அந்தப்பெண்கள்…

 

அகன்ற கண் அழகு என்று ஈராயிரம் வருடங்களாகக் கற்ற மனம் சில கணங்களிலேயே திருத்திக்கொண்டது. கண்கள் வழியாகத் தெரிவது எதுவோ அதுவே அழகு. அது இளமை என்றால் உற்சாகம் என்றால் கனிவு என்றால் இரு ஜொலிக்கும் வைரங்களே போதுமே.

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு உடை உருவாகி வந்துள்ளது. சூடும் குளிரும்தான் அவற்றைத் தீர்மானித்துள்ளன என்பவர்கள் சமூகவியலாளர்கள். அவர்கள் நாசமாகப் போகட்டும். பெண்களையும் குழந்தைகளையும் தீராது கொஞ்சும் மானுட அழகுணர்வல்லவா அவற்றை உருவாக்கியிருக்கிறது?

 

எந்த உடையிலும் தன்னை அழகாக வெளிக்காட்டிக்கொள்ளும் ஒன்றுண்டு. அதுதான் மலர்களாக தளிர்களாகத் தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

இன்னொரு பேமா. பெண்களுக்குப் பிரேமை என்றல்லாமல் வேறெப்படி பெயர் இருக்கமுடியும்? லாச்சுங்கில் அவள் தன்னந்தனியாக ஒரு டீக்கடை நடத்துகிறாள். துணிகள் வாடகைக்கு விடுகிறாள். உபசரிக்கிறாள். பன்னிரு கைகளுடன் அவளைப் பார்ப்பது ஓர் அனுபவம்.

எந்த இனமும் அதன் இளைஞர்களில் தன் உச்சகட்ட சாத்தியத்தை வெளிக்காட்டுகிறது.   செடி மலரில். வானம் வானவில்லில்.

இன்னொரு பேமா. திம்பு அருங்காட்சியக வழிகாட்டி. அழகிய சிரிப்புடன் எப்போதுமே கலந்த மெல்லிய வெட்கம். ஒருவேளை வேறெந்த நாட்டிலும் வழிகாட்டியிடம் காணப்பட வாய்ப்பில்லாதது.

பூட்டான் முழுக்கக் கடைகளில் பெண்கள்தான். மொழிக்குப் பதிலாகச் சிரிப்பைப் பயன்படுத்துகிறார்கள். கண்களுக்குப் பதிலாகக் கன்னம் ஒளிவிடுகிறது.

https://picasaweb.google.com/vishnupuram.vattam/BhutanSikkimJeyamohan 

முந்தைய கட்டுரைபூட்டான்- கட்டிடங்கள்
அடுத்த கட்டுரைபூட்டான், குழந்தைகள்