்குள் சண்டை. நாங்களேதான் தூக்கி வைத்தோம். கனமான சாமான் என ஏதும் இல்லை. ஆனால் வண்டிக்குள் கைவிட்டு ‘பக்‌ஷீஸ்’ கேட்டுக் கெஞ்சினார்கள். திட்டினார்கள். கல்கத்தாவில் இவர்கள் எதை நம்பி வாழ்கிறார்கள் என்றே தெரியவில்லை. ‘வேலை இல்லாமல் இல்லை ஜெயன், இந்த நகரில் ஏதாவது வேலை இருக்கும். இவர்கள் செய்யமாட்டார்கள். சும்மாவே எல்லா இடங்களிலும் அமர்ந்திருக்கிறார்கள்’ என்றார். பல இடங்களில் பகலிலேயே போதை ஊசி போடும் கும்பல் அமர்ந்திருந்தது. ‘காதில் அவரவருக்கான சிரிஞ்சை செருகி வைத்திருக்கிறார்கள்’ என்றார் செந்தில்.

குழாய்க்குள் ஒரு குடும்பமே இருக்கிறது

மூன்று ஐம்பதுக்குச் சென்னை விமானம். ஐந்தரைக்கு வந்து சேர்ந்தோம். விமானத்திலேயே வங்காளதேசத்தைச்சேர்ந்த ஒரு தொழிலதிபர் இறந்து போனார். இரு சிறுநீரகங்களும் பழுதாகிச் சென்னைக்கு சிகிழ்ச்சைக்காக வந்துகொண்டிருந்தாராம். அவரை இறக்கிச்செல்வது வரை காத்திருந்தோம். சென்னை ரயில்நிலையத்திலேயே நண்பர்கள் பிரிந்துசென்றார்கள். நானும் அரங்கசாமியும் கிருஷ்ணனும் விஜயராகவனும் மட்டும் மணிரத்தினத்தின் விருந்தினர் விடுதிக்குச் சென்றோம். அவர்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு ஊர்கிளம்பினார்கள். நான் படுத்துக்கொண்டபோது சென்னையில் இருந்து கிளம்பிய நாள் வெகுதூரத்தில் ஒரு வரலாற்றுதினம் போல நினைவில் இருப்பதை உணர்ந்தேன்.

[நிறைவு]

வடகிழக்கு நோக்கி 9,ஒரு மாவீரரின் நினைவில்

பூட்டான் குழந்தைகள்

அந்தப்பெண்கள்…

பூட்டான் கட்டிடங்கள்

பனிவெளியிலே

வடகிழக்கு நோக்கி 8,திபெத்தின் குழந்தை

வடகிழக்கு நோக்கி,7-மடாலயங்களில்

வடகிழக்கு நோக்கி-6,திம்பு

வடகிழக்குநோக்கி-5 பூட்டான்

வட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி

வடகிழக்கு நோக்கி 3- காங்டாக்

வடகிழக்கு நோக்கி 2-நெடும்பயணம்

வடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்

 

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் (2011)
அடுத்த கட்டுரைபயண நண்பர்கள்