சமூகம் சார்ந்த செயல்களில் தங்களை முற்றளித்து இயங்கும் சாட்சிமனிதர்களுக்கு, குக்கூ குழந்தைகள் வெளி வாயிலாக வருடந்தோறும் ‘முகம் விருது’ அளித்துவருகிறோம். அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான முகம் விருது தோழர் அன்புராஜ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், சிறைக்கைதிகளின் வாழ்வுநிலை நலன்களுக்காவும் தொடர்ந்து பல்வேறு களச்செயல்கள் வழியாக செயலாற்றும் அன்புராஜ் அவர்களின் அர்ப்பணிப்பை வணங்கி இவ்விருது அவருக்கு அளிக்கப்படுகிறது.
‘மனந்திருந்துதல்’ என்கிற சொல்லின் அர்த்தம் மிக மிக அடர்த்தியானது. அகவலிமையுள்ள மனிதரால் மட்டுமே அதை நேரடியாக எதிர்கொள்ள முடியும். அவ்வார்த்தையின் அர்த்தப்படி தன் வாழ்வமைத்து, நம் கண்முன் நடமாடும் செயல்மனிதர்களுள் தோழர் அன்புராஜ் மிக முக்கியமானவர். ஆகவே, இளையோர்கள் பின்பற்ற வேண்டிய சமகால ஆளுமையென இவரைத் தயக்கமின்றி முன்னுதாரணம் கொள்ளலாம். பெரும் குற்றங்கள் சுமத்தப்பட்டு சட்டத்தால் சிறைதண்டனை பெற்று, அதிலிருந்து விடுதலையாகி, சமூகச்செயல்களை ஆற்றிவரும் இவருடைய வாழ்வு, அதையறிகிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நம்பிக்கையை உண்டாக்குகிறது.
சிறுவயதிலிருந்தே வனம் சார்ந்த வாழ்வியலில் தன்னீடுபாடு கொண்டவர். இளவயதில் பிறழ்வுக்குரிய ஒரு பாதையில் பயணித்து, பின்பு அதிலிருந்து தன் அகத்தை மீட்டெடுத்து, எவ்விதத் தளர்வுமின்றி திரும்பவந்து, சரியான திசையில் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட நேர்மையாளராக தோழர் அன்புராஜ் ஊரறியப்படுகிறார். வெறுப்பை முன்வைத்து சகமனிதரைத் தூரப்படுத்தும் அபத்தமான தத்துவங்களின் அபாயக்குரல் ஓங்கியொலிக்கும் இச்சமகாலத்தில், நேர்மறையான செயல்விதைப்பை மலையின் மெளனத்தோடு நிகழ்த்தும் இவர் நமக்கான ஆசிரியமனம்.
வீரப்பன் கூட்டாளியாக மூன்று ஆண்டுகள் உடனிருந்து சில குற்றச்செயல்களில் அவருக்கு உதவியதால், கிட்டத்தட்ட இருபதாண்டுகாலம் சிறைதண்டனை பெற்று (தமிழகம் மற்றும் கர்நாடகச் சிறைகளில்) விடுதலையானவர் தோழர் அன்புராஜ். ஏழாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தவராக சிறைசென்றவர், சிறைக்குள்ளேயே பட்டயப்படிப்பை நிறைவுசெய்தார். 20 வருடங்கள் சிறைதண்டணை முடிந்து வெளிவந்த பிறகு, சிறைக் கைதிகளுக்காவும் பழங்குடி மக்களுக்காகவும் தன்னுடைய வாழ்வை முழுமையாக ஒப்படைத்துச் செயலாற்றுகிறார். சக சிறைக்கைதியான பெண்ணைத் திருமணம் செய்து, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சத்தியமங்கலம் வனப்பகுதி அந்தியூரில் வசித்துவருகிறார்.
நிறைய பெருங்கனவுகள் அன்புராஜ் அவர்களுக்கு உள்ளது. மார்த்தாண்டம் தேன் பண்ணை போல, சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாழும் மலைக்கிராம மக்களுக்கான கூட்டுறவுத் தேன் மையம் அமைத்தல்; பழங்குடி இசைக்கருவிகள் மீட்பகம்; சிறைவாசிகளுக்கான மீள்வாழ்வு மையம் உள்ளிட்ட பலவகையானப் பெருஞ்செயல்களுக்கான கனவுகளைச் சுமந்தபடி தன் ஒவ்வொரு நாளையும் அதை நிறைவேற்றவே செலவிடுகிறார். இவர் எடுக்கும் ஒவ்வொரு செயற்பாடும் பழங்குடி மக்களின் வாழ்வுநிலை உயர்வுக்கு நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. அம்மக்களின் அடிப்படை உரிமைகள், பொருளியல் மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வி என இவைகளை மையப்படுத்தியே இவரது ஒவ்வொரு செயல்பாடும் செயல்வடிவம் கொள்கின்றன.
மலைவாழ் பழங்குடி மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த தோழர் வி.பி.குணசேகரன்; பூம்பூம் மாட்டுக்காரர்களின் குழந்தைகளின் கல்விக்கு பணியாற்றிய பிரேமாவதி; ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்த நாகராஜன் அய்யா; சிறார் இலக்கிய முன்னோடி ஆளுமை வாண்டுமாமா; பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் மரபு விதைகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்திய பேரறிஞர் வெங்கடாசலம்; குழந்தைகளுக்குக் குப்பைப் பொருட்களிலிருந்து பொம்மைகள் செய்யக் கற்பிக்கும் ஆசான் சுபீத்; பாரா ஒலிம்பிக் போட்டிக்காக ஏராளமான மாற்றுத்திறனாளிகளை பயிற்சியளித்து அனுப்பிய ஆசிய ஒருங்கிணைப்பாளர் நாகராஜன்; திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிகூடத்தின் நிறுவனர் முருகசாமி அய்யா; கல்விச்சேவை புரிந்த வாடிப்பட்டி பொன்னுத்தாய் அம்மாள்; தமிழில் அச்சில் இல்லாத பல அரிய நூல்களைத் தேடிக் கண்டடைந்து மீட்டெடுக்கும் அழிசி ஸ்ரீனிவாச கோபாலன் ஆகியோருக்கு இதுவரை முகம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறைப்பெருவரிசையில் இவ்வருடம் இவ்விருது தோழர் அன்புராஜ் அவர்களைச் சென்றடைவதில் மிகுந்த மகிழ்வுகொள்கிறோம்.
பழங்குடி மக்களின் நிலைமீட்சிக்காகத் தனது வாழ்வினை முற்றளித்து செயற்களத்தில் நிற்கும் இடதுசாரியத் தோழர் வி.பி.குணசேகரன் அவர்களின் சமகாலத்து வழித்தோன்றலாய், அய்யாவுடைய முழுசெயல்வடிவமாக நாங்கள் கருதுவதும் நம்புவதும் தோழர் அன்புராஜ் அவர்களைத்தான். மேலும், மார்க்சியத்தையும் காந்தியத்தையும் அதனதன் நிறைகுறைகளோடு உள்வாங்கி செயற்பாட்டுத்தளத்தில் அவைகளை ஒருங்கிணைத்து பல்வேறு மாற்றுச்சாத்தியங்களை துவங்கிவைப்பராக இவரிருக்கிறார்.
அன்புராஜ் தோழரை எண்ணும்போது மனதிலெழும் முதல்வியப்பு, ஓர் கலைவடிவம் அதையேற்கும் மனிதனை என்னவாக மாற்றுகிறது என்பதுதான்! துயரங்கள் நிறைந்த அனுபங்களைப் பெற்ற ஒரு மனிதரால் எப்படி இவ்வளவு நேர்மறையாகவும் நேர்மையாகவும் இவ்வாழ்வைப் பணிந்தேற்க முடிகிறது? சிறையில் இருந்தபோது இவர் கண்ட கஸ்தூர்பா காந்தியின் கதைநாடகம் இவருடைய வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காந்தியத்தாக்கம் அளவில்லாத உளவிசையை இவருக்கு நல்கியிருக்கக்கூடும். சிறைச்சாலைகளில் நாடகம் நிகழ்த்தும் ‘சங்கல்பா’ எனும் நாடகக்குழுவோடு இணைந்து எண்ணற்ற நாடகங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்த இலக்கிய வாசிப்பினாலும், ஆசிரிய மனிதர்களின் தொடர்பினாலும் தன்னுடைய உள்ளார்ந்த விருப்பத்தைக் கண்டடைந்தார். இவர் விடுதலையாவதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியுள்ளார்.
கலை ஒருவனை மீட்குமா? என்ற கேள்விக்கு, “ஆம், மீட்கும்! நான் மாறியுள்ளேன். எந்த சிறைவாசியையும் அணுகி அறிந்தால் அவர் மேல் ஒரு பரிதாபம் வரும், பெரும்பாலான கைதிகள் திட்டமிட்டு குற்றம் செய்திருந்தால் கூட அச்செயலை செய்யும் சமயத்தில் அவர்கள் பிரக்ஞையற்றே இருக்கிறார்கள். இந்த மனநிலை ஆய்வுக்கு உட்பட்டது. கலையின் அடிப்படை என்பது ஒருவனின் அகத்தில் ஏற்படும் விளைவுகளை பரிசீலிக்கவேண்டும், வெறும் புற எதார்த்தம் கலையாகாது. இத்தனை வருடங்களாக என்னைச் செலுத்திக் கொண்டிருக்கும் ஒற்றைவிசை நாடகக்கலைதான்” என்கிறார்.
எல்லாவிதத் தத்துவங்களைச் சார்ந்த மனிதர்களையும் அரவணைத்து, முரண்களின்றி செயல்களைச் சாத்தியப்படுத்துவது என்பது நிச்சயம் அசாத்தியமான ஒன்று. அதை அன்புராஜ் அண்ணன் தன் தூய்மையான அகத்தால் நிஜமாக்கிவிடுகிறார். எவ்வித நிதிப்பின்னணியோ நிறுவனப் பின்னணியோ இல்லாமல் இந்த அத்தனை சமூகச் செயல்களையும் நிறைவேற்றி வருகிறார். இச்சமூகம் எத்தகைய மனிதர்களின் முன்தடங்களைப் பின்பற்ற வேண்டும் என்கிற கேள்வியெழுகையில், எவ்வித அச்சமுமின்றி நம்மில் எவரும் அன்புராஜ் அவர்களைச் சுட்டிக்காட்டலாம். எத்தகைய அவநம்பிக்கைவாதிக்கும் அவருடைய கதை இவ்வாழ்வின் மீது பற்றுதலை உண்டாக்கிவிடும்.
அன்புராஜ் அவர்களைக் குறித்து நாங்கள் மிக அணுக்கமாக அறியநேர்ந்ததின் முதல் துவக்கபுள்ளி உங்கள் தளத்தில் வெளியான ‘கலையின் வழியே மீட்பு’ என்னும் நேர்காணல்தான். மீண்டெழுந்த ஒரு செயற்பாட்டாளரின் அகத்தை, மிகத் தெளிவானதொரு தன்வரலாற்றுப் பதிவாக பொதுவெளியில் அறிமுகப்படுத்திய ஆவணமாக அதைக் கருதுகிறோம்.
“நம்பிக்கையை அடைவதற்கு நம்பிக்கையின்மை எனும் கொதியுலையைக் கடக்க வேண்டி இருக்கிறது”… தஸ்தாயேவ்ஸ்கியின் வரி இது. தோழர் அன்புராஜ் தன் வாழ்வில் அத்தகையக் கொதியுலையைக் கடந்து, தனக்குரிய கலையையும் வாழ்வையும் கண்டடைந்திருக்கிறார். குக்கூ குழந்தைகள் வெளி அளிக்கும் முகம் விருது வரிசையில் தோழர் அன்புராஜ் அவர்களும் இடங்கொள்வது ஆத்மார்த்தமான மகிழ்வைத் தருகிறது. ஒப்பற்ற செயல்மனிதனின் கரங்களையும் கனவுகளையும் இறுகப்பற்றி அந்நம்பிக்கையை நாங்களும் பெற்றடைகிறோம்.
அன்புராஜ் அவர்களின் வாழ்வனுபவ உரையாடல்:
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்,
குக்கூ குழந்தைகள் வெளி
ஜவ்வாதுமலை அடிவாரம்