புத்தகத்தை படித்து முடித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகத்தை வர்ணிப்பது கடினம். பிரமிப்பு என்று சொல்லலாம், மிகச் சாதாரண வார்த்தை. ஒரு வேளை அந்த வார்த்தையின் எடையை பத்து மடங்கு கூட்டினால் சரியாக வந்திருக்கக்கூடும். அஜிதன் எழுதிய 227 பக்கங்கள் கொண்ட மைத்ரி நாவலை கையில் எடுத்து படித்து முடிக்க ஆறு மணி நேரம் எடுத்தது. ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்.
இளம் காதலர்கள். அவன் பெயர் ஹரன், அவள் மைத்ரி, மலைப்பெண். அவன் பஸ்சில் புறப்பட்டபோது அவனை மந்தாகினி ஆறு தொடர்கிறது. மலைப்பெண்ணும் உடன் வருகிறாள். ஒரு சிறு நட்பு உருவாகிறது. கேதார்நாத் போகும் வழியில், கௌரிகுந்த் என்ற சிறிய கிராமத்தில் ஹரன் தங்கிக் கொள்கிறான். புதிய நிலம், இமயத்தில் கங்கை பிறக்கும் இடம். அதே இடத்தில் காதலும் உதயமாகி வேகமாக மந்தாகினியின் பிரவாகம் போல மேலெழுகிறது. முன்னொரு போதும் படித்திருக்க முடியாத நிலக் காட்சி வர்ணனைகள் விரிகின்றன. மலைச் சிகரங்கள், புல்வெளிகள், மரங்கள், பூக்கள், பறவைகள், ஆட்டு மந்தைகள் அங்கே வாழும் மலை மக்கள் என அரிதான விவரணைகள்; அத்துடன் அந்த மக்களின் அப்பழுக்கற்ற அன்பு எல்லாமே வெளிப்படுகிறது.
‘ஒரு கணம்கூட அதை ஏற்கவில்லை. நான் என் சுயத்தின் மதுவை கண்மூடிப் பருகினேன், பின் ஆழத்து இருளுடன் மல்லிட்டேன், அதை வீழ்த்தி நகங்களால் திசையெங்கும் கிழித்தெறிந்தேன்.’ 14ம் நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த சைவக் கவிஞர், மெய்ஞானி லல்லேஷ்வரியின் கவிதை வரிகளுடன் நாவல் ஆரம்பமாகிறது.
’லட்சம் கோடி விண்மீன்கள் அணிந்து அவள் என்னை சூழ்ந்திருந்தாள்’ இப்படி ஒரு வசனம். ’அந்த மலைப் பள்ளத்தாக்கை முழுவதுமாக நிறைத்து இருளில் நுரையுடன் பொங்கி எழுந்து வந்தது மந்தாகினி. வெண் மேகங்கள் சூழ்ந்த பனிமலைச் சிகரங்கள். பனித்துளி படர்ந்து மரகதமாக மாறியிருக்கும் மலைச் சரிவுகள்.’ இவ்வகையான இயற்கை வர்ணனைகளில் லயித்து ஒன்றும்போது அகம் விரிந்து ஞானிகள் சொல்லும் தெய்வீக உணர்வு பற்றிய திறப்பு கிடைக்கிறது.
இயற்கை காட்சிகள் மட்டுமல்லாது மேய்ச்சலுக்குப் போகும் ஆட்டு மந்தைகள், குல தேவதை சடங்குகள், கொண்டாட்டங்கள், விருந்துகள், மலை மக்கள் இசை அனைத்தும் துளித் துளியாக வர்ணிக்கப்படுகின்றன. கோவேறு கழுதைகளுக்கு லாடம் அடிக்கும் சுவையான காட்சி தத்ரூபமாக ஒவ்வொருபடியாக விவரிக்கப்படுகிறது. இவையெல்லாம் உன்னதமான சொல்முறையால் ஒரு தரிசனமாகவே கிடைக்கின்றன.
ஓர் இடத்தில் பறவை பற்றிய ஒரு வர்ணனை வருகிறது. அதை சொல்லாமல் மேலே நகரமுடியாது.
’அந்தச் சிறிய மரச்சட்டகத்தை நகக்கால்களால் பற்றியபடி அலகால் கண்ணாடியை தட்டி தட்டி அரைக்கணம் தலை சரித்து யோசித்தது அந்தப் பறவை. வாழ்வின் மாபெரும் மர்மம் ஒன்று அதன் முன் செங்குத்தாக நின்றது. நீர் அல்ல, அசையவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அதில் தோன்றும் வண்ணங்கள். எழுந்து காற்றில் பறந்து இளம் மஞ்சள் வயிற்றைக் காட்டி நின்றபடி தவித்து மீண்டும் வந்தமர்ந்தது. கையில் பாதி அளவே இருக்கும். தலையிலிருந்து மார்புவரை மேல் பாதி செம்பருத்தி சிவப்பு, அது கழுவி சென்றுவிட்டதுபோல தவிட்டு மஞ்சள் கீழ்ப்பகுதி, நெற்றியில் வான் நீலம். கருநீல மணிக்கண்கள். வளைந்த கோணி ஊசி அலகிலிருந்து இருபுற கன்னங்களுக்கும் நீலம் வழிந்திறங்கியது.’
இதுவே கவித்துவ உச்சம் என நினைத்தேன். ஆனால் அடுத்து வந்ததை படித்துவிட்டு புத்தகத்தை மூடிவைத்தேன். மேலே படிக்கத் தோன்றவில்லை. அவன் மலைப்பெண்னை வாசனைகளின் வழியாக உணர்கிறான். அவள் நெற்றி பூமணம் வீசுகிறது. கன்னம் உப்பு மணம் வீசுகிறது. கழுத்தில் நெய் வாசனை; பாதத்தில் புல்வெளி மணம் இப்படியாக அவளுடைய ஒவ்வொரு அங்கத்தையும் ஒரு பெரிய வாசனையின் கூட்டாக அவன் அகம் அள்ளிக்கொண்டே போகிறது. உலகத்தில் எந்த ஒரு நாவலிலும் இப்படியான ஒரு வர்ணனையை நான் கண்டது இல்லை; கேள்விப் பட்டதும் கிடையாது. அந்தப் பதைபதைப்பு ஆறு மட்டும் சிறிது நேரம் புத்தகத்தை மீண்டும் திறக்கவில்லை.
காதலர்களுக்கு சந்தேகம் வருகிறது. அவர்கள் அனுபவித்து வரும் அபூர்வமான புதிய உணர்வெழுச்சி எங்கேயிருந்து உதயமானது? அவர்களுக்கிடையே இருப்பது என்ன என்ற கேள்வி மேலெழுகிறது. ‘தேவி, நமக்கு அன்பு, கோபம், துக்கம் எல்லாம் தாங்கிக் கொள்வதற்கு ஒரு துளி மேலாகவே கொடுக்கிறாள்’ என்று பெரியம்மா சொல்கிறார். மலைப்பெண் ‘நான் எப்போதும் எப்போதும் உன்னுடன் இருப்பேன் அன்பை மட்டும் கொடுத்தபடி’ என்கிறாள். அது போதுமா? ஹரன் மலைச்சிகரங்களில் அலைகிறான். நட்சத்திரங்களை உற்று நோக்கியபடி திறந்த வெளிகளில் தனிமையில் வீழ்ந்து கிடக்கிறான். லல்லேஷ்வரியின் கவிதை வரிகள் அப்பொழுது அவன் நினைவலைகளில் எழுந்திருக்கலாம்.
நாவலின் முன்னுரையில் அஜிதன் சொன்ன ஒரேயொரு வசனத்தைப் படித்தபோது சங்கடமாக இருந்தது. அவர் தான் முதன்மையாக ஒரு திரைப்படக் கலைஞன் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார். இது அவருடைய முதல் நாவல், இனிமேல் இலக்கியப் பக்கத்துக்கு தான் வருவது சாத்தியமில்லை என்றும் கூறியிருந்தார். அப்படி நடக்குமானால் அது பேரிழப்பாக அமையும். தமிழுக்கும், இலக்கியத்துக்கும்.