அன்புள்ள ஜெ,
உங்களைத் தேடி தேடி படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகி நான். “அறம்” மூலமே உங்களின் அறிமுகம்.அதிலிருந்து மீள்வதற்கு இரண்டு நாட்கள் ஆனது. பின் சோற்றுக்கணக்கு. அடடா!! என்ன செய்வதென்றே தெரியவில்லை. சாப்பாடு பரிமாறும் போது என் கைகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்கத் துவங்கிவிட்டேன். சில வாரங்களுக்கு நீடித்தது கெத்தேல் சாகிப்பின் தாக்கம்.
அதற்குப்பின் தான் அறிமுகமானார் டாக்டர்.கே. இரண்டு வருடங்களுக்கு மேலாக இன்னமும் அவர் நினைவில் வராத நாள் இல்லை. யானை டாக்டரைப் பற்றி நான் பேசாத ஆளில்லை. என் நட்பு வட்டம், என் கல்லூரி மாணவிகள், குடும்பத்தினர் அனைவரிடமும் சொல்லி சொல்லி என் ஆவல் தீரவே இல்லை.
ஆனால் பள்ளியில் துணைப் பாடமாக உள்ள யானை டாக்டர் பத்தோடு பதினொன்றாக மட்டுமே நடத்தப்படுவது மிகுந்த வேதனைக்குரியது.நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை டாப்சிலிப் செல்வதுண்டு. யானை டாக்டர் படித்த பிறகு டாப்சிலிப் பயணத்திற்காக காத்திருந்தேன்.
அந்நாளும் வந்தது.யானை டாக்டரைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள போகிறோம் என்ற ஆவலோடு சென்றேன். ஆனால் அவரது நினைவுப் புகைப்படங்கள் அனைத்தும் இப்பொழுது ஒன்று கூட காட்சிப்படுத்தப்படவில்லை. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறியவை ” உங்களைப் போல பலர் வந்து யானை டாக்டரைப் பற்றி கேட்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தை புனரமைத்த போது பழைய புகைப்படங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு விட்டது.இப்போது யானை டாக்டரைப் பற்றிய எந்த ஒரு விபரமும் அங்கே இல்லை. மிகுந்த ஏமாற்றத்தோடு அறைக்கு திரும்பினோம்.
பின் யானைத்தாவாளத்திற்கு சென்ற போது அங்கே இருப்பதிலேயே முதிய பாகன் ஒருவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு யானை டாக்டரைப் பற்றி தெரிந்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை புத்தகம் என்றாலே அது பைபிள் மட்டுமே. அந்த பெரியவர் கேட்டது “யானை டாக்டரைப் பற்றி பைபிளில் எழுதியிருக்கா?அதப் படிச்சுட்டு வந்து தான் விசாரிக்கிறீர்களா” என்று.
அவர் நிஜமாகவே டாக்டர் கே வை பற்றி தான் சொல்கிறாரா? என நிச்சயமாக கூற முடியாவிட்டாலும் ஏதோ ஒரு மகிழ்ச்சி ஒரு ஆறுதல் எங்களுக்கு. நிச்சயமாக யானை டாக்டர் பலர் உள்ளங்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி .
தமிழ் விக்கியில் டாக்டர் கே பற்றி மேலும்அறிந்து கொள்ள ஆவலோடு எதிர்பார்க்கும் காத்திருக்கும் உங்கள் வாசகி
– பாபி முருகேசன்.
உத்தமபாளையம்
தேனி மாவட்டம்.
*
அன்புள்ள பாபி
டாப் ஸ்லிப்பில் இருந்த காட்டிலாகா அதிகாரி ஒருவரின் முயற்சியால் டாக்டர் கே இருந்த இல்லம் அவருடைய நினைவகமாக ஆக்கப்பட்டது. அவர் சென்றதுமே அடுத்துவந்தவர் எல்லாவற்றையும் தூக்கிவீசிவிட்டார் என்று அறிந்தேன். அந்த நினைவகத்தை அமைத்தவர் அபூர்வமானவர். தூக்கிவீசியவர்கள்தான் நம்மில் பெரும்பான்மையினர்.
ஆனால் இக்கதை அவரை வரலாற்றில் நிறுத்தும். கல்விநிலையங்களில் பெயர் கேள்விப்படுபவர்கள் அவரை பின்னர் வாசித்து அறிந்துகொள்வார்கள்.
அன்புடன்
ஜெ