அமெரிக்கக் குழந்தைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

அமெரிக்காவுக்கான உபதேச மஞ்சரி வாசித்தேன். கொஞ்சம் தற்கேலியாக தொடங்கினாலும் முகத்துக்கு நேரே சொல்லவேண்டிய விஷயங்கள். பலவகையான மாயைகளை உடைக்கும் விஷயங்கள்.

ஒரே ஒரு கேள்வியை நான் கேட்பதுண்டு. கனடா போன்ற நாடுகளில் குடியேறிய இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் மட்டும் ஏன் தமிழ் பேசுகின்றன?

ஏனென்றால் அவர்கள் அகதிகளாக வந்தவர்கள். அவர்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல. ஆகவே வீட்டில் தமிழ் பேசியாகவேண்டிய நிலைமை

இங்கே அமெரிக்க மிடில்கிளாஸ் ஏன் தமிழ் பேசவில்லை என்றால் பெற்றோரே பிள்ளைகளை அமெரிக்க ஆங்கிலத்தில் புகுத்தி தாங்களும் புகுந்துகொள்ள விரும்புவதனால்தான்.

ஜெயலட்சுமி

***

அன்புள்ள ஜெயலட்சுமி

கனடாவில் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் எவருமே தமிழ் பேசுபவர்கள் அல்ல. இயல் விழாவில் ஆங்கிலத்தில் அப்படியே தமிழை எழுதிவைத்து ஆங்கில உச்சரிப்பில், வெள்ளையர்கள் போல தட்டுத்தடுமாறி வாசிப்பார்கள்.

அது ஓர் உலகளாவிய நிலைமை. எல்லா குடியேறிய சமூகங்களும் அப்படித்தான். பிறிதொரு வழியே இல்லை.

ஜெ

***

அன்புள்ள ஜெ

பல பகுதிகளாக நீளும் கட்டுரை. நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. ஆனால் கட்டுரையிலேயே சொல்லிவிட்டீர்கள். 90 சதவீதம்பேரும் படிக்க மாட்டார்கள் என்று. உண்மை. ஆனால் 99.9 சதவீதம்பேரும் படிக்கமாட்டார்கள் என்பது அதைவிட உண்மை. அந்த அளவுக்கு நீளமான, செறிவான ஒரு கட்டுரையை எந்த மொழியிலும் இவர்களால் படிக்க முடியாது.

ஆகவே அதைப்பற்றி எவராவது ஏதாவது பதிவு போடுவார்களா என்று எதிர்பார்ப்பார்கள். அந்தப்பதிவு 200 வார்த்தைக்குள், அக்கப்போர் மொழியில் இருக்கும். அதைப்படித்துவிட்டு முழுக்கட்டுரையையும் படித்தார்போல பாவலா செய்வார்கள். அந்தப் பாவலா உண்மையாக தோன்றவேண்டும் என்றால் கொஞ்சம் ஜாஸ்தியாகவே உணர்ச்சிகளை கொட்டவேண்டும். சீற்றமடையவேண்டும். ஆவேசமாக பேசவேண்டும். அதைச்செய்வார்கள்.

இன்னொருபக்கம் அந்த பதிவை எழுதுபவரே முழுக்கட்டுரையையும் வாசிக்கமாட்டார். வாசித்தாலும் ஒன்றும் புரியாது. அவர் அதிலிருந்து உதிரிவரிகளையே பிடுங்கி எடுப்பார். அதில் தனக்கு பிடிகிடைக்கும் விஷயங்களை கொண்டு ஒரு தரப்பை எடுப்பார். ஆவேசமாக பேசுவார்.

என்ன பேசுவார்கள் என்று சொல்லிவிடுகிறேன். பெரும்பாலும் ‘அமெரிக்க பெற்றோரை இழிவுபடுத்துகிறார்’ ‘அமெரிக்கக் குழந்தைகள் மீது வன்மம்’ ’தமிழர்களை இழிவுசெய்கிறார்’ ‘மேட்டிமைநோக்கை வெளிப்படுத்துகிறார்’ ‘இந்துத்துவ அஜெண்டா’ – இதெல்லாம்தான் கருத்தாக இருக்கும். அதற்கெல்லாம் படிக்கவோ யோசிக்கவோ வேண்டியதில்லை.

தனக்குத்தானே சூனியம் வைப்பதில் நீங்கள் ஒரு நிபுணர். இல்லாவிட்டால் இத்தகைய பெரிய கட்டுரையை எழுதமாட்டீர்கள்

மா.அறிவுடைநம்பி

***

அன்புள்ள அறிவு,

சொல்மாறா பற்றுறுதி என்பது எளிய விஷயம் அல்ல. அது ஒரு யோக நிலை

ஜெ

***

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமைத்ரி – அ.முத்துலிங்கம்