தமிழ் விக்கி தூரன் விருது- கடிதங்கள்

தமிழ் விக்கி தூரன் விருது

கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு

அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே?  கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி தூரன் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.  நான் அவருடைய நரிக்குறவர் இனவரைவியல் புத்தகத்தை மட்டும் படித்திருக்கிறேன்.  ஆர்வமூட்டும் பல சமூகச்சித்தரிப்புகளை நான் அப்புத்தகம் வழியாகத் தெரிந்துகொண்டேன்.  ஒரு புனைகதை நூலைப்போலவே நான் அதை ஊக்கமுடன் படித்தேன்.   கண்டறிந்த செய்திகளை படிப்பதற்கு ஆர்வமூட்டும் வகையில் கச்சிதமாகத் தொகுத்து எழுதும்  ஆற்றலும் பத்மபாரதியிடம் உண்டு என்பதற்கு அந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு.  அவருடைய  மொழிவளம்  வெகுசில ஆய்வாளர்களுக்கே அமையக்கூடிய ஒன்று.

அர்ப்பணிப்புணர்வு மிக்க ஓர் ஆய்வாளர் பணியின்றி இருக்கிறார் என்பது வருத்தமளிக்கும் செய்தி. இப்படிப்பட்ட நிலைமை  எவரையும் மிக எளிதில் துவளவைத்துவிடும். ஆயினும் வற்றாத ஊக்கத்துடன் ஆய்வுப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பத்மபாரதியைக் கண்டடைந்து விருதுக்குரியவராக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.   தூரன் பெயரால் அறிவிக்கப்படும் விருது முதன்முதலாக அவரிடமிருந்து தொடங்குவது, அவ்விருதின் அளவுகோல் என்ன என்பதை சொல்லாமலேயே அனைவருக்கும் உணர்த்தும்.

பத்மபாரதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

 

அன்புள்ள ஜெ

கரசூர் பத்ம பாரதிக்கு தமிழ்விக்கி- தூரன் விருது அளிக்கப்பட்ட செய்தியை வாசித்து மகிழ்ச்சி. உரிய தேர்வு. மிகச்சரியான ஆய்வுகளைச் செய்தவர். அவரை மதிப்பது நம் ஆய்வுச்சூழலுக்கு நாமே ஒரு நல்ல மதிப்பெண் போட்டுக்கொள்வது.

பொதுவாக இந்தவகையான ஆய்வுகளை மேட்டிமைப்பார்வை, கரிசனைப்பார்வை ஆகியவை இல்லாமல் செய்வது ரொம்ப கடினமான பணி. அதைவிடக் கடினமான பணி அவர்களின் வாழ்க்கைமேல் நம்முடைய சொந்த தியரிகளை ஏற்றி வைக்காமலிருப்பது.

நாம் தலித் வாழ்க்கையை பற்றி மிகுதியாகப் பேசுகிறோம். விளிம்புநிலைக்கும் கீழே உள்ள மக்களின் வாழ்க்கையை ஆய்வுசெய்துள்ள கரசூர் பத்மபாரதியின் ஆய்வுகள் மிகமிக முக்கியமான தொடக்கங்கள். இன்னும் நிறைய ஆய்வேடுகள் வரவேண்டும்

லட்சுமி சுந்தரம்

முந்தைய கட்டுரைநமது அமெரிக்கக் குழந்தைகள்-2
அடுத்த கட்டுரைஅமெரிக்கக் குழந்தைகள், கடிதங்கள்