வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்

டா மடாலயத்தில் இருந்து வெளிவந்ததும் ஓட்டுநரிடம் கீழே இருக்கும் இன்னொரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு டைகர்ஸ் நெஸ்ட் என அழைக்கப்படும் மடாலயத்துக்குப் போகலாமென்றோம். ‘இனிமேல் முடியாதே’ என்றார். எனக்குக் கடும் கோபம் வந்தது. ‘இல்லை. அதுதான் பூட்டானின் அடையாளம். அங்கேபோகாமல் இந்தப் பயணத்தை முடிப்பதாக இல்லை’ என்றேன். அவன் ‘நேரம் இல்லையே’ என்றான். ஒரு ஓட்டுநர் ஜான் லாமா நிதானமானவன். ஆங்கிலம் தெரிந்தவன்.இன்னொருவன் கோபக்காரன். அவன் கோபமாக ஏதோ சொன்னான். ‘போயாகவேண்டும்’ என்றேன். மற்றவர்களும் சொன்னார்கள். ’அப்படியானால் உடனே கிளம்புவோம். நேரமே இல்லை.  சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவோம்…கீழே உள்ள மடாலயத்தைப் பார்க்க நேரமில்லை’ என்றான் ஜான்

 

புலிக்கூடு மடாலயம்

உடனே கிளம்பினோம். ஓட்டலில் உணவைத் தயார் செய்ய முன்னரே தொலைபேசியில் உத்தரவிட்டுவிட்டுக் காரில் சென்றோம். செல்லும் வழியிலேயே அரங்கசாமி இறங்கிப்போய் எங்கோ பூட்டானிய பாணி உடைகளுக்கு உத்தரவிட்டுப் புகைப்படம் எடுக்கக் காத்திருக்கலானார். ஓட்டலில் காத்திருந்த நான் அவரைக்கூப்பிட்டுத் திட்டினேன். பாய்ந்து வந்தார். நாங்கள் சொல்லியிருந்த உணவுகள் வந்தன. பூட்டானிய உணவு. நானும் வசந்தகுமாரும் பன்றிக்கறி கேட்டோம். பன்றி வற்றலைக் கறியாக்கியிருந்தார்கள். பல் உடையத் தின்னமுன்யன்றோம்.

யுவன் தயிர் இல்லாமல் சாப்பிடத் தயங்க அதைப் பக்கத்துக் கடையில் இருந்து வாங்கிக்கொண்டு வந்தார்கள். காய்ச்சாமல் உறைகுத்தப்பட்ட யாக் தயிர். நன்றாகத்தான் எனக்குப் பட்டது. யுவன் சில சொட்டுகளுடன் நின்றுவிட்டான். சாப்பிட்டுமுடித்து டைகர் மடாலயம் நோக்கிச்செல்ல ஒருமணி. சென்று சேர ஒன்றரை மணி.

வழி

டக்ட்சங் என்ற பேருள்ள மடாலயம் பூட்டானியர்களால் புலிக்கூடு என்று சொல்லப்படுகிறது. 1692ல் கட்டப்பட்டது இது.  இந்த இடம் பூட்டானியர்களுக்கு மிகமிக முக்கியமானது. பூட்டானை உருவாக்கியவர் என்று கருதப்படுபவர் முதலாம் ரிம்போச்சே என்ற குரு பத்மசம்பவர். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்தான் திபெத்திய ஞானகுருவான முதல் ரிம்போச்சே [ஷ்யான் பிரக்யாத் லக்காங்]. இவரது வாரிசுத்தொடர்ச்சி இன்றும் ரிம்போச்சே என்றே அழைக்கப்படுகிறார்.

பத்ம சம்பவர் அரசத்தோற்றம்

திபெத்திய பௌத்ததின் முதன்மையான குருநாதர்களில் ஒருவர் பத்மசம்பவர். காந்தார நாட்டில் [ அதாவது பாக்கிஸ்தானில் இன்றைய ஸ்வாத் சமவெளியில்] பிறந்தவர் பத்மசம்பவர்.அவர் தனகோசம் என்ற ஏரியில் விரிந்திருந்த ஒரு தாமரை மலரில் எட்டுவயது சிறுவனாகவே தோன்றியவர். ஆகவேதான் அவருக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. அவரை அன்றிருந்த ஒட்டியான அரசர் கண்டடைந்து தன் இளவரசராக ஆக்கினார். ஆனால் இளமையிலேயே அவர் தன் அண்ணனுக்காக அரசுப்பதவியை துறந்து வட இந்தியாவுக்குச் சென்று பௌத்த துறவியாகி ஞான வழியில் செல்லத்தலைப்பட்டார் [ இளங்கோ, அய்யப்பன் ஆகியோரின் கதைகளுக்குப் பெரிதும் நிகரானது இக்கதை]

பலவகையான தாந்த்ரீகமுறைகளில் தேர்ச்சி பெற்ற பத்மசம்பவர் மந்தாரவா என்ற இளவரசிக்கு அவற்றைக் கற்றுத்தந்தார். அதை அறிந்த மன்னன் அவரைச் சிதையிலேற்ற,நெருப்பு அவரை எரிக்கவில்லை. மன்னன் பணிந்து நாட்டையும் இளவரசியையும் அவருக்கு அளித்தான். அவர் அவற்றை ஏற்காமல் அங்கிருந்து கிளம்பினார். நேப்பாளத்தில் உள்ள மாரதிகா என்ற குகையில் தவம்செய்தார்.  அங்கே மந்தாரவாவும் வந்துசேர்ந்தாள். அமிதாயுஸ் என்ற  அமுததேவதை அவர்களுக்கு காட்சியளித்தாள். அவர்கள் இறவா உடல்பெற்றார்கள்.  இன்றும் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பதாக திபெத்திய பௌத்தம் நம்புகிறது.

பத்மசம்பவர் ஒரு தாந்த்ரீக பௌத்த மரபை உருவாக்கினார். திபெத்தின் யார்லங் வம்சத்தின் 38 ஆவது மன்னராகிய டிரிசொங் டெட்சென் அவரைத் திபெத்துக்கு அழைத்தார். கிபி  745 வாக்கில் பத்மசம்பவர் திபெத்துக்குச் சென்றார். அங்கே அம்மக்களை வதைத்த மலைத்தெய்வங்கள அவர் ஒடுக்கி அவர்களை விடுவித்தார் என்பது புராணம்.  மன்னரின் ஒரு மனைவியைத் தாகினி யக்‌ஷியாகப் பத்மசம்பவர் அடையாளம் கண்டதாகவும் அவளை மீண்டும் அவளுடைய சுயவடிவுக்குத் திருப்பியதாகவும் கதை. அவளே தீ உமிழும் பறக்கும் புலியாக ஆகி அவரது காவல்தெய்வமாக இருக்கிறாள்.

 

பத்மசம்பவருக்கு மொத்தம் நான்கு யோகத்துணைவிகள். நால்வருமே நான்கு யட்சிகளாக இப்போது வழிபடப்படுகிறார்கள். இவர்கள் அனைவருமே கதைப்படி தீய சக்திகள். அவர்களைத் தன் யோகத்துணையாக ஆக்கியதன்மூலம் அவர்களைப் பத்மசம்பவர் கடந்துசென்றார் எனப்படுகிறது. வஜ்ராயனத்தின் அடிப்படைக் கோட்பாடே அதுதான். காம குரோத மோகங்களை உள்வாங்கி அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மேலே சென்று ஆன்மீக மீட்பை அடைவது.

 

திபெத்தில் தாந்த்ரீக பௌத்த ஞானமரபை நிலைநாட்டிய முதல் குரு பத்மசம்பவர். அவர் ரிம்போச்சே என்று அவர்களால் அழைக்கப்படுகிறார். அவர் நேப்பாளம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், பூட்டான் ஆகிய பல ஊர்களுக்குச் சென்று அங்கே குகைகளிலும் மலையுச்சிகளிலும் தங்கி தியானம் புரிந்துள்ளார். இப்பகுதிகளெல்லாமே அவரால் பௌத்தமயமாக்கப்பட்டன. இன்று இப்பகுதிகளிலெங்கும் அவர் பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறார். அவருக்கு மொத்தம் எட்டு வகையான தோற்றங்கள் உண்டு. அவற்றில் அவர் போதிசத்வ வடிவிலும் மன்னர் வடிவிலும் குரூரமான பூத வடிவிலும் எல்லாம் தோற்றமளிக்கிறார்

 

பத்மசம்பவர் அவர் தங்கியிருந்த குகைகளிலும் ஏரிகளின் அடியிலும் மலையுச்சிகளிலும் பல தர்மங்களை [டெர்மா என்று திபெத்திய மொழியில் சொல்லப்படுகின்றன. இவை அவரது ஞானவழிமுறைகள்] மறைத்து வைத்திருக்கிறார் என்கிறார்கள். பின்னர் வரும் ரிம்போச்சேக்கள் அவற்றைக் கண்டடைந்துவெளிப்படுத்துவார்கள் என்று சொல்லியிருக்கிறாராம். குரு ப்த்மசம்பவர் என்னும் ரிம்போச்சே பலநூறு டாங்காக்களிலும் மரச்சிற்பங்களிலும் வெண்கலப்படிமங்களிலும் வார்க்கப்பட்டு வழிபடப்படுகிறார்

குரு பத்மசம்பவர் பூட்டான் மலைப்பகுதிகளை ஆட்டிப்படைத்த மலைப்பிசாசுகளை அழிக்கும்பொருட்டு அவரது பறக்கும்புலி மேல் ஏறி ஒரு மலையுச்சியில் வந்திறங்கினாராம். அந்த மலையுச்சியில் அவர் ஆறுவருடங்கள் தவமிருந்து அந்தப்பேய்களை உள்வாங்கித் தெய்வ உருவங்களாக மாற்றித் தன் கீழே அணிவகுக்கச்செய்தார். அந்த இடமே இன்று புலிக்க்கூடு மடாலயம் என அழைக்கப்படுகிறது. அங்கே பூட்டானின் மன்னராகிய டென்சின் ரம்க்யே கட்டியது,இந்த புகழ்பெற்ற மடாலயம்

சுற்றிவளைத்திருக்கும் இமயமலைகளின் நடுவே  பத்தாயிரம் அடி உயரமுள்ள மலையில்  மிகமிகச் செங்குத்தாகக் கிட்டத்தட்ட மூவாயிரம் அடி உயரத்துக்கு எழுந்திருக்கிறது ஒற்றைக்கருங்கல் பாறை. அந்தப் பாறைக்கு மணிமுடி சூட்டியதுபோல வானில் நிற்கிறது மடாலயம். பாறையின் மொத்த முகடையும் மடாலயம் நிறைத்துள்ளது. அதாவது சன்னல் வழியாக எதையாவது வீசினால் அது மூவாயிரம் அடி கீழே வந்து விழும் என்று பொருள். இப்படிக் கட்டப்பட்ட எந்த கட்டிடமும் இல்லை என்றே நினைக்கிறேன்.

வானில் நிற்கும் விமானம் போல அதைக் கண்டதுமே நண்பர்கள் தயங்கிவிட்டார்கள். போவதா வேண்டாமா, மாலைக்குள் திரும்பி விடமுடியுமா என்ற சர்ச்சை. நான் போகப்போவதாக முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தேன். டாக்டர் தங்கவேல் உடன் வந்தார். பிறர் தொடர்ந்தனர். வசந்தகுமார் மட்டும் வரவில்லை என்று சொல்லி நின்றுவிட்டார்.

மேலே செல்ல ஒரு காட்டுப்பாதை. சேறு நிரம்பியது. குதிரையில் போகமுடியும். வழியெங்கும் குதிரைச்சாணம். கொஞ்சதூரம் ஏறியதுமே நாக்கு தொங்கி இதயம் உடலெங்கும் அடிக்க ஆரம்பித்தது. ஆனால் நின்று நின்று நாய்போல மூச்சு வாங்கி வியர்வை கொட்டச் சென்றுகொண்டே இருந்தோம். சென்றுசேர முடியுமா என்ற ஐயம், சென்றுவிடுவோம் என்ற உறுதி இரண்டும் மாறி மாறி வந்தன.  பெரும்பாலும் காலையிலேயே சென்றிருந்தார்கள். அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். நான்கு மணிநேரம் ஆகும் என்றார்கள். மூன்று மணிநேரம் என்றார்கள்.

எங்களுக்கு மூன்றரை மணிநேரமாகியது.  செல்லும் வழியில் கொஞ்சம் சாரல் மழை கொட்டியது. நல்ல குளிர். ஆனால் உடல் எரிந்துக்கொண்டிருக்கும் உழைப்பு வியர்வையைத்தான் ஊற்றெடுக்கச்செய்தது. சுற்றிலும் ஊசிமரக்காடுகள். உள்ளே நூற்றுக்கணக்கான அருவிகளாக நீர் கொட்டும் ஒலிகள்.

 

மேலே சென்றதும் ஒரு மலைவளைவு வழியாகப் படிகளில் இறங்கிப் பின் ஏறி அந்த மடாலயத்தை அடையலாம். செங்குத்தான கரிய பாறையில் வெள்ளிச்சரிகை போல ஒரு சிறிய அருவி இறங்கி வந்து மடாலயத்தைத் தாண்டிக் கீழே சென்று மறைந்தது. சுற்றிலும் ஆழத்தில் மேகம்பரவிய ஊசிமரக்காடு. அங்கே நின்று மடாலயத்தைப்பார்க்கையில் அது ஒரு கனவு என்றே பட்டது

நாங்கள் செல்லும்போது மடாலயத்தை மூட ஆரம்பித்திருந்தார்கள். செந்தில் சென்று சொன்னதனால் திறந்து வைத்திருந்தார்கள். நானும் விஜயராகவனும் முதலில் சென்றோம். பிறகு யுவன் சந்திரசேகரும் டாக்டர் தங்கவேலும்,கெ.பி.வினோத்தும் வந்தார்கள். அதன் பின் அரங்கசாமி வந்தார். அரங்கசாமி சிகரெட் புகைப்பவர். நுரையீரல் வெடிக்க வெடிக்க மூச்சிளைத்துக்கொண்டு வந்தார். அந்தக் காட்சியைக் கண்டு யுவன் கண்ணீர்விட்டு அழுதார் என்றார் வினோத்

மடாலயம் உண்மையில் மூன்று குகைகளை அறைகளாக ஆக்கிச் கட்டப்பட்டது. மரத்தாலானது. பொன் வண்ணம் பூசப்பட்ட பெரிய மரத்தடிகளால் கட்டப்பட்ட கம்பீரமான சிறிய கட்டிடம். முதல் குகையில் நடுவே அமுத கலசம் ஏந்திய புத்தர். வலப்பக்கம் அரச தோற்றத்தில் ரிம்போச்சே. இடப்பக்கம் புலிமேல் ஏறிய பூதத்தோற்றத்தில் ரிம்போச்சே. அருகே பயங்கரமான பதினொரு தலைகளுடன் இடாகினிதேவியைப் புணர்ந்த நிலையில் ரிம்போச்சே.  மூன்றாளுயரமான வண்ணச்சிற்பங்கள். பளபளக்கும் செவ்வண்ணமும் பொன்வண்ணமும் கொண்டவை. அங்கே வந்தமர்ந்ததுமே அரங்கசாமியும் யுவனும் விஜயராகவனும் அழுதார்கள்.

பிற அறைகளில் போதிசத்வரின் மரச்சிற்பம் இருந்தது. அதன் இருபக்கமும் ரிம்போச்சேயின் மரச்சிற்பங்களும் பின்னால் வரிசையாகப் பிற லாமாக்களின் சிற்பங்களும் இருந்தன. உள்ளறையில் ரிம்போச்சேயின் நூல் ஒன்று வைக்கப்பட்டிருப்பதாகவும் வருடத்தில் ஒருமுறை மட்டும் அது எடுத்து வாசிக்கப்படும் என்றும் சொன்னார்கள். ஏப்ரல் மாதத்தில் அந்த வாசிப்பு ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மலைக்கு அருகே திபெத்திய மகாகுரு மில ரேபா தங்கிய குகை ஒன்று உள்ளது. அது ஒரு சிறு கோயிலாக உள்ளது. நாங்கள் செல்லும்போது அது மூடப்பட்டிருந்தது. மிலரேபாவுக்கும் அவரது குரு மார்ப்பாவுக்கும் இடையேயான உறவைப்பற்றி நித்யா அதிகமாகச் சொல்லியிருக்கிறார்- நானும் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அந்த மடாலயத்தில் ஒரு பெரிய லாமாவும் நாலைந்து இளம் லாமாக்களும்தான் இருக்கிறார்கள். இளம் லாமா ஒருவர் ஸ்டிராவில் சோப்பு நுரை ஊதி இன்னொருவர் மேல் தெறிக்கச்செய்வதற்காகத் துரத்த அவர் தப்பி ஓடி ஒரு பெரிய அண்டாவை ஒரே தாவலில் கடந்து மேலேறிச்சென்றார். இவர் சிரித்துக்கொண்டே துரத்தினார். குளிரும் அமைதியும் நிறைந்த அந்த இடம் வானில் ஒரு பகுதி, மண்ணை மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.

நேரமாகி விட்டமையால் கிளம்பினோம். ஏறவேண்டியதில்லை என்ற எண்ணமே பரவசத்தை அளித்தது. ஆனால் பாதை,பெய்திருந்த மழையில் ஊறி வழுக்க ஆரம்பித்தது. கால்கள் தளர்ந்திருந்தமையால் தசைகள் ‘பிரேக்’ பிடிக்க முடியாமல் வலித்தன. வரும் வழியிலேயே நன்றாக இருட்டி விட்டது. நாங்கள் எட்டுப்பேர்தான். இருட்டுக்குள் செல்பேசியை விளக்காக்கித் தட்டுத்தடுமாறி நடந்தோம். இருபக்கமும் பெரிய பள்ளங்கள் அச்சுறுத்தின. வேர்கள் தடுக்கின . ஒரு மறக்கமுடியாத திகில் பயணம்

கீழே வந்ததும் எங்கள் ஓட்டுநர்கள் தேடிவந்தார்கள். அவர்கள் விளக்கு காட்டியிருக்காவிட்டால் கார்கள் நின்ற இடத்தைக் கண்டுபிடிக்க மிகவும் தடுமாறியிருப்போம். ஒருவழியாக வந்து சேர்ந்ததும் மூச்சு வாங்க நின்றுகொண்டோம். மேலே பார்த்தபோது ரிம்போச்சேயின் குகைமடாலயம் வானில் மெல்லிய விளக்கொளியுடன் ஒரு பறக்கும் தட்டுப் போல நின்றது

‘வீரம் என்கிறோம். தன்னுடைய அனைத்தையும் உதறி இப்படி ஒரு மலையில் ஏறி எதையோ தேடி எதையோ நம்பி இத்தனை வருடங்கள் ஒரு மனிதர் வாழ்ந்தால் அதற்கிணையான வீரம் வேறு உண்டா? நாம் அகிம்சையே உருவான வர்த்தமானரை மகாவீரர் என்பது சாதாரண விஷயம் அல்ல’ என்றேன்

[மேலும்]

பூட்டான் குழந்தைகள்

அந்தப்பெண்கள்…

பூட்டான் கட்டிடங்கள்

பனிவெளியிலே

வடகிழக்கு நோக்கி 8,திபெத்தின் குழந்தை

வடகிழக்கு நோக்கி,7-மடாலயங்களில்

வடகிழக்கு நோக்கி-6,திம்பு

வடகிழக்குநோக்கி-5 பூட்டான்

வட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி

வடகிழக்கு நோக்கி 3- காங்டாக்

வடகிழக்கு நோக்கி 2-நெடும்பயணம்

வடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்

 

முந்தைய கட்டுரைபூட்டான், குழந்தைகள்
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் (2011)